காஷ்மீர், நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள ஓர் எச்சரிக்கை – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச. வீரமணி)

காஷ்மீர், நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள ஓர் எச்சரிக்கை – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச. வீரமணி)

 

இந்திய நாடாளுமன்றம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்திடும் ஓர் இகழ்வாய்ந்த நடவடிக்கையை எடுத்து ஓராண்டு நிறைவடைகிறது என்பதை வரும் ஆகஸ்ட் 5 குறிக்கிறது. அதன் பிறகு கடந்த ஓராண்டு காலத்தில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்மு-காஷ்மீர் என்றும் லடாக் என்றும் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு, சிதைக்கப்பட்டிருக்கிறது.

இந்துத்துவா ஆட்சியாளர்கள், அரசமைப்புச்சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தின் அடிப்படையில் சுயாட்சி வழங்கப்படும் என்று அம்மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டபோது காஷ்மீர் மக்களுக்கு அளித்திட்ட உறுதிமொழியை,  ஒரேகையெழுத்தின்கீழ் மீறித் துரோகம் இழைத்துள்ளார்கள். மேலும், இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இருந்ததையே ஒழித்துக்கட்டும் விதத்திலும், அதன் மூலம் அம்மாநில மக்களை அவமானப்படுத்தும் விதத்தில் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறார்கள்.

அயோத்தி வழக்குக்கு காங்கிரஸ் ...

சட்டவிரோதமான அரசமைப்புச்சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருப்பதன் மூலமாக உள்துறை அமைச்சர், அமித் ஷாவிற்கு, ஏற்பட்டுள்ள வெற்றிச் செருக்கு என்பது இந்திய மாநிலங்களில் அளவுக்குமீறிய வளத்துடன் திகழ்ந்த முஸ்லீம்கள் பெரும்பான்மையுடன் வாழ்ந்த ஒரு மாநிலத்தை ஒழித்துக்கட்டிவிட்டோமென்பதன் வெளிப்படையான பகட்டாரவாரமாகும்.

காஷ்மீரின் கடந்த இருள்சூழ்ந்த ஓராண்டு நிறைவை அனுசரித்திடும் சமயத்தில் நாம் ஒருசில விஷயங்களை நினைவுகூர்ந்திட வேண்டியது அவசியமாகும். கடந்த ஓராண்டில் மாநிலமே ஒரு மிகப்பெரிய சிறைக்கூடமாக மாற்றப்பட்டிருக்கும் கொடூரமான செயல் நடந்தேறியிருக்கிறது. சுமார் 40 ஆயிரம் துருப்புக்கள் அங்கே நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றனர், மாநில அளவில் ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது,  மொபைல் போன் மற்றும் டெலிவிஷன் உட்பட அனைத்துத் தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டிருக்கின்றன, வீடுகளுக்கு வெளியே இயங்குவது தடைசெய்யப்பட்டிருக்கிறது, ஊடகங்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. பாஜக-வைத் தவிர இதர அரசியல்கட்சித் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் அனைவரும் மற்றும் பொது ஆளுமையுடனுள்ள அனைவரும் மிகக் கொடிய பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் எவ்வித எழுத்துபூர்வ ஆணைகளுமின்றி கைது செய்யப்பட்டிருக்கின்றனர், அல்லது, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இவ்வாறு ஜனநாயகம் மற்றும் ஜனநாயக உரிமைகளின் குரல்வளையை நெறிப்பதில், மோடி அரசாங்கம் புதிய வரலாறே படைத்திருக்கிறது. இணைய தொடர்பு (இன்டர்னெட்), பல மாதங்கள் முடக்கப்பட்டிருந்தது. இப்போதும், ஓராண்டு கழிந்தபின்னரும், காஷ்மீரில் 2ஜி நெட்வொர்க் மட்டுமே பயன்படுத்த முடியும். நாட்டின் இதர பகுதி மக்கள் பயன்படுத்துவதைப்போல 4ஜி நெட்வொர்க் பயன்படுத்த முடியாது. காஷ்மீர் மாநிலம் கடுமையான முறையில் முடக்கப்பட்டதானது, மாநிலத்தின் பொருளாதார நடவடிக்கைகளையும், வர்த்தக நடவடிக்கைகளையும் மிக மோசமாகப் பாதித்துள்ளது. இத்துடன் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுதும் ஏற்படுத்தப்பட்ட இரண்டாவது சமூக முடக்கமும் சேர்ந்து கொண்டதால், விவசாயிகள் மற்றும் சாமானிய மக்களின் வாழ்வாதாரங்கள் மிகவும் நொறுங்கிப்போய்விட்டன. சில தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளபோதிலும், பலர் இன்னமும் சிறையில் நீடிக்கிறார்கள், அல்லது, மெகபூபா முப்தி போன்று வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். சிறையிலிருந்து விடுவிக்கப் பட்டவர்களில் சிலர் வீட்டுக்காவலின்கீழ் இருப்பதும் தொடர்கிறது.

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று சமூக முடக்கக் காலத்தை, ஜம்மு-காஷ்மீரை ஒரு யூனியன் பிரதேசமாக மாற்றியமைத்திடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஆட்சியாளர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சிதைக்கப்பட்டுள்ள சட்டமன்றத்திற்கான தொகுதிகளைப் புதிதாக வரையறை செய்வதற்கான வேலைகள் தொடங்கப் பட்டிருக்கின்றன. ஒரு புதிய குடியேற்றக் கொள்கை திணிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, ஜம்மு-காஷ்மீருக்கு வெளியேயிருந்து நபர்கள் இங்கே குடியேற, குடியேற்ற அந்தஸ்து பெறமுடியும், இங்கே வேலைகள் மற்றும் நிலம் வாங்க முடியும். இது, காஷ்மீர் பள்ளத்தாக்கின் வரைபடத்தை மாற்றியமைப்பதற்கான திட்டத்தின் ஆரம்பமேயாகும். ஊடகக் கொள்கை ஒன்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது, ஊடகவியலாளர்களை மிரட்டிப் பணிய வைப்பதற்கான கேவலமான முயற்சியே தவிர வேறொன்றுமில்லை.

ஓராண்டு காலத்திற்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மீதான தாக்குதலை, ‘இது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குத்தானே, இதற்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை’ என்கிற மனோபாவத்துடன் பார்க்கக்கூடாது. ஜனநாயகத்தின் மீதும், மதச்சார்பின்மையின் மீதும், கூட்டாட்சித் தத்துவத்தின்மீதும் மோடி அரசாங்கம் அடுத்தடுத்துத் தொடர்ந்து அகில இந்திய அளவில் மேற்கொண்டிருக்கும் வெறித்தனமானத் தாக்குதல்களுக்கு இது ஒரு முன்னோடி நடவடிக்கையாகும்.

India grants Kashmir residency to outsiders as demographic ...

மோடி அரசாங்கம், ஜம்மு-காஷ்மீரை மாநில அந்தஸ்திலிருந்து, சிதைத்தபின் மேற்கொண்ட அடுத்த நடவடிக்கை என்பது நாடாளுமன்றத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றி இருப்பதாகும். இதனைத்தொடர்ந்து இதற்கெதிராகவும், தேசியக் குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும் நாடு முழுதும் நடைபெற்ற கிளர்ச்சிப் போராட்டங்கள்மீது ஒடுக்குமுறையை மேற்கொண்டதாகும். எதேச்சாதிகார ஆட்சியை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தையும், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் தேசத்துரோகப் பிரிவையும் மிகவும் விரிவான அளவில் பயன்படுத்தி,  மீளவும் செயல்படுத்தி இருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தியமை, இதற்கு முன்மாதிரியாகும். ஜம்மு-காஷ்மீரில் ஊடகவியலாளர்கள் மீது எவ்வாறு வழக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோ அவற்றைப் பின்பற்றியேதான் தற்போது நாடு முழுதும் பல மாநிலங்களிலும் ஊடகவியலாளர்கள் மீதும் வழக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஜம்மு-காஷ்மீரில் இரு ஊடகவியலாளர்கள் இன்னமும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் சிறையில் இருந்து வருகிறார்கள்.

இவ்வாறு ஆட்சியாளர்களிடமிருந்து எச்சரிக்கை மிகவும் தெளிவாகவே வந்திருக்கிறது. அதாவது, ஜம்மு-காஷ்மீருக்கு என்ன கதி ஏற்பட்டதோ அதேதான் நாட்டின் இதர பகுதிகளில் வாழும் மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளுக்கும், மாநிலங்களின் உரிமைகளுக்கும், மதச்சார்பின்மைக்கும் என்பதாகும்.

ஆகஸ்ட் 5, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான “பூமி பூஜை”-க்கான தேதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. வேண்டுமென்றேதான் இந்தத் தேதியை இந்துத்துவாவாதிகள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஜம்மு-காஷ்மீர் சிதைக்கப்பட்ட தினமும், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டப்படும் தினமும் இந்துத்துவாவாதிகளின் நிகழ்ச்சிநிரலின் மூலக்கூறின் ஓர் அங்கமாகும். பிரதமர் இந்துக்களுக்கான மதஞ்சார்ந்த இடத்தின் அடிக்கல்நாட்டுவிழாவில் கோவில் கட்டுவதற்கான முதல் செங்கல்லை நாட்டுகிறார். இதன்மூலம் நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைக்கு வேட்டு வைக்கிறார். இரண்டகமான காரணங்களைக்கூறி உச்சநீதிமன்றும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை சட்டபூர்வமாக்கி இருக்கிறது. உச்ச நீதிமன்றம், மசூதியை இடித்ததை “ஓர் ஆழமான சட்டமீறல்” என்று கூறும் அதேசமயத்தில், அதே இடத்தில் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கைக்கு முதன்மை அளித்து கோவில் கட்டுவதற்கும் அனுமதி வழங்கியிருக்கிறது.

PDP-NC upset as 25,000 people including over people from Dalit and ...

இதே உச்சநீதிமன்றத்திற்குத்தான், அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்படுவதற்கும், அதன்மூலம் ஒரு மாநிலம் சிதைக்கப்படுவதற்கும் வழிவகுத்திடும் அரசமைப்புச் சட்டத்திருத்தத்தின் மீது தீர்ப்பு வழங்குவதற்கு இன்னமும் நேரம் கிடைத்திடவில்லை. இது உச்சநீதிமன்றத்தின் மழுப்பலுக்கு மற்றுமோர் உதாரணமாகும்.

இந்துத்துவா சக்திகளின் தாக்குதல்கள் முற்றிலுமாக எதிர்த்து முறியடிக்கப்பட வேண்டும். ஜம்மு-காஷ்மீரைப் பொறுத்தவரை, அம்மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தும் மற்றும் மாநில அந்தஸ்தும் மீளவும் அளிக்கப்பட வேண்டும் என்பதில் ஓர் உறுதியான நிலைப்பாட்டினை மேற்கொள்ள பல மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் விருப்பமின்மையுடன் இருந்து வருவதை நாம் பார்த்து வருகிறோம். அவர்கள், இவ்விஷயத்தை, அங்கு கைது செய்யப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றும், ஜனநாயக உரிமைகளை மீளவும் அளித்திட வேண்டும் என்றும் கூறுவதுடன் தங்கள் கோரிக்கைகளைக் குறைத்துக்கொண்டிருக்கின்றன. இது ஓர் சமரச நிலைப்பாடாகும். ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றுக்கான போராட்டத்தைப் பொறுத்தவரை, வெட்டொன்று துண்டு இரண்டு என்கிற விதத்தில் நிலைப்பாட்டினை மேற்கொண்டிட வேண்டும். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்துடன் மாநில அந்தஸ்து மீளவும் ஒப்படைக்கப்பட வேண்டும். இதனைச் செய்யத் தவறுவது, இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடு என்று சொல்வதை மேலும் குறைத்துவிடும்.

(ஜூலை 29, 2020)

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *