கதை சொல்லிகளின் கதைகள் – நூல் அறிமுகம்
எழுத்தாளர் என்பவர் எப்படி உருவாகிறார்? யாரெல்லாம் எழுத முடியும்? யாருக்காக எழுத்தாளர்கள் எழுத ஆரம்பிக்கிறார்கள்? என்ற வினாக்களுக்கான விடையை இந்த நூல் அழகாக எடுத்துரைக்கிறது.
எப்படிப்பட்டவர் ஒரு சிறந்த எழுத்தாளராக தன்னை உருவாக்கிக் கொள்கிறார் என்பதையும் எழுத்தாளர் ஆவதற்கான சூழல்கள் எப்படி உருவாகின்றன என்பதும் இந்த நூலில் காணக் கிடைக்கின்றன.
ஒவ்வொரு கதை சொல்லிகளுக்குள்ளும் ஒரு மிகச்சிறந்த தாய்மைப் பண்பும் அன்பை விதைக்கும் மகத்துவம் நிறைந்த உள்ளமும் காணக் கிடைக்கின்றன. தான் கூறும் ஒவ்வொரு கதைகளும் தான் எழுதும் ஒவ்வொரு நூலும் குழந்தைகளை அமைதியின் பக்கமும் ஒற்றுமையின் பக்கமும் இழுத்துச் சென்று அவர்களுக்குள் அன்பை மட்டுமே மையப்படுத்துவதில் முக்கியத்துவம் தருவதாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் எழுதத் துவங்கும் கதை சொல்லிகளின் கதைகளை வாசிக்கையில் சாதாரண எளிய மனங்களுக்குள்ளும் உலகை நேசிக்கும் பேரன்பு பிறந்து விடுவதை உணர முடிகிறது.
வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற சிறார் கதை எழுத்தாளர்கள் எப்படி உருவானார்கள் என்பதையும் அவர்கள் தங்களின் திறமையை, எழுத்தை எப்பொழுது கண்டு கொண்டார்கள் என்பதையும் இந்த நூல் அழகுற விவரிக்கிறது.
மார்க் தி பெல் பெல்ஜியம்
அயா கலீல் எகிப்து
பெவர்லி க்ளியரி அமெரிக்கா இன்னோசண்டோ நாகரா இந்தோனேசியா
மிசேல் கமன்கெங் தென்னாப்பிரிக்கா
சோனியா நிமிர் பாலஸ்தீனம் கியானி ரோட்டாரி இத்தாலி
அந்துவான் எச்சுபெரி பிரான்ஸ்
தக்ரீத் நஜ்ஜார் ஜோர்டான் யாங்க்சோக் சோய் தென்கொரியா கின்வென்சின் சீனா
அம்ரா ஆலம் பாகிஸ்தான்
கெயில் லுக்காப் அமெரிக்கா
மார்கட் லீ செட்டர்லி அமெரிக்கா ரோலண்ட் டால் இங்கிலாந்து
அனா மரியா மச்சோடா பிரேசில்
கதை சொல்லிகளாக இருந்து குழந்தைகளை மகிழ்விக்கும் பணியை மகிழ்ச்சியுடனும் மனவிருப்பத்தின் பெயரிலும் செய்திருக்கும் இந்த 16 பேரும் ஒரு கட்டத்தில் தங்கள் கூறிய கதைகளை நூல்களாக தொகுத்து வெளியிட்டால் மேலும் பல குழந்தைகளுக்கு புதியதொரு பாதை கிடைக்கும் என்ற தொலைநோக்குப் பார்வையிலேயே எழுத்தாளர்களாக உருமாறி இருக்கிறார்கள்
மாணவர்கள் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்தும் அடுத்தவர்கள் மனதை துன்புறுத்தியும் வாழ்ந்து வருவதைக் காண சகிக்காமல் அவர்களை அமைதிப்படுத்துவதற்காக கதை சொல்லத் தொடங்கும் ஓர் ஆசிரியர் உலகின் தலைசிறந்த எழுத்தாளராக மாறுகிறார்
அகதியாக வெளிநாட்டிற்குச் செல்லும் முஸ்லிம் சிறுமி வெள்ளை இன வாதத்தால் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகிறாள். தனது நிலையையே மற்றவர்களுக்கு ஒரு பாடமாக கதையின் வடிவில் சொல்லத் துவங்கும் அவருக்கு நிறைய குழந்தைகளின் மனதில் மாற்றங்களை விதைப்பதற்கான எழுத்தாளர் உருவாகிறார்.
வகுப்பில் நூல்களை வாசிக்க முடியாமல் தடுமாறிய சிறுமி நூல்களை வாசித்துப் பழகுவதற்காக நூலகத்திற்குள் காலடி வைக்கிறார் கொஞ்ச காலகட்டத்தில் அவருடைய நூல்களே அந்த நூலகத்தில் அணிவகுத்து இருக்கின்றன.
தனது மகனுக்கு மொழியை கற்றுத் தர படத்தின் மூலம் நூலை உருவாக்கிய ஒருவரது கதை கூறும் பாங்கு நூலில் அவர் கூறியிருக்கும் சமூகத்தை அறிமுகம் செய்யும் விதம் நண்பர்களின் வாயிலாக எல்லோருக்கும் கடத்தப்படுகிறது. 200க்கும் மேற்பட்ட நூல்களை எழுதும் சிறார் எழுத்தாளராக அவர் உருமாறுகிறார்
கடல் அலை தன்னை விழுங்கி விடும் என பயந்த ஐந்து வயது சிறுமி பயத்தை வெல்வது எப்படி என சிந்திக்கிறார் அதையே தனது கிறுக்கல்களின் மூலம் எழுதத் துவங்குகிறார். தனது 9 வயதில் நான்கு நூல்களை எழுதி வெளியிடுகிறார் அந்தச் சிறுமி. நூலை வாசிக்கத் தெரிந்த எவராலும் நூலை எழுத முடியும். நூலை எழுத முடிந்த எவராலும் இந்த உலகத்தையே மாற்ற முடியும் என்ற உயர்ந்த தத்துவத்திற்கு சொந்தக்காரரான அந்தச் சிறுமி அதன் பிறகு எண்ணற்ற மாணவர்களுக்கு கதை சொல்லியாக சிறந்த எழுத்தாளராக உருமாறுகிறார்.
தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடி சிறை சென்ற பெண் சிறையிலேயே கதை எழுதுகிறார் சிறைத்துறை அதிகாரிகள் அவளது கதையை கிழித்தெறிகிறார்கள். விடுதலையானதும் அகதிகள் முகாம்களில் குழந்தைகளுக்கு சிறந்த கதை சொல்லியாக மாறுகிறார். கிராமங்களிலும் வீடுகளிலும் தாத்தா பாட்டிகள் எப்படி கதை சொல்வார்கள் என்பதையே மையமாக வைத்து தனது முனைவர் பட்டத்தை பெரும் அவர் நிறைய கதை நூல்களை சிறார்களுக்காக எழுதத் துவங்குகிறார்
பாசிச வாதிகளின் கொடுமைகளைக் கண்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும் என குழந்தைகளுக்கான எழுத்தாளராக மாறுகிறார் ஓர் ஆசிரியர்.
விமானப் போட்டியில் தொடர்ச்சியாக 20 மணி நேரத்திற்கு மேலாக விமானம் ஓட்டிய விமானி பாலைவனத்தில் விபத்திற்குள்ளாகிறார் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் யாரும் அவரை பார்க்கவும் இல்லை காப்பாற்றவும் இல்லை. நான்காம் நாள் சாதாரண ஒரு மனிதன் அவரை காப்பாற்றி விடுகிறான். தனது மூன்று நாள் தவிப்பை குழந்தைகளுக்கான நாவலாக எழுதுகிறார். லிட்டில் பிரின்ஸ் என்ற அந்த நூல் 345 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மாபெரும் உலக சாதனையை நிகழ்த்துகிறது.
தாயை இழந்துவிட்ட சிறுமி உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்க்கப்படுகிறாள். அறையில் யாருடனும் பேச முடியாத கட்டுப்பாடான தருணத்தில் தன்னை இளைப்பாற்றிக் கொள்ள நூல்களிடம் தஞ்சம் அடைகிறார். தான் வாசித்த நூல்களை அறையில் உள்ளவர்களுக்கும் கிசுகிசுப்பான மொழியில் சொல்லத் துவங்கிய அவர் மிகப்பெரும் கதை சொல்லியாக மாறுகிறார். அதையே புத்தகமாகவும் வெளியிடுகிறார்
தனது ஓவியத் திறமையினாலேயே நூல்களை எழுதி வெற்றியடைந்தவரும் இந்த நூலில் தென்படுகிறார்
கல்வி வாசனை அறியாத மலைக் கிராம மக்களுக்கு எழுதப் படிக்க கற்றுத் தந்த அனுபவங்களை நூல்களாக எழுதி தன்னை நேசித்த மலை கிராம சிறுவர்களையே தனது கதையெங்கும் உலவ விடுகிறார் ஒரு சிறார் எழுத்தாளர்.
இன்றைய குழந்தைகள் தாய் மொழியை வாசிப்பதே இல்லையே என்ற ஏக்கத்தில் நூலாசிரியராக மாறிப்போன தாயின் ஏக்கம் அவரை சிறந்த இரு நாடுகளை இணைக்கும் ஒற்றுமை எழுத்தாளராக மாற்றி விடுகிறது.
பாலின மாற்றம் தொடர்பாக குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டிய அவசியத்தை குறித்து பெண்ணாய் பிறந்து ஆணாய் மாறி தான் அனுபவித்த வலியையும் வேதனையையும் குழந்தைகளுக்கு கடத்துவதில் மிகச்சிறந்த பங்காற்றி சிறார் எழுத்தாளராக உருமாறுகிறார் ஒரு மூன்றாம் பாலினத்தவர்.
நாசா விண்வெளி நிலையத்தில் கணிப்பொறிகளாக பணிபுரிந்த கருப்பின பெண்களைப் பற்றிய தொகுப்பு நூல்களை எழுதி ஒவ்வொரு கருப்பின பெண் குழந்தைகளுக்கும் உற்சாகமூட்டி உலகில் தாங்களும் மதிக்கத்தக்கவர்களே என்பதை அவர்களுக்கு உணர்த்தியவர் ஓர் மிகச் சிறந்த அமெரிக்க எழுத்தாளர்.
இப்படியாக வறுமையில் இருந்து எழுதியவர்கள் அன்பை சொல்லித் தர எழுதியவர்கள் சொல்லிய கதையையே எழுத்தாக மாற்றியவர்கள் தாயாக இருந்து தனது பிள்ளையை அன்பினால் நேசிப்பதற்காக எழுதியவர்கள் வளமிகு சமுதாயம் உருவாக வேண்டும் என்ற பேரன்பினால் ஆசிரியராக இருந்து எழுதியவர்கள் சிறைக்குள் இருந்தாலும் மானுட நேயத்தை உலகமெங்கும் பரப்ப வேண்டும் என்று உயர்ந்த சிந்தனையில் எழுதியவர்கள் தனது தன்னம்பிக்கையை சிறார்களுக்கு கடத்துவதற்காக எழுதியவர்கள் பயந்து பயந்து பிழைத்த தனது குழந்தைத்தனத்தை எல்லோருக்கும் அறியும் வண்ணம் எழுதி பயத்தை போக்குவதற்காக எழுத்தை கை பிடித்தவர்கள் என சுவாரசியமான கதை சொல்லிகள் உருமாறிய அற்புத தருணத்தை இந்த நூல் நமக்கு அறியத் தருகிறது.
நூலின் தகவல்கள் :
நூல் : கதை சொல்லிகளின் கதைகள்
ஆசிரியர் : இ.பா.சிந்தன்
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன்
முதல் பதிப்பு : ஜூலை 2024
பக்கம் : 84
விலை : ரூபாய் 65
நூல் அறிமுகம் எழுதியவர் :
இளையவன் சிவா
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

