நூல் அறிமுகம்: கறுப்பர் நகரம் – கு.காந்திநூல்: கறுப்பர் நகரம் 
ஆசிரியர்: கரன் கார்க்கி
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
புத்தகம் வாங்க கிளிக் செய்க: https://thamizhbooks.com/product/karuppar-nagaram-2331/

கொரானா ஊரடங்கு படிப்படியாக நீக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. தமிழகம். முகக் கவசம் அணிந்து வாய் மூடி உயிரை பாதுகாக்க நினைக்கும் மனித சமூகம், சமானிய மக்களின் வாழ்க்கை’ வாழ்வதற்கான அவர்களின் போராட்டங்கள், அவஸ்தைகளையெல்லாம் பல ஆண்டுகளாக முகக் கவசம் அணிந்து கண்டும் காணாமலும் கடந்து சென்று கொண்டிருக்கிறது தமிழ்ச் சமூகம்.கொரனா ஏற்படுத்திய தாக்கத்தை விட கறுப்பர் நகரம் வாசித்த போது ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இன்னமும் மீள முடியவில்லை. 70களில் சென்னை சேரி வாழ் மக்களை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார் கரன் கார்க்கி. சேகரிக்குள் நடக்கின்ற அரசியல் பொருளாதர மாற்றங்கள் அதனை மாற்றத்துடிக்கும் இளைஞர்களின் கருத்துச் சிந்தனைகள் இவற்றை உள்ளடக்கி ஒரு சராசரி இளைஞனின் வாழ்க்கை பின்புலத்தை மையமாக எழுத்தப்பட்ட காவியமாக இந்த நாவலை பார்க்க முடிகிறது. நாவலின் தொடக்க முதலே பல்வேறு கேள்விகளை எழுப்பிக் கொண்டே வருகிறது. 14 ஆண்டுகள் ஜெயில் இருந்து வெளியேறும் ஒருவர் தன் வாழ்விடத்தை தான் ஓடி விளையாண்ட, காதலியுடன் பேசி திரிந்த இடங்கள் இன்று நகர மயமாகி போனது. நாகரிகம் என்ற போர்வையில் அன்றாடம் உழைக்கின்ற சனங்களை நகருக்கு வெளிப்புறத்தில் துரத்தி விடுவது இன்றளவும் நடைபெறுகிறது. ஆத்தாளும் அப்பனும் இல்லாத ஒருத்தி அக்கா வீட்டில் வாழ்வது என்பது எவ்வளவு சிரமானது என்பதை ஆராயி கதைப் பாத்திரம் அருமையாக படம் பிடிக்கிறது. நாவலில் வரும் கதாநாயகனாக செங்கோணி வருகிறான். ஆராயின் மாமனை எதிர்த்து திருமணம் முடித்து வேறொரு சேரிப் பகுதிக்கு சென்று விடுகிறார்கள்.

ஆராயியை பார்த்து ஒனக்கு இராவணன் மாதிரி புருசன் அமையட்டும் என வாழ்த்த, அக்கா என்னக்க இப்புடி சொல்லிட்டே எல்லாரும் இராமன் மாதிரி புருசன் அமையனும்னு சொல்வாங்க நீங்க இராவணன்னு சொல்றீங்க என்றதும் போடி பையத்திய காரி நானும் அப்படித்தான் நெனச்சுக்கிட்டு இருந்தேன் முந்தாநாளுகூட்டம் போட்டு பேசுனவங்க சொன்னாங்க என்று சமானிய மக்கள் பேச வேண்டிய அரசியலை நாவலில் முன் வைத்திருக்கிறார். புதிதாக சேரிக்குள் வந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறார்கள். சேரி மக்கள் பேசும் மொழி, கலாச்சாரம் பழக்க வழக்கங்கள் அப்படியே பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. சினிமாவில் காட்டுவது போல சேரின்னா சீட்டு விளையாடிக்கிட்டு ரவுடி சம் செஞ்சுக்கிட்டு உள்ளே போக வே பயமாக இருப்பதை போன்ற பிம்பத்தை கரன் கார்க்கி அவர்கள் உடைத்து நொறுக்குகிறார்.பாளையம், செண்பகம் மாவுளி போன்ற மனிதர்கள் பண்பானவர்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை கதை வழியாக எடுத்துச் செல்லப் படுகிறது .தன் சொந்த காலில் நின்று தன் வாழ்க்கையை நகர்த்திச் செல்கிறான் செங்கோனி.செங்கோனியின் குடிசை அருகே சாராயம் காய்ச்சி விற்பவனாக பேய் காளி வருகிறான். அவனுக்கும், கோவிந்தம்மாளுக்கும் சாராயம் காய்ச்சுவதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் போலீசில் காட்டி கொடுக்கின்றனர்.நாவலின் உச்சமாக செங்கோனி வேலை பார்த்த கடை தீப்பற்றிக் கொள்கிறது. அதில் தலையில் அடிபட்டு உயிர் பிழைக்கிறான் காலில் முறிவு ஏற்படுகிறது. இதனால் வேலைக்கு செல்ல முடியவில்லை.பேய் காளிக்கு ஆராயி மீது ஒரு கண் அவளை எப்படியாவது அடைய வேண்டும் என்று நினைக்கிறான். இந்த நிலையில் தான் செங்கோனிக்கு உதவுவது போல, நான் ஊருக்கு சென்று வருகிறேன். வந்ததும் உனக்கு கட்டை வண்டி வாங்க ஏற்பாடு செய்வோம் அதுவரை அவங்க சாராயம் காய்ச்சி விற்பதை கண்காணித்துக் கொண்டிரு தினமும் சம்பளம் தருகிறேன் என கூறி சென்று விடுகிறான். அவனும் அந்த வீட்டு தின்னையில் உட்காந்து கவனிக்கிறான். ஆனால் இது ஆராயுக்கு பிடிக்கவில்லை இருந்ததாலும் வயிற்று பிழைப்புக்கு என்ன செய்வது என்று சமாதானப்படுத்தினான். போலீஸ் வருகிறது அனைவரும் தப்பித்துக் சென்று விடுகிறார்கள். செங்கோணியை போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்து சித்தரவதை செய்கிறார்கள். பாளையம் தன் சொந்த ஊரில் நிலவி வருகின்ற சாதிக் கொடுமைகளுக்கு முன்னோர்கள் பலியான விதத்தின் அடிப்படையில் அங்கு மன்றம் அமைக்கப்பட்டு இளைஞர்களை திரட்டி இனிமேல் யாரும் பறையடிக்க கூடாது, இனி எல்லா சாதிக்காரனும் காசுக்கு பறையடிக்க வருவாங்க என்று பாளையத்தின் அப்பா சொன்னது இன்றைக்கு நம் கண் முன்னே நடக்கிறது. பாளையம் ஊரில் உள்ள மன்றத்தை தீ வைத்து கொழுத்தி விட்டார்கள் என்று ஊருக்கு சென்று விட்டு வரும் போது தான் தெரிந்தது செங்கோணியின் நிலமை.

பாளையத்தை போலீஸ் கைது செய்ததும் செங்கோணியை விடுதலை செய்தார்கள். ஆனால் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தான். சேகரிக்குள் சமகால அரசியல் எம்.ஜீ.ஆர் கட்சி தொடங்குவது, பெரியார் இறப்பு நிகழ்வுகளை இரவு பள்ளிக்கூடம் என்ற பெயரில் விவாதிப்பது, புதியவனவற்றை படிப்பது பேசுவது என ஒரு இந்திய கிராமத்திற்கு அவசியமான ஒன்றை முன்வைக்கிறார் கரன் கார்க்கி .பேய் காளி பூங்கா அருகில் ஆராயியை தகராறு செய்ததை கோவிந்தம்மாள் சேகரிக்குள் வந்து பாளையத்தை பார்த்து ஞாயம் கேட்கிறாள். ஆராயி உடல் குளிரில் நடுங்கி கொண்டிருக்க தன் மாமா செங்கோணியின் சட்டையை எடுத்து போட்டுக் கொள்கிறாள். இனிமேல் பேய் காளி கொடுத்த எந்த பொருளும் தனது வீட்டில் இருக்க கூடாது என அவற்றை பேய் காளி வீட்டில் வைப்பதற்குச் சென்றாள். பாளையத்திடம் கோவிந்தம்மா சொல்வதை கேட்ட செங்கோணிக்கு கோபம் உச்சம் தலையில் ஏற, நிலக்கரி அள்ளும் சவுளை எடுத்துக் கொண்டு பேய்களின் குடிசைக்குள் சென்று தாக்கி விட்டு இரத்த வெள்ளத்தில் வெளியே வருகிறான். அனைவரும் பயத்தோடு பார்த்துக் கொண்டிருக்கும் போதே பேய் காளி இந்தா போகிறான் என்ற சத்தம் கேட்கவே செங்கோணி பேய்காளியை தாக்கி கொன்று விடுகிறான். கூடியிருந்த கூட்டத்தில் ஆராயியை தேடுகிறான் அவள் மட்டும் அங்கு இல்லை. எல்லோரும் பேய் காளி குடிசைக்குள் சென்று பார்க்கிறார்கள். இரத்த வெள்ளத்தில் ஆராயி செத்துக் கிடக்கிறாள்.ஆண் சட்டை அணிந்ததும் பேய் காளி என நினைத்து தனது ஆசை மனைவியை கொன்று விடுகிறான். பதினான்கு ஆண்டுகள் கழித்து தன் இருப்பிடம் நோக்கி வருகிறான். ஆனாலும் அவன் இன்னும் ஆராயியை தேடி அலைகிறான். அந்த பூங்காவில் ஆள் உட்காறும் இடத்தில் அமர்ந்து கொண்டு இருக்கிறான். மாமா வாங்க போகலாம் இத்தனை நாளும் எங்கே போயிருந்தீங்க என்று குரல் கேட்கிறது. இவனும் அவளோடு செல்கிறான். மாலையில் பூங்காவை பூட்ட சென்ற காவலாளி யாருக்கோ தகவல் சொல்கிறான். அமரர் ஊர்தி வருகிறது செங்கோணி என்கின்ற முதியவரின் உடலை ஏத்திச் செல்கிறது என்று நாவல் முடிகிறது. இதை வாசிக்கும் போது செங்கோணியோடு வாழ்ந்த உணர்வு ஏற்படுகிறது. பாரதி புத்தகாலயம் வெளியிட்டு இருக்கிற இந்த புத்தகம் 351 பக்கங்களை கொண்ட நாவல். இதில் உள்ள சிலவற்றை என்னால்எழுத மறந்து போயிருக்கலாம், ஆனால் நாவலை வாசிக்கின்ற ஒவ்வொருத்தரின் உள்ளத்திலும் எந்த ஒரு பக்கமும் மறையாத நினைவலைகளாக சுழன்று கொண்டே இருக்கும். இப்படி ஒரு நாவலை கொடுத்த தோழர் கரன் கார்க்கி அவர்களுக்கு ஒரு ரெட் சலியூட்.

கு.காந்தி
இராமநாதபுரம்.