கார்த்திகா கவிதைஅவர்களின் பாதைகள்
அடைக்கப் பட்டிருந்தன…

அவர்களின் குரல்கள்
நசுக்கப் பட்டிருந்தன…

அவர்களின் முகங்கள்
திரையிடப் பட்டிருந்தன…

அவர்களின் இரைப்பைக்குள்
தண்ணீர் மட்டுமே
நிரம்பியிருந்தது…

இருந்த போதும்,

சிட்டுக் குருவிகளுக்கு
சிறுதானியம் இறைத்துக் கொண்டிருந்தார் ஒருவர்…

அடிக்கிற குளிருக்கு
நட்டு வைத்த
நாற்றுக்கு என்னாகுமோ
என
நடுங்கிக் கொண்டிருந்தார்
ஒருவர்…

சிதறிக் கிடந்த
இன்சுலின் ஊசிகளை
சேர்த்து குப்பைத் தொட்டியில்
குவித்துக் கொண்டிருந்தார்
ஒருவர்…

இடக்கையில்
இறுகப் பற்றிய
மூத்திரப்பை
கணக்கையிலும்.,

வலக்கை உயர்த்தி பெருங்குரலெடுக்கிறார்
ஒருவர்…

ஒற்றுமை ஓங்கட்டும்

அவரின் நம்பிக்கை நிறை
விரல் வழியே
வழியத் தொடங்குகிறது…

உலக உருண்டைக்கான
உணவு உருண்டைகள்…

– கார்த்திகா.