கறுங்குருதி படிந்த
இந்த பூமியின் தோலை
உறித்தெறியுங்கள்.
அந்த வானத்தின் தசையையும்
கிழித்தெறியுங்கள்.
திசைகளின் வன்ம நாவையும்
துண்டாடி வீழ்த்துங்கள்!
இனி கறுப்பு என்பது நிறமல்ல:
ஆயுதம் என்று
பெருங்குரலெடுத்துப்
பிரகடனம் செய்யுங்கள்.
*
நிறம் எடையற்றது என்று
எண்ணியிருந்தோம்;
அமெரிக்க மண்ணில்
அது
ஜார்ஜ் ஃப்ளாய்டின்
கழுத்தை நசுக்கும்வரை.
அந்த எடை
ஒட்டுமொத்த மனிதத்தையும்
தக்கையாக்கிவிட்டது.
ஆப்ரிக்க வியர்வையில் பூத்த
அமெரிக்க மலர்களில்
இப்போது
கரிப்பாய்ச் சொட்டுகிறது தேன்.
*
நிறம்-
உயிரைப் பிதுக்கும் என்பதை
அறிந்துகொண்டோம்.
கசையடிகளையும்
வசையடிகளையும் தாண்டிய
வதை இது.
*
நிறமென்பது-
மூச்சைத் திணறவைக்கும்
இதயத் துடிப்பை நிறுத்தும்
ஒரு கொடும் மரணத்தை
அரங்கேற்றும் என்பதையெல்லாம்
காலம் கற்பித்துவிட்டது.
*
மேகங்களும்
இரவுகளும்
மலைகளும்
தங்கள் நிறத்தின் கண்களால்
அழுகின்றன.
*
ஷூவையே கொலைக் கருவியாக்கிய
அந்த அமெரிக்க அழுக்கனின்
வெளுத்த கால்களை
வேகவைத்துக் கொண்டிருக்கிறது
உலகின் வெறுப்பு நெருப்பு.
*
இனி
நிறவெறியர்களின் இரவுகள்
இருளின் ஆக்சிஜன் கிடைக்காமல்
மூச்சுத்திணறட்டும்.
அவர்களின்
நிம்மதியற்றப் பொழுதுகள்
அவர்களின் காலடியிலேயே
நசுங்கிப் பிதுங்கட்டும்.
அவர்களின் தூக்கம்
வெளிச்சத்திலேயே
செத்துப் போகட்டும்.
*
நடப்பதற்கான
காலணியால்
நடக்கக்கூடாதவை
நடப்பது
இனியும்
நடக்கலாமா?
நூற்றாண்டுகளின்
நிறவெறி வன்மத்தை
அந்தக் காலணி
ஒரு அப்பாவியின்
கழுத்துக்கு
இடம் பெயர்த்திருக்கிறது.
அந்த வெள்ளை நிறவெறி
ரத்தத்தின் நிறத்தை
அழுக்காக்கிவிட்டது.
காலனி ஆதிக்கத்தின் முகம்
காலணி ஆதிக்கமாய்
நிறம் திரிந்துவிட்டது.
*
ஜார்ஜ் ஃப்ளாய்ட்!
நாங்கள் ஏற்றிவைத்த
மெழுகுவர்த்திகள்
உனக்காகக் கண்ணீர் விடுகின்றன.
உன்னைத் திணற வைத்தது
முன்பின் நூற்றாண்டுகளின்
ஒட்டுமொத்த வன்மம்.
இந்த உலகத்தின்
சமாதானம்
உன் கடைசி நிமிடங்களில்.
மூச்சுத் திணறியதை
காலத்தின் கண்கள்
கவனித்திருக்கக் கூடும்.
நிறவெறிக்குப் பலியான
கடைசி மனிதன் நீதான் என்பதை
நாங்கள் எழுதுவதில் இருக்கிறது
உனக்கான உண்மை அஞ்சலி.
*
தோழர்களே!
இனி கறுப்பு என்பது நிறமல்ல:
ஆயுதம் என்று
பெருங்குரலெடுத்துப்
பிரகடனம் செய்யுங்கள்.
கறுப்பின் வெறுப்பை எச்சில் உமிழ்ந்து மிரட்டுகிறது கவிதை
மனிதத்தைத் தக்கையாக்கிய நிறத்தின் எடை…
மனசாட்சியைக் கடையும் கவிதை.