வாழ்வு எல்லோருக்கும் பூங்கொத்துகளையும் மலர்களையும் மட்டுமே வைத்து காத்திருப்பதில்லை என்பதுதான் நிதர்சனம். ஆனாலும் என் ஞாபக அடுக்குகளில் இவ்வளவு துயருற்ற ஒரு பெண்ணை நான் பார்த்ததே இல்லை.
வயதிற்கும் பருவத்திற்கும் ஏற்றார்போல் எல்லா மனிதர்களுக்குள்ளும் சில சந்தோஷங்களும் துக்கங்களும் இருக்கலாம்.
சிலர் அதன் கொடூரமான பற்சக்கரங்களுக்கிடையில் சிக்காமலேயே வாழ்ந்து தீர்த்து விடுவதும் உண்டு.
இந்தப்புத்தகத்தின் முன்னுரையை இப்படித்தான் தொடங்குகிறார் கே.வி.ஷைலஜா……
இதோ இப்போது என் வாழ்வில் புது விடியல் வந்துவிட்டது என்று மகிழும் வேளையில் பெரிய இடி காத்திருக்கும்…..
வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு பருவத்தையும் அசாத்தியமாக எதிர்கொள்கிறார் உமா பிரேமன் என்ற இந்த மனுஷி.
உமா பிரேமன்
இந்தப் புத்தகம் கடைசியாக இப்படி முடிகிறது….
கடந்தகாலக் காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக எப்போதும் என்னுடனே இருக்கின்றன. மீண்டும் திரும்பிப் பார்க்க பிடிக்காத பல காட்சிகள்.
காலத்தைப் பின்னோக்கி திருப்பிவிட முடியாது. அப்படி முடியுமானால் சில காட்சிகளையாவது தவிர்த்திருக்கலாம்.
விரும்பாத காட்சிகளையாவது வாழ்விலிருந்து இல்லாமலாக்கி இருக்கலாம்.
வாழ்க்கையில் இதுவரை நடந்தவற்றையும் நடக்கவிருப்பதையும் தவிர்க்கவியலாத விதிக்கப்பட்ட முழுமையாய் நம்பவே எனக்குப் பிடிக்கிறது.
வாழ்க்கையில் சந்தோஷமும் துக்கமும் காயங்களும் இருக்கலாம்.
பல நேரங்களில் யாரிடமாவது இதயம் திறந்து பேசி துக்கங்களைப் பரிமாற விருப்பமிருத்கிறது. ஆனால் யாருடன் ? வாழ்க்கை ஒரு கேள்விக்குறியாக மாறிய நாட்களில் நான் சுவர்களிடம் பேசினேன்.
என் எண்ணங்கள், எதிர்பார்ப்புகள், மோகங்கள் எல்லாவற்றையும்
அதுதான் கேட்டிருக்கிறது.
கடந்தகாலத்தின் ஒவ்வொரு சம்பவமும்ஒவ்வொரு காட்சியாய் என்னுடனே ஒன்றன்பின் ஒன்றாக நிற்பது அதனாலேதானிருக்கும்.
என்ன செய்யவேண்டுமென்று தெரியாமல் மரத்துபோய் நின்ற நாட்களில் உள்ளேயிருந்து யாரோ மந்திரித்தபடி இருந்தார்கள்.
எதிர்பார்ப்புகள்தான் நம் முதலீடு, அதை கைவிடாமலிருக்க வேண்டும்.
கடந்தகாலம் மிக யதார்த்தமான ஒன்று அதை அப்படியே அங்கீகரித்தே ஆகவேண்டும்.
கடந்துபோன நாட்களின் அன்பில்லாமையும், குற்றப்படுத்தல்களும் பரிகாசங்களும் என்னை வேட்டையாடுவதில்லை. அது உருவாக்கின நோவுகள் எதுவும் என்னைத் தீண்டுவதுமில்லை.
நான்கு சுவர்களுக்குள்ளாக நான் என் கடந்த காலத்தை மூடி வைத்திருக்கிறேன்.
எழுத்தாளர் கே.வி.ஷைலஜா
அதன் வெளி உலகமே இந்த என் வாழ்க்கை
நினைத்த எல்லாவற்றையும் யாரையும் காயப்படுத்தாமல் செய்ய
ஆசைப்படுகிறேன். எந்தவொரு காரியத்தையும் கனவாய் மாற்றி
இமைகளில் சுமக்க விடுவதில் பிரியமில்லாத நான் அதை அப்போதே
நிகழ்த்திப் பார்த்துவிடுகிறேன். அதனால் கனவென்று ஏதும் இப்போது
என்னிடமில்லை. ஏக்கங்கள் இல்லை, ஆசைகள் இல்லை, துக்கங்கள்
இல்லை, பச்சாதாபமில்லை, கழிவிரக்கமில்லை, யாரோடும் எந்தக்
குறையுமில்லை.
கால் ஊன்றி நிற்க பூமி இல்லாமல், எங்கே தலை சாய்ப்பது என்று
புரியாமல் திகைத்து அனாதையாய் நின்ற நாட்களிலிருந்து, துக்கத்தின்
வழியினூடாக நடந்தாலும் என் தடத்தை மாற்றிவைத்து இடறாமல்
நீங்கிக் கொண்டிருக்கின்றன என் காலடிகள்.
இந்த இடத்தில் முடிகிறது புத்தகம்.
எனக்கு இந்த வாழ்க்கையிலிருந்து விடிவே இல்லையா, என்னை மட்டும் ஏன் வந்த வாழ்க்கை இப்படி படுத்துகிறது என்று மனதிற்குள் புலம்பும் ஒவ்வொருவரும், புலம்புவதற்கு முன் உமாதேவி என்ற உமா பிரேமன் வாழ்க்கையை வாசித்துவிடுங்கள்….
வாசித்தபின், இந்த வாழ்க்கை எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது என்பதையும், வாழ்க்கையின் மீது உருவாக்கும் பிடிப்பையும் உணர்வீர்கள்.
உங்களுக்கு உங்களை பிடிக்கும்….
கதை கேட்கும் சுவர்கள்
மலையாள மூலம்: ஷாபு கிளிதட்டில்
தமிழில்: கே.வி.ஷைலஜா
வெளியீடு வம்சி பதிப்பகம்
பா லோகநாதன்
தர்மபுரி தகடூர் புத்தகப் பேரவை குழுவில் இருந்து