கார்த்திகா கவிதைநள்ளிரவில் விழித்துக் கொண்ட அதன்
கையில் மந்திரக்கோல் இருந்தது…

நிலவொளி வெளிச்சத்தில்
பால்வெள்ளை நிறத்தினில்
தெரிந்த அதன் கரங்கள்
பிடித்திருந்த கோலை
சுழற்றத் தொடங்கியதும்.,

வடிந்த கொண்டிருந்த
கண்ணீர்த் துளிகளின்
ஈரம் காயத் தொடங்கியது…

காயங்களின் மீது
அடர்களிம்புகள்
பூசத் தொடங்கின…

வருத்தங்களின் சுவடுகள்
மீது வசந்தங்களின் பூக்கள்
நிறையத் தொடங்கின…

சில புன்னகைகளை…
சில பூங்கொத்துகளை…
சில கைகுலுக்கல்களை…
சில முத்தங்களை…
சில நம்பிக்கைகளை…
சில சுவாசங்களை…

என
ஏதோவொன்றை
பரிமாறத் தொடங்கியிருந்தது உலகம்.

நாட்கள் நகர்ந்தால்
என்ன?

கோள்கள் சுழன்றால்
என்ன?

அடிநெஞ்சில்
அமிழ்ந்திருக்கும்
அன்பையும் ,

சில நம்பிக்கைகளையும்
வெளிக் கொண்டு வந்த
காலத்தின் சிறுநுனிக்கு
புத்தாண்டு என்று பெயர் வைக்கத் தொடங்கியது
ஞாலம்…

நான்மட்டும்
அச் சிறுபுள்ளியை
தேவதையின் சிறகுகள் என்றே
நாட்குறிப்பில்
குறித்துக் கொண்டேன்.

– கார்த்திகா