*புகை* – *கார்த்திகா*கையில் பிடித்திருக்கும்
கணேஷ் பீடியை
அப்படியே வாய்க்குள் திருப்பி தீக்கங்கோடு வெளியே எடுக்கையில்
ஒரு  நடிகரின்
பெயர் சொல்கையில்
அப்படியே சிலாகித்துப் போவார் அப்பா…

சுருள் சுருளாய்
வெளிவரும்
புகை .,
நீள்வட்டமாகிப் பின் காற்றில் கரைகையில்
வானத்தில் பறப்பதாய்
நினைத்துக் கொள்வார்…

வேண்டாமென அம்மா சொல்லும்போதெல்லாம்
அதெல்லாம் நீ சொல்லாத ணு
அதட்டிய அப்பாவின் சட்டைப்பையில்
முன்வாயில் வைக்கும் புகையிலை
பின்னொரு நாளில் இருந்தது…

அலுப்பு தீர இது
அவசியம் என்றவரின்
அன்றாடம் பழக்கமாக
அது மாறியிருந்த
ஒரு வருடத்தில்
தொண்டையில்
ஏதோ வலி என்றார்…

அழைத்துப் போன
பெரியாஸ்பத்திரியில்…
நோவும் பெருசுதான்
என்றார்கள்…

பட்டணத்துக்கு அழைச்சிட்டுப் போன அம்மா பத்தாமப் போன
பணத்துக்காக பத்திரத்தத் தான் வச்சா.,
பின் வீட்டிலிருந்த
பாத்திரத்தையும் சேர்த்து…

வச்ச பத்திரம் வாங்க
வழியில்லாம அப்படியே
முழுகிப் போச்சு.,
அப்படியே சேர்ந்து
முழுகிப் போனார்
அப்பாவும்…

இப்ப இருக்கிற
வாடகைவீட்டுல
அப்பா படத்துக்கு
விளக்கேத்தி
மாலை போடற அம்மா
என்ன நினைச்சாளோ
தெரியல
ஒரு தடவகூட பத்தி மட்டும் பத்தவைக்கிறதேயில்ல…

*கார்த்திகா*