நூல் அறிமுகம்: அவலங்களும், அனுபவங்களும் – மலர்வதியின் ‘கருப்பட்டி’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து – எஸ். ஜெயஸ்ரீ’அன்பின் வழியது உலகம்’, ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்’, ‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ என்றும், ‘அன்பே சிவம்’ என்றும் இறைவன் அன்பில் உறைகிறான் எனும் கருத்தை மத, தத்துவ வேறுபாடுகளின்றி அனைத்து மதங்களும், இலக்கியங்களுமே போதிக்கின்றன. ஆனாலும் மனிதர்கள் பணம், செல்வம் இவற்றின் மீது பற்று குறையாதவர்களாகவே இருக்கிறார்கள். ஒரு ஏழைக்கு உதவுவோம் என்ற மனப்பான்மை அரிதாகி வருகிறது. அன்பு மட்டுமே உலகில் எதையும் எதிர்பார்க்காமல், அன்பிற்காக மட்டுமே அன்பு செய்வதாக இருக்கிறது. மலர்வதியின் அநேக கதைகள் இவற்றையே திரும்பத்திரும்பச் சொல்கின்றன. நீதி போதனைக் கதைகளும், புராணக் கதைகளும் அன்பை மட்டுமே மனிதர்கள் மனதில் விதைக்கின்றன. ஆனால், மனிதர்கள் ஏன் இதைப் பழகுவதேயில்லை? மலர்வதியின் அனைத்துக் கதைகளிலும் இப்பொருளே தொக்கி நிற்கிறது.

இறைவனுக்குச் செய்வதில் ஏதோ ஒரு துளியை ஏழை மக்கள் பசியாறக் கொடுத்தால் அவர்கள் எவ்வளவு மகிழ்வார்கள்? திருநாள், காணிக்கை இவையனைத்தும் பணம் படைத்தவர்களுக்கு மட்டும்தான். ஏழைகளுக்கோ ஒருவேளைக் கஞ்சியாவது கிடைத்தால் அதுவே திருநாள்தான். செல்விக் குட்டியும், சிலுவை முத்துவும் திருநாள் நடக்கும் ஊரில் ஒவ்வொரு கடையாகப் பார்த்துத் தின்பண்டங்களுக்கு ஆசைப்படுவதும், ’அம்மா மாலையில் வேலை விட்டு வரும்போது காசு கொண்டு வருவாள், வாங்கித் தின்னலாம்’ என்ற எதிர்பார்ப்போடு கடைகளை ஏக்கத்தோடு பார்த்து அலைவதும் கண்ணில் நீர் வரவழைக்கிறது. அவர்களது அம்மா மதலேனாள் சுகவீனப்பட்டு, காசில்லாமல் திரும்பும்போது, “நம்பளைப் போல உள்ளவங்களுக்கு வேதனை தரக்குன்னே இந்த விழாக்களெல்லாம் வந்துக்கிட்டேயிருக்கு; விடிஞ்சா கஞ்சி வக்க நல்லதா ஒரு கிலோ அரிசி கூட இல்ல. தானம் தானமுன்னு கோயிலுக்கெல்லாம் கொட்டுறவங்க, இடிஞ்சு போய் கிடக்கிற நம்பளைய போல உள்ளவங்களைக் கடைக்கண் கொண்டு பாக்குமா” என்ற வரிகள் சிந்திக்க வைப்பதுடன், மனம் கசியவும் வைக்கின்றன.

ஆசையாய்க் குழந்தைகளுக்கு ஒரு துளி ஷேம்பு கூட தராத கிழவி, காணிக்கைக்காகக் கொடுத்த பைசாவைக் கொண்டு அக்குழந்தைகள் வடையும், டீயும் சாப்பிடுவதாக முடிக்கும் மலர்வதி, அதைப் பார்த்துப் பிரபஞ்ச தேவனும் கும்மாளமிட்டுக் கொண்டான் என்று கூறி, ‘இறைவனின் உறைவிடம் எது?’ என்று சொல்ல முற்படுகிறார்.

நான் சாகித்திய அகடமி விருது பெற்றேன்! | I received the Sahitya Academy  Award! - Dinakaran
எழுத்தாளர் மலர்வதி

‘சூசையும், அந்தோணியும்’ கதையிலும் இறைவனின் வடிவங்களைப் பேதப்படுத்தி மனிதகள் தங்களுக்குள் மோதல்களை உருவாக்கிக் கொள்ளும் போக்கைக் காட்டுகிறார் மலர்வதி. இறைவனை வைத்துச் சண்டை போடும் காட்சிகள் மத வித்தியாசங்களின்றி இருப்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

’கருப்பட்டி’ கதை நல்ல குறியீடு. கருப்பட்டி என்று தென் தமிழகத்திலும், பனை வெல்லம் என்று பிற இடங்களிலும் பரவலாக அறியப்படும் இனிப்பு, என்றுமே பெரிதாக மதிக்கப்பட்டதில்லை. தற்காலச் சூழ்நிலையில் அது உடலுக்கு நல்லது என்று சொல்வதால் பலரும் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கு முன்னர் கருப்பட்டி என்பது ஏதோ ஏழைகளும், சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களும் மட்டுமே பயன்படுத்தக் கூடிய உணவுப் பொருளாக ஏளனமாகவே பார்க்கப்பட்டது. அதனால்தானோ என்னவோ மலர்வதி கருப்பட்டியை – அதன் மதிப்பு கொண்டாடப்படாமல் இருப்பதை – அன்பிற்குக் குறியீடாகக் கொண்டு ‘கருப்பட்டி’ கதையைப் படைத்துள்ளார். சிறுவயதில் ஒன்றாக விளையாடி, அன்பாகக் கருப்பட்டி தின்ற நண்பர்களில் ஒருவன் வாழ்க்கையின் உயர்நிலைக்குப் போகவும், மற்றவன் பின்தங்கிய நிலையில், ஏழ்மையிலேயே இருக்கவும் வைக்கிறது காலம். உயரம் சென்றவனுக்கு கள்ளம்கபடமற்ற நண்பனின் அன்பு ஒரு பொருட்டாகவே இல்லை. தன் குழந்தைக்கு மருந்து வாங்கக் கடன் வாங்கிய பணத்தில் நண்பனுக்குக் கருப்பட்டி வாங்கி வருகிறான் முத்தையன். ஆசையாக அதை வாங்கிக்கொள்ளும் குழந்தையிடமிருந்து அதைப் பிடுங்கி நாய்க்குப் போடுகிறான் குமரேசன். அன்பால் கட்டுண்ட பாமர மனது, காலம் மாறிவிட்டதை உணராமலேயே அன்பினால் கட்டுண்டு கிடக்கிறது. பணமும், செல்வாக்கும் அன்பைத் துச்சமாக மதிக்கும் என்பதைச் சொல்லும் எளிமையான கதை ‘கருப்பட்டி’.

‘ரவுடி’, ‘கிலுக்கியக்கா’ கதைகளிலும் அன்பே அடிநாதமாக இருக்கிறது. ரவுடியாக இருப்பவன் பெண்ணின் அன்பு முன் சாந்தமாவதும், யாரும் ஆதரவற்ற ஒரு பெண் தனக்கு உதவி செய்யும் பெண்ணின் மீது அன்பு பாராட்டுவதும் அன்பு எனும் ஒற்றை நாரில் கட்டிய மலர்களே!

தொகுப்பிலுள்ள 11 கதைகளில் 6 கதைகள் அன்பும் அன்பிற்கான ஏக்கங்கள் குறித்தவையாகவும், 5 கதைகள் பெண்கள் மீது அன்றாட வாழ்க்கையில் தொடுக்கப்படும் தாக்குதல்களைப் பேசுவதாகவும் உள்ளன. ’லில்லி பெண்ணுக்கு அப்பனில்லை’, ‘ஒரு சொட்டு சிரிப்பு, ஒரு சொட்டு விசம்’ போன்ற கதைகள் இதற்கான சிறந்த உதாரணங்கள். தினசரி வாழ்க்கையில் ஒரு நெருக்கடியான பேருந்தில் பெண் படும் இன்னல்களை விவரிக்கிறது ஒரு கதை. மற்றொரு கதையோ ஆண்களிடம் சாதாரணமாக நட்புரீதியாகப் பெண் கொள்ளும் அன்பைக் கூட ஏன் எப்போதுமே தவறான அர்த்தத்திலேயே எடுத்துக்கொள்கிறார்கள் என்று பேசுகிறது. தகப்பனைப் போல் நினைத்துப் பெண் பழகினாலும், அவன் அதைத் தவறாகவே எடுத்துக்கொள்கிறான் என்கிறது ஒரு கதை. இப்படிப் பெண்கள் எதிர்கொள்ளும் சாதாரண கஷ்டங்களை எளிமையான கதைகளாகக் கொடுத்திருக்கிறார் மலர்வதி.

எளியவர்களின் துயரங்கள் | karuppatti short stories - hindutamil.in

கதைகள் அனைத்துமே எளிமையான உரையாடல்களினூடாகவே நகர்கின்றன. நாஞ்சில் நாட்டு மொழியோடு நகரும் அத்தனை கதைகளும் எளிமையான மனிதர்களைப் பற்றிப் பேசுபவை. சில கதைகள் நீண்டு கொண்டே போவது போல் தோன்றினாலும், கதை மாந்தர்களும், உணர்வுகளும் அதைச் சரி செய்கின்றன(ர்).

எழுத்தாளர் மலர்வதியும், சிறந்த முறையில் அச்சிட்டு வெளியிட்டிருக்கும் காலச்சுவடு பதிப்பகத்தாரும் பாராட்டுக்குரியவர்கள்.

(கருப்பட்டி – சிறுகதைத் தொகுப்பு – மலர்வதி – ரூ. 175/- –  காலச்சுவடு பதிப்பகம்)

எஸ். ஜெயஸ்ரீ,

36 ஏ, அண்ணா நகர்,

கூத்தப்பாக்கம்,

கடலூர் – 607 002.

[email protected]