காஷ்மீரில் வீட்டுக்கு ஒரு ராணுவ வீரர் பாதுகாப்புக்கு வெளியே நிற்பார். ஏன்? பாகிஸ்தான் அருகில் இருப்பதால். ஆனால் அதேபோன்று பஞ்சாபிலும் பாகிஸ்தான் எல்லை வருகிறது அங்கே ஏன் இதே போன்று ராணுவ வீரர்கள் இல்லை? இந்தக் கேள்வி மிக முக்கியமானது.
காஷ்மீரில் உண்மையிலேயே தீவிரவாதம் இருக்கிறதா? அப்படி கட்டமைத்து உலகிற்கு அறிவித்தது யார்?
நாடு சுதந்திரம் அடையும் தருவாயில் பாகிஸ்தான், இந்தியா என இரு நாடு பிரிகின்ற சூழலில் இருநாட்டு எல்லையையும் கடந்து பயணித்த மக்களை கொன்று குவித்தது மதவெறி. அதே போன்று காஷ்மீரில் நடைபெறவில்லையே ஏன்? பெரும்பான்மை மக்களாக இருந்த இஸ்லாமியர்கள் சிறுபான்மையாக இருந்த பண்டிட்டுகளை பாதுகாத்தார்கள். அப்படிப்பட்ட காஷ்மீர் மக்களா தீவிரவாதிகள்? எங்கேயோ இடிக்கிறதே. காஷ்மீர் மக்கள் தீவிரவாதிகள் என்று கட்டமைத்த கொள்கை எங்கிருந்து பிறந்தது? ஆம் அது பண்டிட்டுக்களிடமிருந்து தான் பிறந்தது. ஏன்? எதற்கு? எப்போது?
ஆம் இந்தியாவில் நிலச் சீர்திருத்தம் 1948ல் ஏற்பட்ட பொழுது முதன் முதலில் காஷ்மீரில் இருந்த நிலங்கள்தான் சாமானிய மக்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. அப்படி பிரித்துக் கொடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் குறிப்பிட்ட சில பண்டிட்டுகளிடம் மட்டுமே குவிந்து கிடந்தது. அதைப் பிரித்துக் கொடுத்ததன் விளைவு அந்தப் பண்டிட்டுகள் இஸ்லாமியச் சொந்தங்களை தீவிரவாதிகளாக சித்தரித்து இந்துத்துவ வெறிச் சிந்தனை கொண்ட அமைப்புகளிடையே கசிய விட்டனர். அதுதான் இப்போது வரை வீட்டுக்கு ஒரு ராணுவ வீரர் நிற்கும் அளவிற்கு தீவிரவாதச் சித்தாந்தம் கட்டமைக்கப்பட்டதற்கான முதல் காரணம்.
பின் காஷ்மீரில் வாழ்ந்த மக்கள் எல்லாம் எப்படிப்பட்டவர்கள்? ஆம் அவர்கள் சமய சார்பற்ற தன்மை கொண்ட மக்களாக வாழ்ந்திருந்தனர். அம்மக்கள் திரளில் கம்யூனிச சித்தாந்தம் பரவியிருந்தது. அதுதான் முதலாளித்துவ சிந்தனையாளர்களுக்கு பெரிய கிளியை ஏற்படுத்தியிருக்கு. விளைவு மக்களை பிரித்தாளக்கூடிய சூழ்ச்சியாய் தன்னந்தனிமையாக திறந்த சிறைச்சாலைக்குள் இருக்கும்படியாக காஷ்மீர் மக்களை பூட்டி வைத்தனர் நாட்டை ஆளும் ஆளும் வர்க்கத்தினர். அது சரி காஷ்மீர் மக்கள் சுதந்திரமாக பேசிக்கொள்ளவாவது முடியுமா? அங்கும் சிக்கல். அப்படி ஊடகத்தையோ அல்லது வெளியில் இருந்து வரக்கூடிய மக்களையோ காஷ்மீர் மக்கள் சந்தித்து பேசினால் விளைவு தீவிரவாதியாக கட்டமைத்து உள்ளே தள்ளி விடுவார்கள். ஏன் இந்த செய்தி எல்லாம் இந்திய மக்களுக்கு தெரிவதில்லை? ஏனெனில் ஊடகங்கள் வெளியே சொல்வதில்லை. மேலும் நாம் காஷ்மீர் எல்லையை தொட்டுவிட்டால் நமது செல்போன் வேலை செய்யாது. காஷ்மீருக்கு என்று தனி சிம்கார்டு வாங்க வேண்டும். அதிலேயே தான் அங்கே பேசிக் கொள்ள முடியும். நாட்டின் பிற பகுதியில் இருந்து காஷ்மீர் மக்களை நாம் தொடர்பு கொள்ள முடியாது. இது எவ்வளவு அபத்தமானது. இதை நான் நேரிலே கண்ணுற்றேன். ராணுவ வீரர்கள் வீட்டுக்கு வீடு வாசப்படியில் நிற்பதை கண்டு மிரண்டு போயிருக்கேன்.
அப்படி என்றால் காஷ்மீர் மக்களின் நிலை? ஆம் அவர்கள் இருக்கின்ற காஷ்மீர் திறந்த சிறைச்சாலை. நாம் கொரோனா காலத்தில் பட்ட வேதனைகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. அது கொரோனாவோடு முடிஞ்சு போனது. நாம் ஊரடங்கில் இருந்திருப்போம் அது சில நாள் சில மணி நேரம். நாட்டில் இன்றைக்கும் செல்போன் இல்லாமல் ஒரு குழந்தையும் தூங்குவதில்லை. ஆனால் காஷ்மீர் நிலை என்ன? எவ்வளவு காலத்திற்கு ஊரடங்கு இருக்கும்?; எத்தனை நாளுக்கு, எத்தனை மாதத்திற்கு இணைய வசதி துண்டிக்கப்பட்டு இருக்கும்? அப்போதெல்லாம் அவர்களின் நிலை என்ன?அவர்களால் தொலைக்காட்சி பார்க்க முடியுமா? இணைய வழியில் கல்வி கற்கின்ற மாணவர்கள் தேர்வு எழுதிவிட்டு அல்லது தேர்வுக்காக விண்ணப்பித்து விட்டு காத்திருக்கின்ற சூழலில் இணையம் துண்டிக்கப்பட்டால் அவர்களுக்கான தகவல் யார் கொடுப்பது? இன்று காஷ்மீர் மாணவர்கள் சுதந்திரமாக படிக்க முடிகிறதா? அல்லது அவர்களுக்கான வேலை வாய்ப்பு தான் என்ன? நிறைய படித்த இளைஞர்கள் அங்கே டீ விற்றுக் கொண்டிருந்த காட்சியை கண்டு கொள்கிறார் களப்பிரன் தோழர். இந்திய பிரதமர் கூட டீ விற்றவர் தானே என்று நகைச்சுவையாக பேசிக் கொள்ளும் காட்சி நூலில் வருகிறது.
இந்தியாவின் சராசரி வேலைவாய்ப்பற்ற நிலைமையை விட காஷ்மீரில் அதிகமாக இருப்பது ஏன்? எல்லாவற்றுக்கும் விடை காஷ்மீர் மக்களின் வாழ்வில் பூட்டு போட்ட ஆளும் வர்க்கத்தின் துரோகமே.
இப்போதும் காஷ்மீர் மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் யார்? ஆம் #கம்யூனிஸ்டுகளே. #சிபிஎம்இன் #சட்டமன்றஉறுப்பினர் #தோழர் #யூசுஃப்தாரிகாமி அவர்கள் இப்போதும் அங்கே குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்தத் தகவல்கள் எல்லாம் தமிழ்நாட்டில் இருந்து தனி ஒரு நபராக காஷ்மீர் சென்று பலம்வாய்ந்த, பல சுற்று இராணுவ கோட்டைகளைத் தாண்டி காஷ்மீர் எம் எல் ஏ தோழர் யூசுஃப் தாரிகாமி அவர்களை சந்தித்து அவர்களிடம் அரசியல் பிரிவு 370 நீக்கியதற்கான காரணம் என்ன? அங்கே இருக்கும் மக்களின் வாழ்நிலை எப்படி இப்போது இருக்கிறது? உள்ளிட்டு இரண்டு மணி நேரம் அவரோடு உரையாடிய தோழர் களப்பிரன் அவர்களிடமிருந்து தான் இந்தச் செய்தி.
காஷ்மீரில் நாம் தனியாக சென்றால் முடியாது. ஆனால் தோழர் களப்பிரன் அவர்கள் புல்லட் எடுத்துக்கொண்டு காஷ்மீரைச் சுற்றி வந்திருக்கிறார். ஆப்பிள் தோட்டத்தில் வேலை செய்த இளைஞரிடம் பேசியிருக்கிறார். காஷ்மீர் மக்களோடு உரையாடி இருக்கிறார். அவர்களின் வலியை உணர்ந்து மூச்சு விட முடியாமல் திணறி இருக்கிறார். இந்தியாவிலிருந்து ராணுவ வீரர்களாக செல்கின்றவர்களுக்கு கட்டமைக்கப்பட்ட செய்திகள் என்னவென்றால் காஷ்மீர் மக்கள் மோசமானவர்கள் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று. அதையும் ஒரு ராணுவ வீரரிடம் இருந்து அனுபவம் பெறுகிறார் தோழர் களப்பிரன் அவர்கள்.
மொத்தத்தில் நம்மிடம் காஷ்மீர் பற்றிய பொத்தாம் பொதுவாக, பொது புத்திச் சார்ந்து கட்டமைக்கப்பட்டிருக்கின்ற கருத்துக்களை தவிடு பொடியாக்கும் கருவிதான் இந்நூல். 48 பக்கமே கொண்ட நூல் இது. ஆனால் ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடக்கிறது. ரஷ்யாவைப் பற்றி காஷ்மீர் மக்கள் கண்டு கொண்ட விதம் என்ன; காஷ்மீர் எல்லையில் இருந்து பாகிஸ்தான் அருகில் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிற கிராமத்தினுடைய நிலை என்ன; நாம் தால் ஏரியிலும், குல்மார்க்கிலும், பனிச்சறுக்கு விளையாட்டிலும் விளையாடி மகிழ்ந்து வந்திருக்கிறோம். ஆனால் நம் காஷ்மீர் மக்கள் எவ்வளவு வலியோடு இருக்கிறார்கள் என்பதை நாம் கண்டு கொண்டோமோ? எல்லாவற்றையும் போட்டு உடைக்கிறார் தோழர் களப்பிரன் அவர்கள். வாருங்கள் இந்நூலில் இருக்கின்ற தகவல் களஞ்சியங்களை, காஷ்மீர் மக்களின் வாழ்வியலை, கண்ணாடியில் தெரியும் முகம் போல் இந்நூல் நமக்கு திறந்த புத்தகமாக காட்டிவிடுகிறது.
காஷ்மீரின் அரசியல் பிரிவு சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 ஏன் இருக்க வேண்டும்? மன்னர் ஹரி சிங்கின் நிலை என்ன? ஷேக் அப்துல்லா அவர்களின் பணி என்ன? கம்யூனிஸ்டுகளின் சித்தாந்தம் அங்கே எப்படி வேலை செய்தது? கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக முதலாளித்துவ சித்தாந்தம் அங்கே என்ன செய்து தீவிரவாதம் என்ற போர்வையை ஊதி பெரிதாக்கியது? இவை எல்லாவற்றிக்கும் விடை இருக்கிறது. அவசியம் வாசியுங்கள் தோழர்களே இந்நூலை.
மிகச் சிறப்பான கள அனுபவத்தை வழங்கிய தோழர் #களப்பிரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி! இன்னுலுக்கு மிகவும் சிறப்பான ஒரு அணிந்துரை வழங்கிய தோழர் Aadhavan Dheetchanya அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
இந்த நேரத்தில் இந்நூல் மக்களிடம் பரவலாகச் சென்று சேர வேண்டும்.
வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!
நூலின் தகவல்கள்
நூல் : காஷ்மீர் குருதியால் சிவக்கும் ஆப்பிள்
ஆசிரியர் : களப்பிரன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
ஆண்டு : ஜனவரி 2024
விலை : ரூ. 50
நூலைப் பெற : 44 2433 2924
எழுதியவர்
இரா. சண்முகசாமி
புதுச்சேரி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.