மதியம் 1.30 மணிக்கு, புறப்பட தயார் நிலையில் இருந்த.. பெங்களூரு செல்லும் இன்டெர்சிட்டி எக்ஸ்பிரஸில், குமார் ஒற்றை சீட்டில் அமர்ந்திருந்தான்.. எதிர் சீட்டில் யார் வருவார்களோ என ஆவலோடு காத்திருக்க, கடைசி நொடியில் ஒரு அழகிய இளம் பெண், ஏறுவதை கண்டு அனைத்து ஆண்களின் விழிகளும் மெர்குரி பல்பு போல் பிரகாச மடைந்தது.
அவள் தன் இருக்கை எண்ணை தேடியபடி, அவனை நெருங்க, அவன் இதய துடிப்பு எகிறியது… என்ன ஆச்சர்யம் அவள், எக்ஸ்கியூஸ் மீ என்ற படி, எதிர் ஒற்றை சீட்டில் அமர அவன் குஷியானான். அவள் தன் சீலையை ஒழுங்குபடுத்தி அமர ரயில் வேகமெடுத்தது.
குமார் மாநிறத்தில் சற்றே பல்லெடுப்பாக ஆரம்பகால நடிகர் சார்லி போன்ற சுமாரான தோற்றம் கொண்ட இளைஞன். சற்றே சபலிஸ்ட பேர்வழி வசதியானவன். அண்மையில் பெங்களூரில் சுமாரான அழகுடைய, வசதியான குடும்பத்து பெண்ணை, மணமுடித்து, ஆடிக்கு தாய் வீடு சென்றவளை, கூட்டி வர சென்று கொண்டிருக்கிறான்.
கையில் வைர மோதிரம், கனமான பிரேஸ்லெட், மைனர் செயின், ரோலக்ஸ் வாட்ச், சகிதம், அந்த பெண்ணை வைத்த கண் வாங்காமல் பார்த்திருக்க .. அந்த, யுவதியோ ஆரம்பகால நடிகை மீனாபோல் சர்வ லட்சணமாய் அலட்சிய பார்வையுடன் திருக்குறள் புத்தகம் படித்து கொண்டிருந்தாள் (அது மொபைல் இல்லாத காலம் )..
அவளுடன் பேச குமாருக்கு கொள்ளை ஆசை, பார்த்தால் ராங்கிகாரி மாதிரி தெரிகிறாள், எதாவது ஏடாகூடமாய் சொல்லப்போய் , விவகாரத்தில் மாட்டிகொள்வோமோ என்ற பயம் வேறு.. வண்டி கொசஸ்தலை ஆற்று பாலம் மேல் ஊர்ந்து கொண்டிருக்க, தடதடப்பு அதிகரித்தது.
அவள் கால்மேல்கால்போட எத்தனிக்க, வண்டியின் ஓட்டத்தால் பாலன்ஸ் இழந்து அவன் மேல், அவள் லேசாக உராய, “செத்துவிட தோணியது” குமாருக்கு,… அவள் சுதாரித்துக்கொண்டு, “சாரி”, என்றாள் சிறிய புன்சிரிப்புடன்.. இவனோ அவள் குரல்கேட்ட இன்ப அதிர்ச்சியில்” பரவாயில்லைங்க, ரயில்ல இதெல்லாம் சகஜம் “என்று வழிய, அவள் வள்ளுவனை மீண்டும் ஆராய தொடங்கினாள். அவனுக்கு சற்றே தைரியம் வர, சகஜமாக பிரீயாக அமர்ந்தான்.
இப்போது அவன் முழங்கால்கள், அவள் புடவை கொசுவத்தை பலமுறை, வண்டியின் வேகத்துக்கு ஏற்ப மயிலிறகு போல் வருடியது.. அவள் இதை கவனிப்பதாகவே தெரியவில்லை.. அவன் துணிச்சலும் அதிகரிக்க, “தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால், தீபத்தின் பெருமை அன்றோ? “என மெல்லிய குரலில், அவளுக்கு மட்டுமே கேட்கும் படி பாட, அவள் விழிகள் இவனை ஓரிரு வினாடி சந்தித்து பிரிந்தது, அது எந்த உணர்வையும் காட்டவில்லை, ஆனால் கோபம் அதில் இல்லை என்பதை உணர்ந்து, இன்புற்றான்.
இரயில், காட்பாடியை நெருங்க, அவள் பூவினும் மெல்லிய குரலில் “சார், வண்டி நின்றதும், இந்த வாட்டர் பாட்டிலில், கொஞ்சம் தண்ணீர் பிடித்து தர முடியுமா? “என்று ஒரு ஸ்நேகா பாவத்துடன் கேட்க, அவர்களிடையே இருந்த இரும்பு திரை, உடைந்து சுக்கு நூறாகியது,.. அவன்…. கூல் ட்ரின்க்ஸ், பஜ்ஜி சகிதம் வாங்கி வர , அவள் மறுப்பேதும் சொல்லாமல் அவற்றை அவனுடன் பகிர, நட்பு மலர தொடங்கியது..
அவள், மெள்ள மெள்ள இவனுடன் பேச தொடங்க, தனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை என புளுகி, அவள் காதலை பெற
முயற்சித்தான்.. அவளும் “சார் நீங்கள் நல்லா, பெர்சனாலிட்டியா! கமல் மாதிரி இருக்கீங்க.. எனக்கும் திருமணம் இன்னும் ஆகவில்லை, உங்களை எனக்கு மிகவும் பிடித்து விட்டது” என்று ஏதேதோ கூற, இருவருக்கும் இடைவெளி குறைய தொடங்கியது, அன்று செவ்வாய் கிழமை என்பதால், அவ்வளவாக ரயிலில், கூட்ட நெரிசலும் இல்லை..
அவளிடம் “நான் ஒரு பெரிய பிசினஸ் மாக்னெட், இப்போதுகூட, வியாபார விஷயமாய் பெங்களூர் செல்கிறேன் “என்று கூறி, தன் பெட்டியில் இப்போதும் இரண்டு லட்சம் (தன் மாமனார் ஊரில்.. சீப்பாக விலைக்கு வந்த வீட்டை வாங்க.. அம்மா கொடுத்தனுப்பிய பணம் ) உள்ளதாக பீற்றிக்கொள்ள… இருவரும் நெருங்கி சிரித்து, ஏ ஜோக்ஸ் பகிர்ந்து.. சந்தோஷிக்க, இரயில் ஜோலார்பேட்டையை நெருங்கியது..
அவள் தன் ஹாண்ட் பாக்கில் இருந்து இரண்டு காட்பரீஸ், சாக்லேட் எடுத்து, “நல்ல விஷயங்கள் நடக்கும் போது, ஸ்வீட் சாப்பிட வேண்டும் !என்று என் அம்மா அடிக்கடி சொல்வார்கள், ஸ்வீட் எடுத்து கொண்டாடுவோமா” என்று கூறி, அவனிடம் ஒன்றை கொடுத்து, தானும் ஒன்றை சாப்பிட்டாள்..
அவ்வளவுதான்… அவன் மதி மயங்கி சொர்க்கபுரியில், அவளுடன் சினிமா பாணியில் டூயட் பாடிக்கொண்டே… சஞ்சரிக்க தொடங்கினான்…
முகத்தில் தண்ணீர் அடிக்கப்பட , குமார் அரை மயக்கத்தில் கண்விழித்து பார்க்க, ஒரு கன்னட போர்ட்டர்” ஏனு சாமி, பெங்களூரூ ஆகிதி..பொட்டி படுக்க இருந்தா குடுங்கோ, ஆட்டோ புடிச்சி தரேன்” என மணிப்ரவாளமாய் கூற, சற்றே சுதாரித்து எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தான் குமார்..
தான் அணிந்திருந்த வாட்ச், நகைகள், பணப்பெட்டி அனைத்தும் அபேஸ் பண்ணிக்கொண்டு, மீனா நழுவி சென்றதை எண்ணி , அழுகை பீறிட இங்கும் அங்கும் பார்த்தான்.. எல்லாம் ஸ்வாகா.. சட்டை பையில் ஒரு கிரீட்டிங் கவர் இருந்தது.. அதை பிரித்த போது, ஒரு வெள்ளை தாளும், ஐந்து ரூபாய் பழைய நோட்டும் இருந்தது.. அந்த பேப்பரில்….
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு…..குறள்.
உன் முகத்தை, மீண்டும் ஒரு முறை கண்ணாடியில் பார்த்து கொள்க, அழகரே!! .. என்று, கொட்டை கொட்டையாய், அழகிய தமிழில் எழுதப்பட்டிருந்தது..
அவன் தன் பலவீனத்தை உணர்ந்து வெட்கினான், தன் மனைவி, மாமனாரிடம் என்ன புருடா விட்டு சமாளிக்கலாம்– என்று யோசித்தபடியே நடக்கலானான் ..
அழுக்கு ஐந்துரூபாய் நோட்டை பத்திரப்படுத்தியபடி, ஜெய்நகர் செல்லும், பஸ் புறப்படுவதை பார்த்து… அதை நோக்கி ஓட தொடங்கினான். விரக்தியில் அவன் மனமோ, “தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால், தீபமும் பாபமன்றோ? ” என அவன் வாய் முணுமுணுத்தது..!
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.