புதைக்க இடமில்லாததால்
புதைகுழிகளாய்
மாறுகின்றன
பூங்காக்கள்…
பற்றாக்குறை விறகுகளால்
அடுத்து வரும்
சடலங்களுக்கு
விறகாகிறது
முந்தைய பிரேதம்…
அவசர, அவசரமாய்
திறக்கப்படுகின்றன
மூடிய தொழிற்சாலைக் கதவுகள் உயிர்வளிக்காய்…
உயிரறுக்கும் காலனின்
கயிறறுக்க உயிரையும்
பணயம் வைக்கிறார்கள்
மனிதக் கடவுள்கள்…
எல்லாம் தெரிந்தும்
நொறுக்குத் தீனியை
மென்றபடி,
அரசைக் குறைகூறி,
சிக்ஸருக்கு கைதட்டி,
சூப்பரோவரி்ல்
மெய்சிலிர்த்து,
முகத்திரையின்றி
தெரு நுழைபவர்களின்
செவிகளுக்கு கேட்பதேயில்லை…
அவர்களின்
சுவாசப்பை
அறுந்துவிழும் ஓசை.
– காங்கேயம் கார்த்திகா.

