கருக்கு: ஒடுக்குமுறைக்கு எதிரான ஆயுதம் | நூல் அறிமுகம் – மிர்துளா, இந்திய மாணவர் சங்கம்

கருக்கு எனும் இந்நூல் ஓர் சுயசரிதை நாவல் தான். சுயசரிதை என்பது ஒரு தனிநபரின் வரலாறு என்றே நாம் அறிகிறோம். ஆனால் இங்கோ சுயசரிதை என்பது ஒரு தனிநபரின் வரலாறாக இல்லாமல் அது ஒரு சமூகத்தினுடைய வரலாறாக இருக்கிறது.
அனைத்தும் சாதியின் அடையாளமாக
 விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு அருகில் உள்ள  புதுப்பட்டி என்னும் கிராமத்தில் 1958 மார்ச் 14 அன்று நூலின் ஆசிரியர் பாமா பிறந்தார். பாஸ்டீனா மேரீ பாத்திமா ராணி என்பது இவரது இயற்பெயர். இவரது கிராமத்தில் பெரும்பான்மையான நிலங்கள் நாயக்கர் சாதியினரின் கைகளில் குவிந்திருந்தது.
நடக்கும் தெரு முதல் புதைக்கும் சுடுகாடு வரை அனைத்தும் சாதிய அடையாளங்களை சுமந்து கொண்டிருக்கும் கிராமத்தில் ஒவ்வொரு தெருவுக்கும் ஒவ்வொரு சாதிப்பெயர். இதில் நாடார், கொசவர், பள்ளர், பறையர் தெருக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதியாகவும்(காலனி), தேவர், செட்டியார், ஆசாரி, நாயக்கர் தெருக்கள் ஆதிக்க சாநியை சேர்ந்தவர்கள் வாழும் பகுதியாகவும் ஊர் இரண்டாக பிளவுபட்டு இருக்கும்.
ஸ்கூல், ரேஷன் கடை, பஸ் ஸ்டாண்ட்,போஸ்ட் ஆபீஸ், ரைஸ்மில் என அனைத்தும் ஆதிக்க சாதி மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் அமைந்திருப்பதால் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களின் எல்லா தேவைகளுக்கும் உயர் சாதியினரை சார்ந்து இருக்கவேண்டிய நிலை உருவாகியிருந்தது.
 பாமாவும் அவரது குடும்பமும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள். ஆதலால் காலம் காலமாக அவர்களின் முன்னோர்கள் காலம்தொட்டு அனைவரும் ஆதிக்க சாதியினரின் நிலங்களில் விவசாயக் கூலிகளாக வேலை செய்துவந்தனர். தந்தை சூசைராஜ் இந்திய ராணுவத்தில் பணியாற்றுபவர். தாய் செபஸ்தியம்மா தங்களது முன்னோர்களைப் போலவே விவசாயக் கூலியாக வேலை செய்தார். தந்தையால் பணம் அனுப்ப முடியாத சூழல் ஏற்படும்போது தாய் செபஸ்தியம்மாளே குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை கவனித்துக் கொள்வாள்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் கூலியில் பாகுபாடு காட்டுகிறவர்கள் வேலையில் ஆண் பெண் என எந்த பாகுபாடுகளையும் காட்டுவதில்லை. மாடாக உழைத்து ஓடாக தேய்ந்தாலும் அதற்கு  கிடைக்கும் கூலி என்பது மிக மிக சொற்பமான அளவே. அது மூன்று வேளை சோற்றுக்கு கூட போதாது. வயிற்றுக்கான போராட்டமே இங்கு பெரும் போராட்டமாக பாமாவிற்கு மட்டுமல்ல ஒரு சமுதாய மக்களுக்கே இருக்கிறது.
நீங்கா வடுக்கள்
பள்ளிக் கல்லூரி பருவ நினைவுகளை நாம் எப்போது அசை போட்டாலும் பசும்புல் மேல் படர்ந்திருக்கும் பனித்துளிகளை போல அவை மிக இனிமையான ஒன்றாக இருக்கும். ஆனால் பாமாவுக்கோ அந்த நினைவுகளும் வடுக்களைப் போல, நீங்கா காயங்களாக மாறிப்போகிறது.
பள்ளிக்கூடத்தில் நண்பர்கள் அனைவரும் விளையாடிக் கொண்டிருக்கும் போது பள்ளி மரத்திலிருந்து விழுந்த தேங்காய்க்கு தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக குற்றவாளி ஆக்கப்படுவதும்,  பேருந்தில் பயணச்சீட்டு எடுத்தாகிவிட்டதா என்ற கேள்வியை விட, தெருவின் பெயரே அதிகமாகக் கேட்கப்படும்போதும், கல்லூரியில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களாக இருந்தாலும் தாழ்த்தப்பட்ட சாதி என்பதால் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்க நிர்பந்திப்பது போன்று அப்போது ஏற்பட்ட காயங்களால் ஏற்பட்ட வடுக்களை அவரது நினைவுகள் காட்சிப்படுத்துகிறது.
விடுதலைக்கான பாதை
இது 21ஆம் நூற்றாண்டு, அறிவியலில் நாம் எவ்வளவோ வளர்ச்சிகளை கண்டிருக்கிறோம். ஆனால் இன்றும் சாதிய மனநிலையை தூக்கியெறிய முடியாத சாக்கடைகளாகதான் இருக்கிறோம். சமீபத்தில் அம்ரோஹா மாவட்டம், உத்தர் பிரதேஷ் மாநிலத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த சிறுவன் கோயிலுக்குள் சென்றதற்காக கொலை செய்யப்பட்டிறுக்கிறார். இப்படி ஆலயங்களுக்குள் நுழைவதற்கு மட்டுமல்ல கல்வி, வேலைவாய்ப்பு என தங்களின் அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்குக் கூடப் பெரும் போராட்டத்தையே நிகழ்த்த வேண்டியிருக்கிறது.
பாமா கருக்கை ஓர் இலக்கிய படைப்பாக எழுதவில்லை. கான்வென்ட்டை விட்டு வெளியேற முடிவு செய்தபோது தனது மனச்சுமையை குறைக்க நண்பர் வழங்கிய ஆலோசனையின் பெயரில் எழுதியது. “கருக்கு” என்றால் ‘பனை ஓலை’ என்று பொருள். பனை ஓலையின் இருபுறமும் ரம்பம் போல காட்சியளிக்கும். கடும் ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கு ஆளான மக்கள் தங்களின் மீது உள்ள ஆதிக்கத்தை ரம்பம் போல அறுத்தெறிந்து, விடுதலை பாதையை நோக்கி நடைபோட எண்ணி இந்நாவலுக்கு “கருக்கு” என பெயரிடப்பட்டுள்ளது. இந்நாவல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது. இவரது கதைகள் இன்று நாடக வடிவமாகவும் உலகெங்கிலும் உள்ள பல கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இலக்கிய பாடத்திட்டத்திலும் உள்ளது. இவரது எழுத்து தமிழ் இலக்கிய உலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நூல் முதன்முதலில்1992ல் வெளியாகியிருந்தாலும் 28 வருடங்கள் கடந்த பின்பும் “கருக்கு” அதன் தேவையும் உயிர்ப்புடன் இருக்கின்றது.
புத்தகம்       :  கருக்கு 
எழுத்தாளர் : பாமா
பதிப்பகம்    : பாரதி புத்தகாலயம்
விலை          : ₹35 -/-