கருணை வள்ளல் – கவிதை
சாதியும் மதமும் சமயமும் போக்கிட
சன்மார்க்க சங்கம் கண்டார்!-வள்ளலார்
ஆதியில் தனக்கு அருட்பெருஞ் சோதி
ஆண்டவர் உரைத்ததாய் விண்டார்!
வீதியில் பசியும் நோயும் கொண்டவர்
வேதனை கண்டே துடித்தார்!-வள்ளலார்
சோதியுள் உயிரின் பசியைப் போக்கிட
சோறிடும் சாலை வடித்தார்!
மூடப் பழக்கம் மூட்டிடும் தீயென
முற்றாய் ஒழித்திட முயன்றார்!-அதை
ஓடச் செய்திட ஓதிய அருட்பா
ஓங்கிட மக்கள் பயின்றார்!
ஓரறி வுயிர்முதல் ஆறறி வுயிர்வரை
ஒன்றாய்க் கருணை கொண்டார்!-அதன்
வேராய் மந்திரம் தனிப்பெருங் கருணை
வென்றிட நேயம் கண்டார்!
இறந்தவர் உடலைப் புதைத்திடச் சொல்லி
இயற்கைச் சூழல் காட்டினார்!-வள்ளலார்
மறைந்தவர் மனைவி தாலியைத் துறக்கா
மாற்றிய சிந்தனை ஊட்டினார்!
வேதம் ஆகமம் காப்பியப் புராணம்
வெறுத்தே வாழ்வில் ஒதுக்கினார்!-அவை
சூதாய்ப் பற்பல செய்திகள் சொன்னதால்
சூழ்ச்சி என்றதை ஒதுக்கினார்!
எழுதியவர் :
கோவி.பால.முருகு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.