கருப்பர் நகரம் – நூல் அறிமுகம்
நூலாசிரியர் கரன் கார்க்கியால் 2011 இல் எழுதப்பட்டு வெளி வந்த இந்நாவல், கிராமப்புறத்தில் ஒடுக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டு, கணவரை இழந்த ஒரு தாய்க்கு நிகழ்ந்த அவலச்சம்பவங்களையும், அதனால் நகரத்திற்குப் புலம்பெயரும் மகனின் வாழ்வும், அவரது மனைவியின் குடும்பத்தையும் அவர்களை அரவணைத்த சுற்றத்தையும் அடக்கிய கதைக் களத்தைக் கொண்டுள்ளது. மேலும் இவ்வாறாக வாழ்ந்து வரும் பல லட்சம் மக்களின் நிலைமைகளை சென்னை நகரின் வரலாற்றுடன் இணைந்த சிறந்த புனைவாய் முழுமை பெறுகிறது..
நாவலின் கதாபாத்திரங்களின் வாழ்வில் நிகழும் முக்கிய சம்பவங்களாக, தற்காப்புக்காகவும், தன்மானத்துக்காகவும், தன்னுணர்வு அற்று நிகழ்த்தப் படும் கொலைகளும், ஆதிக்கச் சுரண்டலாலும் நெருக்கடிகளாலும் மேற்கொள்ளப்படும் தற்கொலைகளும், உளப் பிறழ்வுகளும் இடம் பெறுகின்றன.
அவற்றிற்கு மூல காரணமாகப் புறக்கணிப்பு அரசியலும், சமுதாய, பொருளாதார காரணிகளும் அமைகிறது. இவை தற்கொலைகள், மனப் பிறழ்வுகளை மட்டுமல்லாது ஒரு சமூகத்தின் பண்பாடு பழக்க வழக்க சூழலையும் தீர்மானிக்கிறது என்பதை வரலாற்றின் மாறும் பரிமாணங்கள் மூலம் நிறுவுகிறார். இதற்கு எடுத்துக் காட்டுகளாக அமைந்த காட்சிளில், பல நாவல்கள் தொட்டிராத களங்கள் பரிசீலிக்கப்படுகின்றன.சென்னையின் உழைக்கும் மக்களின் மொழி வரையறையற்றதாக மற்றும் ஏளனப்படுத்தப்படும் நிலைக்கு மற்ற சமூக மக்களால் பார்க்கப்படுகிறது. இதற்குக் காரணம் கிராமங்களில் இருந்து உயிர் பிழைக்கவும் அடிமைத்தனத்திலிருந்து விடுபடவும் நகரம் நோக்கி மக்கள் புலம் பெயருகின்றனர். பின்பு தங்கள் புதிய எஜமானர்களின் கலப்பு மொழிச் சொல்லாடல்களுக்குத் தங்களைப் பழக்கப் படுத்திக் கொண்டு வாழ்வாதாரத்தை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதை நாவலின் கதாபாத்திரங்கள் நன்கு விளக்குகின்றன.
நகரப்பகுதியின் செல்வங்களை, வளங்களை ஆளக் கூடிய ஆங்கிலம், பார்சி, பிரெஞ்சு, உருது ஆகிய மொழிக் காரர்களுக்கும் இந்தியாவின் பிறமொழிக் காரர்களுக்கும் தம் உழைப்பை பல தலைமுறைகளாய் அர்ப்பணிக்க வேண்டிய கட்டாயம், எந்த அளவு அவர்களின் மொழியின் கலப்பிற்க்கு வித்திட்டது என்பதை வேற்று மொழிச் சொற்களின் மூலங்களுடன் ஒப்பிட்டு மிக இயல்பாக உரையாடல்களின் வழியே ஆசிரியர் பதிவு செய்கிறார், மிகச் செறிவாக.
மொழி மட்டுமல்லாது குண நலன்களையும் சுபாவங்களையும் கூட இப்பொருளாதாரப் புறக்காரணிகள் வரையறுக்கின்றன என்று நாவல் தன் பார்வையை விரிவு படுத்துகிறது. நிலக்கரி ஆலைகளும், குடிசைகளுக்கு பத்தடி தொலைவில் இருக்கும் தண்டவாளங்களில் ரயில்கள் ஏற்படுத்தும் அதிரொலியும் எப்படி அவர்களை உரக்கப் பேசும் பண்பு கொண்டவர்களாக மாற்றுகிறது எனவும், அமைதியற்ற அந்த ஒலி இரைச்சலும், மாசுபட்ட, மாசு படுத்தப்பட்ட அச்சூழல் எவ்வாறு அவர்களைப் பதற்ற நிலையிலேயே வைத்திருக்கிறது? என்று ஆசிரியர் பல சான்றுகளையும் முன் வைக்கிறார்.
இதை -நாவலின் மையக்கதாப்பாத்திரம், தன் காதலியின் -மனைவியின் அன்பும் அறவனைப்பும் பரிவும் கிடைக்கும் அத்தனைத் தருணங்களிலுமே உணர்ச்சி பொங்க கண்ணீர் விடும் தருணங்கள் -குறித்த்துச் சொல்கிறது.
மேலும் ஒரு இயல்பான, சுதந்திரமான குடும்ப வாழ்கை, கிராமத்தில் வெளிச்சமிருக்கும் நேரம் முழுதும் உழைத்துத் தேயும் ஒரு அடிமையால் கற்பனை செய்யவே முடியாத ஒன்றென நகரவாழ்வின் அடிப்படை தேவைகள் கூட மறுக்கப்படும் சூழ்நிலையை – கடவுளின் வரமென – கருதிக்கொள்ளச் செய்கிறதும் குறிப்பித்தக்கதே.60, 70 களில் நடந்த அறிவு இயக்கச் செயல்பாடுகளால் எதிர்பார்க்கப்பட்ட தாக்கங்களும் வளர்ச்சிகளும் படிப்பறிவு பறிக்கப்பட்ட மக்களையும் அடைவதாகவும், தொன்மைகளையும் படிமங்களையும் அவர்கள் பேச்சு வழக்கில் பயன்படுத்தும்படியும், அரசியல் பண்பாட்டு விழிப்புணர்வை அவர்களிடம் பரவச் செய்தது என்று – பல உரையாடல்கள் மூலமாகவே எளிமையாகப் பதிவு செய்யப்பட்ட சிறந்த புனைவின் அத்தியாயங்கள் இன்னும் திரைப்படங்களில் காட்சிப் படுத்தப்படாதது மிகுந்த வியப்பாகவும் வலியுறுத்த வேண்டியதாகவும் உள்ளது.
காரணம், அம்பேத்கரையும் பெரியாரையும் மார்க்சையும், அவர்களின் தத்துவங்களையும் துறைசார் வல்லுநர்களின் பேச்சிலும், அரசியல்வாதிகள் தங்கள் பிரச்சாரங்களில் பயன்படுத்திக் கொள்வதையும் மட்டும் கேட்டுப் பழகியிருக்கிறோம். ஆனால் இந்நாவல், அரசியல் தலைவர்கள் மேல் அளவற்ற பற்று கொண்டு சின்னங்களை, உருவங்களை, நெஞ்சில் பச்சை குத்திக் கொள்ளும் பாமர மக்களின் அன்றாடச் சொல்லாடல்களின் ஊடே அவர்களின் கண்மூடித்தனமான பற்றை கேள்விக்கு உட்படுத்துகிறது.
தொடர் உரையாடல்களில் அவர்களைச் சிந்திக்கத் தூண்ட வைக்கும் கருத்துக்கள் நாவலில் இடம் பெற்றுள்ள விதம், நாவல் ஆசிரியரின் அறிவுசார் பின்புலத்தையும், சமூகம்சார் அக்கறையையும் பாராட்டுக்குரியதாக வெளிப்படுத்துகிறது.
கீழ்வரும் பத்திகளில் சிறைச்சாலை மனோதத்துவ நிபுணராக பணிபுரியும் ஒரு நண்பரிடமிருந்து இந்நாவலின் விமர்சனமாகப் பகிர்ந்து கொள்ளப் பட்ட கருத்துகளைச் சேர்த்துள்ளேன்.
ஒடுக்கப்படுதல், வன்முறை, பாலியல் சுரண்டல், விபத்துக்கள், பேரழிவுகள் நெருங்கியவர்களின் இழப்பு இவ்வகை பாதிப்புகள் மூளையின் நினைவகத்தை இறந்த காலச் சுவடுகளால் நிரப்பி, தற்கால நிகழ்வுகளில் மனிதர்கள் சுதந்திரமாக ஈடுபடுவதைத் தடுக்கின்றன. இந்த அனுபவங்களும் விளைவுகளும் தற்காப்பு நடவடிக்கைகளின் ஒழுங்கற்ற சுபாவங்களை இயல்பில் திணிக்கின்றன.
மேற்குறிப்பிட்ட உளவியல் பாதிப்புகள், Hormonal Imbalance – ஹார்மோன்களின் சமநிலையின்மையை, அதாவது மூலையில் இரசாயண மாற்றத்தை விளைவிக்கிறது. இவை Post traumatic stress disorder (PTSD) மற்றும் psychosis எனும் உள நோய்களுக்கு காரணியாகிறது.
தற்கால உளவியல் சிகிச்சைகளில் நிபுணர்கள் கையாள்வது புலனுணர்வு சார்ந்த நடத்தை சிகிச்சை (Cognitive behavioral therapy CBT). இதற்கு எடுத்துக் காட்டாக புகைப் பழக்கத்தில் இருந்து ஒருவரை அதன் பாதிப்புகளையும் அடிமைத் தனத்தையும் புரிய வைத்து அவரின் நடத்தையை மாற்ற முயலுவதைச் சொல்லலாம்.PTSD அளவில் இருக்கும் ஒருவரது பாதிப்பை இவ்வகைச் சிகிச்சை மூலம் ஒரு உளவியலாளரால் (Psychologist) குணப் படுத்த முடியும். இதற்கு மனநல மருத்துவரின் (psychiatrist) மாத்திரை மருந்துகளின் சிகிச்சை அவசியப் படாது.
ஆனால் இவ்வாறாக உளவியலாளர்களிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள முடிந்தவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு, புறக்கணிக்கப் பட்ட சமூகத்தில் இருந்து வளர்ந்து வரும் ஒரு மனிதர் தன் வாழ்வின் எந்த தருணத்திலும் இச்சிக்கல்களைக் களைந்து கொண்டு சீர் பெற இயலாத நிலையிலேயே சமுதாய அரசியல் கட்டமைப்பு அவரை வைத்துள்ளது எனவும் எளிய மக்களின் உளவியல் பிரச்சனைகளுக்கு உரிய உதவியை வழங்க தற்போது கிடைக்கும் அரசின் திட்டங்களை மேம்படுத்த வேண்டிய அவசியத்தையும் கருப்பர் நகரம் நாவல் மூலம் ஆசிரியர் கரன் கார்க்கி நுணுக்கமாகப் பதிவு செய்கிறார்.
செங்கேணி என்ற (மையக்கதா பாத்திரத்துக்கு) கிராமப்புறத்தில் சிறு வயதில் நடந்த வன்முறையின் தாக்கமும் பாதிப்பும் பிரக்ஞையில் படிந்துநகரத்திற்குப் புலம் பெயர்ந்த பின்னரும் (அவர் தாயை பாலியல் வன்முறை செய்ய முற்பட்ட பண்ணையாரின் கருப்புக் குதிரை வண்டியையும் அவர் ஒப்ப மனிதர்களைக் காணும் போது, தாயின் தற்கொலை நினைவு) ஆறாக் காயங்களாக மீட்டுருவாக்கம் செய்யப் படுகிறது. இது அச்சத்தையும் கற்பனைகளையும் மன நோய்களையும் உருவாக்க காரணமாக அமைகிறது. தினக் கூலியை எதிர்பார்த்து மட்டுமே தினசரி உணவிற்கு உத்தரவாதம் உருவாக்கிக் கொள்ளும் இக்கட்டான வாழ்க்கை முறை, மின்சாரம், குடிநீர், கழிப்பிடம், சுகாதாரம் ஆகிய வாழ்வதார அடிப்படை எதுவுமே வழங்கப் படாத நெருக்கடிகளுக்கு இடையே இரவில் கண்ணயர மட்டுமே முடிந்த வாழ்நிலையை அரசியலும், சமுதாயக் கட்டமைப்பும் உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் உளவியல் பாதிப்புகளைக் களைய முற்றிலும் வாய்ப்பு மறுக்கப்படுவது மட்டும் அல்லாது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத பாசகாப்பற்ற பணிச்சூழல் மட்டுமே இம்மக்களுக்கு நிர்பந்திக்கப் படுகிறது. இவ்வாறான விபத்துக்கள் நிறைந்த பணிச் சூழல் உழைக்கும் மக்களை தங்கள் வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொள்வதைத் தடுத்து அவர்கள் உழைப்பைச் சுரண்டித்தான், அவ்வுயிர்ச் சக்தியில்தான் நகரம் தன்னை சிங்காரமாக அலங்கரித்துக் கொள்கிறது.
சுமை இழுக்கும் கூலித் தொழிலாளியான செங்கேணி தினசரி வேலையில் ஒரு விபத்தில் சிக்கி கால் எலும்புகள் முற்றிலும் நொறுக்கப் பட்டு தலையில் இருபதுக்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டு இரண்டு மாதம் தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்கப் படுகிறார். பின் அவரும் அவர் மனைவியும் சுற்றத்தாரின் அக்கறை மிகுந்த உதவிகளாலும் உறவுக் காரர்களின் இடைவிடாத அனுசரிப்பாலும் மட்டுமே உயிர் பிழைத்தும் உணவு உண்டும் வாழ இயல்கிறது.
நாவலில் இவ்விபத்து நிகழ்வதற்குச் சில நாட்கள் முன்பு தான் செங்கேணி, பெரியாரை அம்பேத்கரைப் பின்பற்றும் அண்டை வீட்டார்களினால், நண்பர்களால், ஊக்குவிக்கப் பட்டு இரவு பள்ளிக்குச் சென்று எழுத்துக் கூட்டிப் படிக்கவும் சிந்திக்கவும் தொடங்கி கல்வி மேல் கவனம் செலுத்துகிறார்.
விபத்தின் காரணமான முதலாளிகளின் அக்கறையின்மை, எளிய மக்களின் இந்த முயற்சியை, வளர்ச்சியை தடுத்தது மட்டுமல்லாது, உழைப்பதற்கு மூலதனமான அவரின் உடல் ஆரோக்கியத்தை மீண்டு வர முடியாத நிலைக்கு உள்ளாக்குகிறது.
உழைப்பும் ஆரோக்கியமும் பறிக்கப்பட்ட இந்த இயலாமை மனசாட்சிக்கு விரோதமான செயல்களில் சிக்கிக் கொள்ள வைக்கிறது. அந்நிலையிலும் அறத்தைக் கோர விழைந்து அவற்றை புறக்கணிக்கிறது எளியோரின் இயல்பு. இருந்தும், சிக்கிக் கொண்ட பிரச்சனையில் பாரபட்சமான விசாரனையால், கொடும் வன்முறைக்கு உள்ளாக்கப் படுகிறார்கள் செங்கேணியும் அவரின் கர்ப்பினியான மனைவியும். மேன்மேலும், உள, உடல் வதைகள்.
இவ்வனைத்து இன்னல்களுக்கும் ஆராயி என்னும் செங்கேணியின் மனைவி உள்ளாக்கப் படுகிறார். தலைப் படுகாயத்தால் எந்நேரமும் ஆபத்தான நிலையை எட்டவிருக்கும் கனவரின் நிலையை எவரிடமும் பகிராது இருந்து, அவர் வயதிற்கும் சக்திக்கும் மீறிய அழுத்தம் நிறைந்த சூழலில் வாழ நிர்பந்திக்கப் படுகிறார்.
நாவலில் வரும் அனைத்து பெண் கதாபாத்திரங்களும் அறத்தையும் அன்பையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டும் படி உருவாக்கப் பட்டுள்ளது, சமூகத்தால் நிர்ப்பந்திக்கவும் பட்டுள்ளது.
இதற்கு முன் வாசித்த சில பழைய நாவல்களில் உயர்சாதியாகக் கருதிக் கொள்ளும் சில வீடுகளின் சிறுவர்கள் கூட வயது முதிர்ந்த அவர்கள் வீட்டின் வேலை ஆட்களை வா போ என்றும் மரியாதை குறைவாக ஆதிக்கத் தொனியில் அணுகுவதை வாசித்து சிறிய எரிச்சலுக்கு உள்ளாகியிருக்கிறேன்.
முதல்முறையாக இந்நாவலில் அவ்வாறான ஒரு காட்சியில் இம்மாதிரியான நிகழ்வு கேள்விக்குள்ளாக்கப் படுவதை, அவமரியாதைத் தனம், நியாமின்மை விவாதிக்கப் படுவதை வாசித்ததில், ஒரு ஆதங்கம் திருப்தியானது. நாவலின் ஆசிரியர் உழைக்கும் மக்களின் இருப்பிடம், சுகாதாரம், கல்வி, ஆரோக்கியம், உளவியல், பணி உத்தரவாதம் அனைத்தையும் அரசியல் வழி கேள்விக்கு உள்ளாக்கி இக்கட்டுகளும் நெருக்கடிகளும் தரும் பாதிப்புகளைப் புனைவின் மூலம் செறிவாக ஆவணப் படுத்துகிறார். அதற்கு மிகுந்த பாராட்டுகளும் நன்றிகளும்.
ஆசிரியர் கரன் கார்க்கியின் மற்ற படைப்புகளை வாசிக்கவும், பகிரவும் கடமைப் பட்டுள்ளேன்.இம்மாதிரியான செறிவுமிக்க நம் அறிஞர்கள் படைப்பாளிகள் மென்மேலும் கொண்டாப்படவும், ஊக்குவிக்கப் படவும் வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்வோம்.
நன்றி.
நூலின் தகவல்கள் :
நூல் : கறுப்பர் நகரம்
ஆசிரியர் : கரன் கார்க்கி
விலை : ₹340
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/karuppar-nagaram/
நூல் அறிமுகம் எழுதியவர் :
அருள் இனியன். இ
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


விரிவான விமரிசனம்.
சிறப்பாகவும் அமைந்துள்ளது.
ஒவ்வொரு தனிமனிதனையும் ஒவ்வொரு குடும்பங்களையும் பாதிக்கும் அரசியல் பொருளாதார சக்திகள் வலைப் பின்னலை எடுத்துக் காட்டி உள்ளார்.
“சிரச்சேதம், வேந்தனுக்குப் பொழுது போக்கு!
குடிகளுக்கோ உயிரின் வாதை!” என்று பாரதிதாசன் எழுதினார்.
அதுதான் அரசியல்.
ஆசிரியர் எதை எண்ணி எழுதி இருப்பார் என்று யூகித்து விவரிக்கும் இடங்கள் சிறப்பு.
ஒரு எழுத்தாளருக்கு இது வாழும் காலத்திலேயே கிடைக்கும் அன்புப் பரிசு! பாராட்டுகள். மகிழ்ச்சி. வாழ்த்துகள்.