நூலறிமுகம்: கறுப்பர் நகரம் நாவல் – தேனி சுந்தர்

நூலறிமுகம்: கறுப்பர் நகரம் நாவல் – தேனி சுந்தர்



நூல்: கறுப்பர் நகரம் 
ஆசிரியர்: கரன் கார்க்கி
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
புத்தகம் வாங்க கிளிக் செய்க: https://thamizhbooks.com/product/karuppar-nagaram-2331/

இரட்டை ஆயுள் தண்டனை முடிந்து மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிறையின் கதவுகள் திறக்க, விடுதலையாகி வரும் செங்கேணி தான் கதையின் நாயகன். காணும் எல்லாமே மாற்றமடைந்து இருக்கின்றன..

புதிய புதிய கட்டிடங்கள்.. அதுவும் பெரிது பெரிதாக.. ஒவ்வொரு இடங்களைப் பார்க்கும் போதும் செங்கேணியின் நினைவுகள் முன்னும் பின்னுமாக அலைமோதுகின்றன. அனைத்தையும் பார்த்துக் கொண்டே நடக்கிறார்.. நடக்கிறார்.. திக்குமில்லை திசையுமில்லை.. போய்ச்சேர இலக்குமில்லை.. தெரிந்த முகம் எதுவுமில்லை. சிறையில் உடனிருந்து ஏற்கனவே விடுதலையான ஒருவன் மட்டும் இவரை அடையாளம் கண்டு ரோட்டோரமாக தங்க, தூங்க ஒரு இடம் பிடித்து கொடுக்கிறான்.. நானும் அனாதை, நீயும் அனாதை.. என் கூடவே இருந்துடு மாமான்னு சொல்லிப் பார்க்கிறான்.. செங்கேணி கேட்கவில்லை.. விடிந்ததும் எழுந்து நடக்கிறார்.

தான் வாழ்ந்த பகுதியைத் தேடிப் போகிறார்.. குடிசைகள் இருந்த இடங்கள் முழுவதும் குப்பை மேடுகள்.. குப்பை மேடுகளில் ஏறி ஏறித் தேடுகிறார்.. அவர் முன்பு வாழ்ந்த குடிசையின் அருகில் ஓயாமல் அலறிக்கொண்டிருந்த மின்நிலையம் பாழடைந்து கிடைப்பது தெரிகிறது.. அங்கிருந்து விரிகிறது செங்கேணியின் துயரமிகு கதை..

நரியங்காடு என்னும் குடிசைப்பகுதியில் குடும்பம் ஏதுமற்று தனி மனிதனாக வாழ்ந்து வரும் செங்கேணிக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஆராயிக்கும் குழாய்த் தண்ணீர் பிடிக்கப் போகுமிடத்தில் கிடைத்த அறிமுகம் காதலாக மலர்கிறது. இலைமறைவு தலைமறைவாக இருந்த காதல் வீட்டாருக்கு தெரிய வருகிறது. ஆராயி அக்கா செல்வியின் கணவன் கணேசன், குடிகாரன். ஆராயியை விட்டு வெளுத்து விடுகிறான். தனது முடிவை அக்காவிடம் சொல்கிறாள் ஆராயி.. அப்பன் ஆத்தா இல்லாத நமக்கு இப்படி தான் வாழ்க்கை அமையணும்னு தலைவிதி.. நல்லபடியா பொழச்சுக்கோன்னு புருசனுக்கு தெரியாமல் அனுப்பி வைக்கிறாள் செல்வி..

இதையடுத்து செங்கேணியும் ஆராயியும் முனியம்மா அக்காவின் உதவியுடன் ஓடிப்போயி கல்யாணம் செய்து கொண்டு ஓராண்டு காலம் அளவற்ற அன்போடு மகிழ்வான வாழ்க்கை வாழ்ந்த இடம் தான் புது ஜெகநாதபுரம்.. இது கொஞ்சம் மேடான குடிசைப் பகுதி.. குப்பைமேடுன்னு தான் பேரும், அவர்கள் வாழ்ந்த அந்த இடம் தான் இப்போது உண்மையிலேயே மாநகராட்சியின் குப்பை மேடாக மாறி, அதன் மேல் தான் செங்கேணி இப்போது ஏறி நின்று தான் தொலைத்த வாழ்க்கையினைத் தேடிக் கொண்டிருக்கிறார்.

எழுத்தாளர் கரன்கார்க்கியின் ...

செங்கேணியின் குடிசை அருகில் இருக்கும் தபால் துறை ஊழியர் பாளையம். அவரும் அவரது நண்பர்களான வேலு, மருது ஆகியோரும் ஒவ்வொரு நாள் மாலையிலும் வீட்டு வாசலில் அமர்ந்து நடப்பு அரசியல் குறித்தும், பெரியார், அம்பேத்கரிய சிந்தனைகள் குறித்தும் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள். நாளெல்லாம் அலறும் இந்த மின் நிலையத்தில் உடல் முழுவதும் கரியும் சாம்பலும் அப்பி பேசும் போதும் கண் இமைக்கும் போதும் மட்டுமே அவர்கள் உயிரோடு வாழும் மனிதர்கள் என்று அறியும் வண்ணம் இரவும் பகலும் உழைத்து இந்த நகரத்துக்கே மின்சார ஒளி கொடுக்கும் நம்ம சேரி மக்களின் வீடுகளிலும் தெருக்களிலும் ஒரு நாளும் ஒரு பல்பும் எரிந்தது கிடையாது.

சரியான கல்வி கிடையாது, வேலை கிடையாது. ஊரையே கூட்டிப் பெருக்கும் மக்களோட தெருவும் குப்பையாத்தான் கிடக்கும் என்பதில் இருந்து பல்வேறு விசயங்கள் குறித்து விவாதிக்கும் களமாக பாளையம் வீடு விளங்குகிறது. ஆமா, மேலபோட்ட கூரை ஒழுகுது சரிபண்ணுயான்னா நீ விடிய விடிய உதாரணம் சொல்லிகிட்டு தான் உக்கார்ந்திருப்பன்னு திட்டிக்கிட்டே இருந்தாலும் வந்தவர்கள் கொரித்துக் கொண்டே பேச எதையாவது ஒவ்வொரு நாளும் செய்து கொடுப்பாள் பாளையத்தின் மனைவி செந்தாமரை.

பாளையத்தின் அப்பா வெள்ளத்தப்பு, அண்ணன் சின்னத் தப்பு குறித்த பதிவுகள் கலங்கச் செய்பவை. வெள்ளத்தப்பு (ஆளு கொஞ்சம் சிவப்பு.. தப்படிக்கிறதுனால இரண்டையும் சேர்த்து வெள்ளத்தப்பு)அந்த ஏரியாவுலேயே பேர்போன பறையடிப்பவர். சின்னமண்ணூர் இழவுக்கு பறையடிக்கப் போவார். வழக்கம்போல இழவு வீட்டில் குடிகாரன் ஒருவன் ”வெள்ள, நீ அடிக்கிற அடில பொணமே எந்திருச்சு ஆடணும்டா” என்பான். பறையடிக்கிற நாயி எப்படிடா வெள்ளன்னு பேரு வைக்கலாம்னு மார்பில் உதைத்து தள்ளி விடுகிறான் ஆண்டை.. (வெள்ளச்சிங்கிறது செத்துக்கிடக்கிற, அந்த ஆண்டையின் பொண்டாட்டி பேரு) போதையில் இருக்கும் வெள்ளத்தப்புவும் பொண்டாட்டியை கட்டுப்பாடாக வைத்து பொழைக்கத் தெரியாம அவள கொண்ணுபுட்டு எங்கிட்ட காட்றியாடா உன் வீரத்தை..

வாடா ஒத்தைக்கு ஒத்தைன்னு கூப்பிட, சின்னத்தப்பு தடுத்துப் பார்ப்பான் முடியாது. ஆயாவக் கூப்பிட வீட்டுக்கு ஓடிடுவான். மரத்தில் கட்டி வைத்து அடித்து, இரண்டு நாட்கள் கழித்து நாய் கடித்த பிணமாகத் தான் வெள்ளத்தப்பு தூக்கிவரப்படுகிறான். சின்னத்தப்பு அப்போது முடிவெடுப்பான், இனி எந்தப்பய இழவு வீட்டுக்கும் பறையடிப்பதில்லை என்று தன் தகப்பனின் சிதையோடு தன் பறையையும் சேர்த்து எரித்து விடுவான்.

வெள்ளத் தப்புவின் சின்ன மகன் பாளையம் கல்வி கற்று மத்திய அரசு ஊழியனாக சென்னையில் வாழ்கிறார். தன் அண்ணன் சின்னத் தப்புவுக்கு மீண்டும் பதினைந்து வருடங்கள் கழித்து இழவு வீட்டில் பறைடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துவதால் பிரச்சனையாகிறது. கல்வி கற்ற பாளையம் தன் சகாக்களோடு, வழக்கறிஞர் சகிதம் சென்று தலையிடுகிறார். எடுத்தெறிந்து பேசிக் கொண்டிருந்த காவலதிகாரி அயோத்திதாசர் பேரவைன்னு சங்கத்தின் பெயரைக் கேட்டதும் கொஞ்சம் ஜகா வாங்குகிறார். வழக்கு நடத்தி அண்ணனை மீட்டு தன் சொந்த ஊரில் அயோத்தி தாசர் விடுதலை இயக்கம்னு சங்க அலுவலகம் தொடங்கி போர்டு வைக்கிறார்கள். போர்டில் இரண்டு குறிப்புகளோடு. பறையடிப்பதை சமூகக்கடமை, இலவச சேவைன்னு கூப்பிடுவது சட்டப்படி குற்றம், இது முதல் குறிப்பு. அப்படி கட்டாயம் பறையடிக்க வர வேண்டும் என்றால் அரை மூட்டை நெல்லும் நாற்பது ரூபாய் பணமும் கொடுக்க வேண்டும், இது இரண்டாவது குறிப்பு. வைத்துவிட்டு கம்பீரமாகச் சென்னை திரும்புகின்றனர் தோழர்கள்.

Madras history | Karan Karki speech | karupar nagaram | Che ...

இங்கே புது ஜெகநாதபுரத்திலும் சங்கம் வைத்து இரவுப்பள்ளி தொடங்கி இளைஞர்களைக் கொண்டு தலித் குழந்தைகளுக்கு பாடங்கள் நடத்த ஏற்பாடு செய்கிறார். பாளையத்தின் உரையாடல்களைக் கண்டு, நாம இப்படி வண்டி இழுக்க, சாப்பிட, தூங்கன்னு வெளி உலகமே தெரியாமல் ஒரு வாழ்க்கை வாழ்கிறோமே என வருந்தி, குழந்தைகளோடு செங்கேணியும் பாடம் படிக்கத் தொடங்கிடுவான்..

ஆ.. ரா.. யி.. ஆராயி. செ..ங்..கே..ணி.. செங்கேணி.. அ..ம்..மா.. அம்மா என ரேகை வச்ச விரல்களுக்கு ரெக்க முளச்ச மாதிரி உற்சாகத்தில் மிதப்பான்.. மெட்ராஸ் பாஷை எப்படி உருவானதென்று பாளையம் விளக்குவது அருமை. என்னதான் உழைத்தாலும் கைக்கும் வாய்க்கும் பத்தாத பொழப்பு தான் தலித் மக்களுக்கு!!

பல்லாண்டு காலமாக தன்னுள் தேக்கி வைத்த சோகத்தை தன் ஆராயியிடம் சொல்லி நம்மையும் கலங்க வைப்பதாக இருக்கிறது செங்கேணி அம்மா பானுவின் வாழ்க்கை.. அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் செங்கேணியின் அப்பா சிவப்புக் கொடிக்காரர்களுடன் சேர்ந்து சேரி முக்கில் கொடிக்கம்பம் நட்ட நாலாவது நாள் நுரைநுரையாகக் கக்கி, செத்துக் கிடந்ததாகத் தூக்கி வருகிறார்கள். இந்த சேப்புக் கொடியே நம்ம சாமிக்கு ஆகாதுப்பா.. அதான் சேப்புக் கொடிக்காரன் ஒவ்வொருத்தனா ஆத்தா அடிக்கிறாங்கிறார் பெரிய ஆண்டை. கணவன் இல்லாமல் தன் மகனுக்காகவே வாழும் செங்கேணியின் அம்மாவை சின்ன ஆண்டை சீண்டுகிறான். ஒரு கட்டத்திற்கு மேல் அவனையும் மாய்த்து தன்னையும் மாய்த்துக் கொள்கிறாள் பானு.

ஆராயியின் அக்கா செல்வி, மாமா கணேசன் இருவரும் செங்கேணி வீட்டுக்கு வந்து தங்கிச் செல்லும் அளவுக்கு இணக்கமாகி விட்டார்கள்.. செல்விக்கு பெண் குழந்தை பிறந்த பிறகு குடியும் குறைந்து போகும். செங்கேணி மீதும் கணேசனின் கோபமும் குறைந்து போகும்.. வேலை பார்க்கும் கம்பெனியில் நடக்கும் ஒரு விபத்து செங்கேணியின் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது.. அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் போது, பரவாயில்லை எப்படியாவது இரண்டு பேரும் நல்லபடியாக வாழணும் என்று நாமும் நினைத்துக் கொண்டே அடுத்தடுத்த பக்கங்களைப் புரட்டுகிறோம்…

பல பெண்களோடு தொடர்பு வைத்துக்கொண்டிருக்கும் கறிக்கடை மீசைக்காரர், செங்கேணியின் குடிசை அருகில் சாராயம் விற்கும் பேய்க்காளி, லாரி ஓட்டப் போய் ஒருவருடம் கழித்து இன்னொரு பொண்டாட்டியுடன் திரும்ப வந்து செங்கேணி குடிசைக்குப் பக்கத்திலேயே குடியேறும் சிவா எனப் பலரும் அடுத்தடுத்து கதையில் வருகிறார்கள்.. ஆராயிக்கு யாரால், எப்போது, என்ன துன்பம் வரப்போகிறதோ, இரட்டை ஆயுள் தண்டனை பெறும் அளவுக்கு செங்கேணி யார் யாரைக் கொன்று விட்டு சிறைக்குப் போனானோ என்ற பதைபதைப்புடன் கடைசி அத்தியாயங்களை வாசிக்கும் போது நம்மை அறியாமலேயே நமது உடல் கொஞ்சம் வியர்த்துத் தான் போகிறது..
யுவகிருஷ்ணா: கறுப்பர் நகரம்

 

யாரும் எதிர்பாராத விதமாக கதை முடிகிறது. புத்தகத்தைக் கீழே வைக்கவும் மனமின்றி செங்கேணி – ஆராயியின் வாழ்க்கை நாமும் பார்த்துக் கொண்டிருக்க இப்படி முடிந்து போனதே என்று துக்கம் துண்டை அடைக்க, கண்ணில் நீரோடும் கனத்த இதயத்தோடும் கொஞ்ச நேரமாவது பேச்சற்று நிற்க வைத்து விடுகிறார் இந்நாவலாசிரியர் கரன் கார்க்கி. பாரதி புத்தகாலயம் வெளியீடு.

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/karuppar-nagaram-2331/

– தேனி சுந்தர்

 



Show 1 Comment

1 Comment

  1. அசோக்குமார்.பா

    நல்லதோர் நூல் அறிமுகம். படிக்கத் தூண்டும் வண்ணம் அமைந்த எழுத்து நடை. வாசிக்க முயல்வோம். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *