ஒரு படைப்பாளி தான் கண்ட, கேட்ட, பட்ட அனுபவங்களோடு, தன் எண்ணம், புரிதல், கற்பனை ஆகியவற்றைக் கலந்து ஒரு இலக்கியத்தைப் படைக்கிறார். சுமத்தலும், காத்தலும், ஈணுதலும்.. ஆம்! வலியும், இரத்தமும், வெடிப்பும், அழுகையுமான ஒரு மகப்பேறுக்கு ஒப்பான நிகழ்வு அது! அப்படி வெளிக்கொணர்ந்த தன் படைப்பினை, தன் மகவைப் போல பேணிக் கொண்டாடுவதும், இலக்கிய உலகில் அதன் இருப்பை நிறுத்த விரும்புவதும், படைப்பாளியின் இயல்பே.
ஒரு படைப்பை ஆழப் படித்து, உடன் பயணித்து, உருகி, நிறைகளைப் பாராட்டி, நடுவு நிலைமையோடு அதன் குறைகளை அலசி, தோழமையோடு சுட்ட, மற்றொரு படைப்பு மனம் முன்வருதல், படைப்பாளியை ஊக்குவிப்பதோடு, இலக்கியச் சூழலையும் வளப்படுத்தும். மதிப்புரை, அந்தப் படைப்பின் சிறு குறுக்கு வெட்டுத் தோற்றம்.
‘எழுத்துகளைப் பற்றி சில வார்த்தைகள்’ என தோழர் கருப்பு அன்பரசன் பெயர் வைத்துக்கொண்டாலும் அந்த சில வார்த்தைகள், படைப்பையும், படைப்பாளியையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருப்பதை நாம் அவர் மதிப்புரைகளில் உணரலாம்.
புத்தகங்கள் வெளியிடப்படும் சூட்டோடு தோழரின் கைகளுக்கு வருமளவுக்கு தோழர் கருப்பு அன்பரசனின் மதிப்புரைகள் எதிர்பார்ப்பைத் தூண்டுவதாக இருக்கின்றன. அவருடைய முகநூல் நட்புகள் அவருடைய மதிப்புரைக்காக காத்திருப்பதும் உண்டு. ஒரு பொதுத்துறையில் இருந்துகொண்டு, கடுமையான வேலைப் பளுவினூடே வாசிப்பதும், அதைக் குறித்து சிரமேற்கொண்டு எழுதுவதும், எழுதுவதை உடனடியாக முகநூலில் பகிர்ந்து படைப்பைக் கொண்டாடுவதும், தொடர்ந்து நிகழ்வுகளில் பங்கேற்பதும், இளம் படைப்பாளிகளை ஊக்கப்படுத்துவதும், தோழரின் இலக்கியப் பிடிமானத்தையும், அவருடைய அமைப்புசார் ஈடுபாட்டையும் பறைசாற்றுகின்றன.
தோழர் சுஜித் ப்ரசங்க அவர்களின் ‘சாமிமலை’ நூல் குறித்த தன் மதிப்புரையை அவர் எனக்கு அனுப்பி படிக்கச் சொன்னதும், வாசித்து, நெகிழ்ந்து, மெய்ப்பும் பார்த்து, அதை நான் திருப்பி அனுப்பியதுமே, அவருடைய எழுத்துகளை நான் தொடரக் கிடைத்த வாய்ப்பாக அமைந்தது.
தொடர்ந்து தோழர் அருண்பாண்டியன் மனோகரனின் ‘அணங்கு’, தோழர் முருகேசனின் ‘தோலீஸ்வரர்’ ஆகிய நூல்கள் குறித்து அவர் எழுதியிருந்த மதிப்புரைகள், அவருடைய ஆழமான வாசிப்பு, அந்த நூல் தனக்குள் ஏற்படுத்திய பாதிப்புகளை அவர் வாசிப்புக்குள் பொருத்திச் சொல்லும் பாங்கு, ஒரு மதிப்புரைக்குள் தன் அனுபவங்களைப் பகிரும் படைப்பாற்றல், எந்த படைப்பும் சமூகத்துக்குச் செய்யும் பங்களிப்பு என்ன என்று கேள்வி எழுப்பும் அவருடைய சமூகக் கண்ணோட்டம், ஆகியவை சிலிர்ப்பூட்டுவனவாக இருந்தன. அவருடைய மதிப்புரைகளே என்னுள் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது, அவருடைய உணர்வுகளை வெளிப்படுத்தும் எதார்த்த எழுத்துகளின் வலிமை என்றே சொல்லவேண்டும்.
தன் மதிப்புரைகளைத் தொகுக்கப் போவதாக அவர் சொன்னபோது, அது சிறந்த ஒரு நூலாக இருக்கும் எனத் தோன்றியதால், மொத்த கட்டுரைகளையும் மெய்ப்புப் பார்ப்பதென முடிவு செய்து, சிலவற்றை செய்தும் கொடுத்தேன்.
நூல் ஆசிரியரும், அவரும், நாமும் சேர்ந்து உரையாடுவது போன்றே, எளிய மொழியில், நடையில், எழுதிய மதிப்புரைகளுக்கு ‘எழுத்துகளைப் பற்றி, சில வார்த்தைகள்..’ என இயல்பான ஒரு தலைப்பைத் தேர்வு செய்து, அடுத்தடுத்த தொகுதிகளாக அதைக் கொண்டு வர எண்ணி இருக்கும் கருப்பு அன்பரசன் தோழருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
நீங்களும் வாசியுங்கள்! உங்களை அவர் நூலுக்குள் மட்டுமல்ல, தன் வாழ்க்கைக்குள் மட்டுமல்ல, தன் களத்திற்கு மட்டுமல்ல, தன் கண்களால் படைப்பாளியின் உலகிற்குள்ளும் அழைத்துச் சென்று, வண்ண வண்ண உணர்வுகளைப் பிரதிபலிப்பார்..
அன்பும் வாழ்த்துகளும்!
நூலின் தகவல்கள்:-
நூல் : “எழுத்துக்களைப் பற்றி சில வார்த்தைகள்”
நூலாசிரியர் : கருப்பு அன்பரசன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
நூலினைப் பெற
தொடர்பு கொள்ளுங்கள்: 44 2433 2924
9444960935
விலை : ரூ. 140/-
நூலறிமுகம் எழுதியவர்:-
சாரதா தேவி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

