எழுத்துக்களைப்பற்றி சில வார்த்தைகள் - கருப்பு அன்பரசன் ( ezhuthukalai patri sila varthaigal - Karupu Anbarasan)

இருபதாண்டுகளுக்கு முன்பெல்லாம் தமிழிலக்கிய உலகில் விமர்சகர் என்ற ஒரு பிரிவினர் இருந்து வந்தனர். அவர்களது விமர்சனங்களைப் படித்து படைப்பாளர்கள் தம் படைப்புகளை மேம்படுத்திக் கொள்வதோ வாசகர்கள் வாசிப்பு முறையை மாற்றிக் கொள்வதோ என்றெதுவும் நடக்கவில்லை. மட்டுமல்ல அவர்களது அக்கறைப் பூர்வமான கருத்துக்களும் கூட சகட்டுமேனிக்கு காயலான்கடைப் பாத்திரங்களைப் போல அடித்து ஒடுக்கப்பட்டதால் பாவப்பட்டப் பிறவிகளாக ஒதுங்கிப் போனார்கள்.

அதே நேரம் வாசகர் நிலையிலேயே நின்று பரிந்துரைக்கப்படும் மதிப்பீடுகள் ஓரளவு கவனம் பெற்று வருகின்றன, முகநூல், வலைப்பூ போன்ற ஊடகங்களின் புண்ணியத்தால். அத்தகைய மதிப்புரைகளைத் தொகுத்து நூலாக வெளியிடும் போக்கும் தலைதூக்கி உள்ளது. அந்த வகையிலானது தான் தோழர் கருப்பு அன்பரசன் அவர்களது “எழுத்துகளைப் பற்றி சில வார்த்தைகள்”.

ஒரு படைப்பாக்க நூலுக்குரிய தகுதியுடன் இந்நூல் வெளியிடப்பட்டிருப்பது இசைவாக உள்ளது.

தான் வாசிக்கும் நூல்கள் பற்றி அன்பு தோழர் எழுதிய கட்டுரைகள் சிலவற்றை அவ்வப்போது முகநூலில் வாசித்ததில் அவை எனது கவனத்தை ஈர்த்தவை என்பதால் இந்நூலை ஆவலுடன் எதிர்பார்த்தேன். ஆவலை ஈடேற்றும் வகையிலேயே அமைந்துள்ளது எழுத்துக்களைப் பற்றி சில வார்த்தைகள்.

இலக்கியம் படைத்தல் – வாசித்தல் இரண்டுமே சமூக இயக்கத்தின் ஓர்பகுதியே என்ற ஒரே கருதுகோள் எனக்கும் அன்பு அவர்களுக்கும் இருப்பதால் தான் வாசித்த நூல்களைப் பற்றி அவர் சொல்வதோடு முற்ற முழுக்க உடன்பட முடிவதில் வியப்பேதும் இல்லை.

கொரானா பொதுமுடக்கம் தொடங்கி சுமார் ஓராண்டிற்கு முன்னர் வரை தான் வாசித்த 18 நூல்கள் குறித்து விரிவான அலசல் நடத்தியுள்ளார். தனக்கென சட்டகத்தை உருவாக்கி அதற்குள் தான் வாசித்தவற்றைப் பொருத்தி கருத்துரைக்காமல் மெய்யான வாசக அனுபவத்துடனே ஒவ்வொன்றையும் அணுகி இருப்பதால் சலிப்பூட்டாத சொல்முறை வெளிப்படுகிறது.

பெரும்பாலும் நாவல்களாக உள்ளன. நாவல் ஒவ்வொன்றின் ஊடாகவும் தனது வாழ்க்கைப் பார்வையை மட்டுமின்றி தனது வாழ்க்கை நிகழ்வுகள் ஊடாகவும் வாசித்த எழுத்துகளின் தாக்கத்தை எடுத்துரைக்கிறார். எனவே படைப்பை வெளியில் இருந்து பார்க்கும் தன்மையில் இருந்து விலகி வாழ்வனுபவமாக கடத்தும் இடத்தை அடைகிறது இந்த எழுத்து. நாவல்களில், கதைகளில் நிகழ்வதையொத்த நிகழ்வுகள் தனக்கு நேர்ந்ததையும் எழுதி உள்ளார். ஒரே நேரத்தில் படைப்பாளன் வாசகன் (அன்பு) இருவரது வாழ்வனுபவத்தை நாம் பெறுவதான பலனை அடைகிறோம். படைப்பாளனின் மொழியும், வாசிப்பாளின் மொழியும் முயங்கி வெளிப்படுவதை அங்கங்கே காணமுடிகிறது. இம்முறை மதிப்புரை இலக்கணத்திற்குப் புறம்பாக இருக்கலாம். ஆனால் வாசக நோக்கில் நல்லதோர் மயக்க உணர்வாகவே இருக்கிறது.

வெவ்வேறு களங்களில் எழுதப்பட்ட நூல்களைத் தெரிவு செய்து வாசித்து எழுதுவதால் சோர்வின்றி இந்த நூலை வாசிக்க முடிவதுடன் அவற்றை வாசிக்க வேண்டிய முக்கியத்துவத்தையும் அழுத்தமாக உணரச் செய்கிறது.

சிங்களம் என்பது தமிழுக்கு நேரெதிடை என்ற படிமம் நீண்ட அரசியல் வஞ்சகத்தால் எழுப்பட்டுள்ளது. ஆனால் இயல்பு வாழ்க்கையில் அடித்தட்டு சிங்கள மக்களின் வாழ்வும் தமிழ் மக்களின் வாழ்வும் மேற்படிமத்திற்கு அப்பால் நின்று இயங்குகின்றன என்பதை ரிஷான் ஷெரிப் மொழியாக்கத்தில் வெளி வந்துள்ள தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி எழுதியுள்ள பீடி என்ற நாவலை நேர்த்தியாக எடுத்தெழுதியுள்ளார். அதுபோலவே சிங்களச் சிறுகதைகளில் வெளிப்படும் பெண்ணுலகு பெரும்பான்மை ஆதிக்கச் சமூகத்தின் அடையாளம் எதையும் கொண்டிருப்பதில்லை என்பதையும் நுட்பமாக எடுத்துரைக்கிறார்.

தான் வாசித்த படைப்புலகினுள் ஓர் எல்லை வரை அழைத்துச் சென்று ஆவல் மேலிடும் கட்டத்தில் நிறுத்தி விட்டு நீங்கள் வாசித்துப் பாருங்கள் என்ற பரிந்துரையுடன் நிறுத்தி விடுகிறார். போக நூல்களை வாசித்த கணத்தில் தான் பெற்ற உணர்வுகளையும் அப்போதைய புறச்சூழலையும் நமக்குக் கடத்துவதால் அன்பரசன் நூலாசிரியராகவன்றி விமர்சன மேதாவித்தனம் ஏதுமின்றி வாசகத்தோழனாகவே நிற்கிறார். இத்தகைய நேர்மையான அணுகுமுறைக்காகவே கருப்பு அன்பரசன் எழுதியுள்ள நூல்களைப் பற்றிய நூலையும், அவரது எழுதத்துண்டிய 18 நூல்களையும் வாசிப்பது நமக்கோர் பன்முகப் பயிற்சியாகும்.

 

நூலின் தகவல்கள் 

நூல் : எழுத்துக்களைப் பற்றி சில வார்த்தைகள்” 

நூலாசிரியர் : கருப்பு அன்பரசன்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்

நூலினைப் பெற
தொடர்பு கொள்ளுங்கள்: 44 2433 2924 , 9444960935

விலை : ரூ. 140/-

 

எழுதியவர் 

போப்பு

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *