நூல் அறிமுகம்: உழைக்கும் மக்களின் சென்னை – பகத்சிங் (இந்திய மாணவர் சங்கம்)

 

கறுப்பர் நகரம் எனும் இப்புதினத்தின் ஆசிரியர் கரன் கார்க்கி தனது படைப்புகள் அனைத்திலும் உயிர்ப்புள்ள கதாபாத்திரங்களைப் படைக்கிறார். அது நம்மை நாவலுடன் ஒன்றினைதுவிடுகிறது.

கறுப்பர் நகரம் என்றதும், அது எந்த நகரம்? என்ற கேள்வி எழக்கூடும். கதையில் விரியும் அந்த நகரம் நாம் அனைவரும் நன்கு அறிந்த காட்சிப் பிழைபோல் ஆங்காங்கே வண்ணம் தீட்டப்பட்ட “மெட்ராஸ்” தான். அதாவது சென்னையின் மத்திய பகுதிதான் இந்த கறுப்பர் நகரத்தின் கதைக்களம்.

வளர்ச்சியின் அடித்தளம்

நாமும் பலமுறை இந்த கறுப்பர் நகரத்தைச் சாதாரணமாகக் கடந்து சென்றிருப்போம். ஆனால் இந்தப் புதினத்தை வாசித்த பிறகு நம்மால் அப்படி சாதாரணமாகக் கடந்து சென்றுவிட முடியாது. “வந்தாரை வாழவைக்கும் சென்னை” என்பார்கள். சரி உண்மையில் சென்னை யாரை வாழவைக்கிறது?. சாலையெங்கும் வண்ணம் பூசி சித்திரங்கள் தீட்டி பிரமாண்டமான கட்டமைப்புகள் எல்லாம் நம் கண்ணுக்குப் படுகிறது. இந்த உருவாக்கம் எத்தனை மனித உயிர்களைப் பறித்திருக்கும்?

உண்மையில் இந்நகரை உருவாக்கிய ஏழை உழைக்கும் மக்களின் உணர்வுகளையும், அவர்களின் வாழ்வையும், சாதிய கட்டமைப்பையும் இப்புதினம் அழகுற எடுத்தாளுகிறது. நகரத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பவர்கள் உழைக்கும் மக்களே என்றபோதும் பயன்பெறுபவர்களோ பணம்படைத்தவர்களே.

எழுத்தாளர் கரன்கார்க்கியின் ...

உழைக்கும் மக்களின் வாழ்வு எத்தகையது? என்பதைக் கதை பேசுகிறது. ஒருநாள் வேலை கிடைக்காவிட்டாலும் அன்றைய உணவு என்பது கேள்விக்குறியே. இவ்வளவு கடினமான வாழ்விலும் அவர்களிடம் நிலவும் அன்பும் காதலும் அழகாக நாவல் முழுவதும் கலந்திருக்கிறது. செங்கேணி மற்றும் ஆராயி அதன் சாட்சியாகக் கதையில் உலாவுகின்றனர்.

மனம் முழுக்க ஆராயிதான்

சிறை சென்ற செங்கேணி தனது தண்டனைக்காலம் முடிந்து வெளியே வரும்பொழுது தான் கண்ட காட்சிகள் அனைத்தும் புதிதாய் அவருக்குத் தெரிகிறது. அவரது நினைவிலிருந்த இடங்களை எல்லாம் ஏதோ பேய் விழுங்கி விட்டதுபோல் கண்முன் தெரிந்த மாற்றங்களையெல்லாம் பார்க்கிறார். மனதில் ரணம் கொண்டு தனது பாதையில் பயணத்தைத் தொடங்கினார். மனம் முழுக்க ஆராயி மட்டுமே இருந்தாள். குழப்பமான நிலைகளில் அவருக்குத் தெளிவான அடிகளை எடுத்து வைக்க அவளால் மட்டுமே உதவமுடியும்.

ஆராயிக்கு முன்பு பரிசளிக்கத் தாமரைகளைப் பறித்த அந்த அல்லிக்குளத்தினை தேடினார். அங்கு ஒரு சிவப்புக் கட்டிடம் எழுந்துநிற்கிறது. அதனால் அவருக்குக் குளத்தின் தடமே தெரியவில்லை.
அவருக்கு நினைவு இருந்த அனைத்தையும் தேடிச் சுற்றித் திரிந்தார் ஆனால் கிடைத்ததோ வேதனைகள் மட்டுமே.

ஆராயி. செங்கேணியிடம் “வா மாமா, என் கூட வந்திரு, நம்ம எங்கயாசி போய்
சந்தோசமா இருக்கலாம்” என்று அழைக்கிறாள். செங்கேணியும் ஆராயியை பின்தொடர்கிறார். கனவுலகில் அவர் எடுத்துவைக்கும் அந்தக் காலடியோடு உண்மை நம்மைச் சுடுகிறது. ஏன் செங்கேணி சிறை சென்றார்? ஆராயிக்கு என்னவானது? என்பதோடு கலந்த அவர்களின் வாழ்க்கைப்பாட்டே புதினத்தின் கதைக்களம்.

தொழிலாளியின் உழைப்பால்தான் நகரம் வளர்ந்தாலும் உழைக்கும் மக்களின் கனவுகளும் லட்சியங்களும் சிதறிய நிலையிலேயே இருந்தது. செங்கேணியின் சிறை வாழ்விற்கு முன்பு நாய்களைக் கொல்லும் இடமாக இருந்த இடம் இப்போது பெரிய பெரிய கட்டிடங்களைக் கொண்டதாகவும், குப்பைக் கிடங்குகளாகக் கிடந்த இடங்கள் இப்போது மனிதர்கள் வாழும் இடங்களாகவும் மாற்றப்பட்டிருக்கிறது. அங்கிருந்த மக்கள் சென்னையை விட்டே விரட்டப்பட்டுள்ளனர். ஒரு நகரத்தையும் அங்கிருந்த மக்களையும் அழித்து, அதன் மேல் வேறு ஒரு நகரம் அமைக்கப்பட்டிருப்பதைக் கதையின் எதார்த்தமான மொழியே காட்டிவிடுகிறது.

இப்புதினத்தில் செங்கேணி, ஆராயி இடையிலான எல்லையில்லா அன்பையும் பார்க்கலாம்.
உழைக்கும் மக்களின் வாழ்வையும், வலிகளையும் உணரலாம்.

Karuppar Nagaram - கறுப்பர் நகரம் » Buy tamil book ...
நூல் பெயர் : கறுப்பர் நகரம் (நாவல்)
ஆசிரியர் : கரன் கார்க்கி
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
முதல் பதிப்பு : டிசம்பர் 2011
விலை : ₹280