kavathadaithu-kidakkum-veedu-book-review-by-parameshwari-d-pkavathadaithu-kidakkum-veedu-book-review-by-parameshwari-d-p

 

 

 

வணக்கம்.
“நமது மனநிலையில் உணர்வு நிலை உயரும் போது புனைவு மனநிலை வாய்க்கிறது. அறிவு நிலை தன்னை ஆழப்படுத்தி உணர்வு நிலையை சில நேரங்களில் கீழிறக்கி விடுகிறது. புனைவெழுத்தை கைகொண்டவர்களுக்கு உணர்வு மனநிலை அவசியம் என கருதுகிறேன்.” நூலாசிரியர் உமர்பாரூக் அவர்களின் முன்னுரைப் பக்கத்தின் வரிகள் வழியாகத் தான் கவிதைத் தளத்தையும் காண்கிறேன். ருசியும் ரசனையும் அற்ற மனவோட்டங்களால் கவிதைக்கண்களின் பார்வையை உள்ளிழுக்க ஏலாது. கவிதையைப் பொறுத்தமட்டில் மனவுணர்வுகளின் உயிரோட்டம் விரிந்து ஓட்டம் எடுக்க வேண்டும்.‌அப்போதே ஒரு கவிதைக்காரனின் விழிகளுக்கு கண்டதிலெல்லாம் கவிதைக்குஞ்சுகள் பிரசவித்து கொண்டு இருக்கும். சாதாரண புனைவு வாதியிடமிருந்து கவிதைக்காரன் எப்போதுமே வித்யாசப்படுவான். யதார்த்தமாய் அவதானிக்கும் கூறுகளுக்குள் அவன் வரவே மாட்டான். தனக்கான ஒரு சிந்தை தனக்கானதொரு பார்வை தனக்கானதொரு வினையம் தனக்கானதொரு மொழி நடை வளம் வழமை என ஒவ்வொரு கவிதைக்காரனும் பிற கவிஞர் இடமிருந்து வித்யாசப்படுவான். இது கவிதைப் புலத்தின் தனித்தபாணி வரப்பிரசாதம். இலக்கியக் கூறுகளின் பிற தளங்களுக்கு இந்த அம்சங்கள் பொருந்தாது. சில சமயங்களில் இலக்கிய இலக்கணங்களிலிருந்து பிரிந்து பிறிதொரு வடிவத்தையும் மொழிவடிவத்தையும் நடைசெழிப்பையும் உருவாக்கும் ஆளுமைத்திறன் கவிஞனுக்கு மட்டுமே வார்க்கப்பட்ட திறம். வாசிக்கப்படப்படும் ஒவ்வொரு கவிதைக்காரனின் கவிதையில் இருந்தும் ஒரு புதிய அழகியலில் வேறொரு கவிதைக்குழந்தைகள் பிறந்து வருவதே கவிதைக்கருவறையின் பிரத்யேக கலை. இப்படியான ஒரு புதிய வடிவத்தை தான் இந்த கவிதைத் தொகுப்பு வழங்குகிறது. கதவடைத்து கிடக்கும் வீடு கவிதைத் தொகுப்பு கவிஞர் உமர்பாரூக் அவர்களால் வரைந்து முடித்த ஓவியப்பக்கங்களின் கண்காட்சி. நவீனப் புனைவைத் தாண்டி இந்தத் தொகுப்பு கவிதை இலக்கணத்தின் பிறிதொரு முக அமைப்பில் முறுவலிடுகிறது.

தொகுப்பின் தலைப்பக்கக் கவிதையாக உளவியல் என்கிற கவிதை மனித மனங்களின் பிறிதொரு மனதின் மீதான உளவு மனப்பான்மையை சுட்டிக்காட்டுகிறது. அகத்தை விடுத்து புறத்தில் வேவு பார்க்கும் இயல்பு இன்றும் மனிதர் மத்தியில் லழக்கமாகி விட்டது. தன்னிடம் திருத்தப்பட ஆயிரமாயிரம் செயல்கள் இருந்தும் மனிதர் மனம் அவற்றை அவதானிப்பதில்லை‌. அடுத்தவர் நடவடிக்கைகளில் வலிந்து தம்மை புகுத்திக் கொணாடு நியாயம் பேசும் மனப்பான்மையே இங்கு தீவிரமாகி வருவதை நிதர்சனமாக எடுத்துரைக்கிறது வரிகள். சரியாகத்தான் பெயர் சூட்டி இருக்கிறார்கள் உள்ளம். எப்போதும் உளவு பார்த்தபடியே இருக்கிறது தன்னைத் தவிர அனைத்தையும். உளவியல் கவிஞரின் உணவு போல.. தன்னைக் கடக்கும் உள்ளங்களின் பல்வேறு உளவியல் பிரதிமங்களை கவிதைகளாக்கியுள்ளார். ‘மௌனம்’, ‘மௌனம்’ என்று மனசுபூராவும் முணுமுணுத்தாலும் இந்த தேசாந்திரி ஏகாந்தமாய் அலைந்து கொண்டிருக்கிறான் எதையோ தேடியபடி.. வெறுப்பு தாங்கிய மனிதர் உள்ளம் உணர்வுகளற்ற ஒவ்வாமை நோய்களின் அடைப்புக் கூடாரம்.. அங்கு பொத்தி வைத்து நேசிக்க ஏதுமற்ற வெற்று வெளி…. இன்பம் ஒழுக்கம் நேர்மை அன்பு… இப்படி பாதுகாப்பதற்கு எதுவுமே இல்லாத உன் வீடு ஏன் கதவடைத்து கிடைக்கிறது? சும்மா இரு என்பது ஆன்றோர் மொழி.. இதற்குப் பின் நமது மூதாதயர் தங்கள் மேட்டிமைதனத்தை வெளிப்படுத்த பதிவிடவில்லை… வாழ்க்கையின் பெருங்துயரங்களுக்கு மனித சைசலப்புகள் தான் பெரும் காரணியாக அமைந்துவிடுகிறது. சும்மா இருப்பதும் ஒருவகை தீர்வு.. பிரச்சனைகளின் வடிகால்.. ஆன்மீகப் பார்வையில் ஆழ்நிலை தியானம்.. சும்மா இருக்காது இந்தச் சிந்திக்கிற மனசு..

சமூகத்தின் புரையோடிய வழமைகளை பேசுகிறது மூடுப்புகை கவிதை. அடுப்புகள் காலத்தோடு மாறினாலும் அக்கினி மூலையை விட்டு மட்டும் அகலவேயில்லை.. வழமை பழகுதலிலிருந்து விலகி வா உனக்கான எல்லை அகன்று கிடக்கிறது.. என்று பழைய பழகிய மூடபழக்கவழக்கங்களிலிருந்து ஒட்டுமொத்த மனித சமூகத்தை வெளியேற்கும் அழைப்பை விடுத்துள்ளார். சமநிலை அடைந்த மனதின் நிலைக்கண்ணாடியாக சில வரிகள்.. பதியால் மயங்கியோ நோயால் வருந்தியோ கிடக்கிற சாலையோர ஜீவன்களை கண்டு கொள்ளாமல் என்னால் கடந்து விட முடிகிறது இப்போது.. ஆயுதங்கள் ஓராயிரம்.. அவற்றின் மூலாதாரம் இலக்கியச் சொல்லாயுதம்.. பெரு நெருப்பாய் சுடர் விடுவேன் நுண்ணணுவாய் உயிர் பெறுவேன் நான் சொல்லாயுதம் !

குப்பை தலைப்பைக் கொண்ட கவிதையின் சில வரிகள் இருவேறு கோணத்தில் நம்மை அணுகச் செய்கிறது. பிள்ளைகளின் கல்வியறிவை சுய அறிவிலிருந்து அளந்துப் பார்க்கும் மதிப்பெண் மார்ஃபியா ஒரு வகையும் அறிவுரைகள் என்பவை வெறும் குப்பைகள். போகிற போக்கில் யார் வேண்டுமானாலும் போதிமர புத்தனாக போதனைகளை வழங்கி விட்டுப் போகலாம். நீர் மேல் மிதக்கும் எண்ணெய் போல மதிப்பீடு செய்ய மட்டுமே போதனைகள் பயன்படும் ஒழிய மனதில் கீறலை ஏற்படுத்த சுயசெயல்பாடுகளே மாற்றத்தை உண்டுபண்ணும் என்பதை உணர்த்துகிறார் கவிஞர். போதனைகள் குப்பைகளானாலும் குப்பைகளே போதனைகளானாலும் மதிப்பெண்கள் மட்டும் தானா நம் மனசு. நூல் வாசிப்பும் எழுத்தும் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. எந்தக் கலையும் தன்னை அழகுபடுத்த வில்லை என்பதற்காக கலை கலையிழந்து போகாது ஒருகாலும் என்பதையே கவிஞர் இங்கு சத்தம் போட்டு கவிதைப் பாடுகிறார்…

சமூகம் மீதான பாரதியின் ஆவேசம் கவிஞரின் அனேக கவிதைகளில் வேளிப்படுகின்றன. கண்முன் தவறு தாண்டவம் ஆடு போது தட்டிக் கேட்கும் உரிமை எழுத்துக்கு மட்டுமே அதிகம் உள்ளது. அந்த தடத்திலிருந்து உரித்தெழுந்த படைப்புகள் தொகுப்பில் அநேக இடங்களில் காண முடிகிறது. எழுதத் தெரியாத ஒரே காரணத்திற்காக வடிவத்தவறென்று வாய் கிழியப் பேச என்ன உரிமையிருக்கிறது உனக்கு?

வாய்ப்பு கவிதை கூட இப்படித்தான். எழுத வைக்க பேனாவின் வழியாக பெரும் பிரயத்தங்களை மேற்கொள்கிறது. இனி எந்த பிரபஞ்சப் பேனா எழுதப் போகிறது..?

வாழ்வுகளும் வார்த்தைகளுங் குறித்த வியர்த்தமான அன்புகளை? ………………..
எழுது நீயாவது! பிராயகாலத்தின் குழந்தைமை தனத்தில் முளைத்த மயில் இறகுகள் பொக்கிஷமாக இன்றும் எனது சமூக அறிவியல் பாட புத்தகத்தில் குட்டிப்போட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. பள்ளிக்கால நினைவுகளை மீட்டெடுத்த கவிதையாக.. டப்பாவில் அடைத்து வைத்த வண்ணத்துப்பூச்சி இறகுகளும் ஓடைககரை நிழலின் கூழாங்கல் பொக்கிஷமுமாய் நினைவோரம் இருக்கிறது சிறுவயது உயிர்ப்பு ! மீறல் என்பது தான் மனிதமனத்தின் தத்ரூபம். எதுவொன்றிற்கும் விலங்கிட்டுப் பூட்டப்படும் போதும் பெரிய பானைக்குள் அடைத்து தட்டத்தைக் கொண்டு அமிழ்த்தும் போதும் பிதுங்கிக் கொண்டும் துருத்திக் கொண்டும் தன்னை மீறி வெளிப்படும் என்பதே சகலபடைப்புகளின் இயல்பு என்பதிலிருந்து உருவாகியுள்ளது மீறல் கவிதை மயில்களை விடவும் பாலைகளை விடவும் பிடித்திருக்கிறது வரப்புகளையே !

கவிதைக்காரனின் தனிஇயல்பே ஒன்றை மற்றொன்றாக்கி வேறொன்றை பிறிதொன்றாக மாற்றுவதே.. கவிஞரும் தனதிந்த கவிதையில் சொற்களை வரிகளை பத்திகளை பெண்களாக பாவித்து அங்கஸ்துதி செய்துள்ளார். பெண்துதியும் மிகைபடும் போது பொய்த்தோற்றம் எல்லை மீறிவிடுகிறது கவிஞர்களுக்கு என்கிறார் நூலாசிரியர். உன் புருவ வில்லென்று புளுகை யவிழ்த்து விட்டார் எந்த வில்லிற்கு கனலெறியும் திறமுண்டு ? ஒருசில கவிஞர்கள் கவிதையை காமத்து போதையாக்கி தங்கள் வக்ரசிந்தனைகளில் கவிதைகளாக அவிழ்த்து விடுகின்றனர். இச்சை தூண்ட இலக்கியமா கிடைத்தது என்கிற கோபக்கணைகள் ஒவ்வொருவருக்குள்ளும் சில நாராசபடைப்புகளைப் பார்க்கும் போது மனத்திற்கும் தஈஜ்வஆலஐ பொங்கும். கவிதையில் பரிகாசம் தேடும் கவிஞனை கவிதை வழியே கண்டிக்கிறார் கவிஞர். காமம் என்றால் கவிதையா கிடைத்தது? குப்பை மனசுக்கு குயிலின் குரலோ? கவிதைக்கு பொய்யழகு..
இந்தக் கவிதையின் மெய்யும் அழகே…
கவிதைகள் பிறந்ததே கவிஇலக்கியம் தழைக்க….
கவிதைகள் மீள வேண்டும் கவிதைகள் மாளலாமோ….
தொகுப்பின் எனைக் கவர்ந்த கவிதையாக….
அலை தோன்றி மடிவது போல் கவிதை மாளலாமா ?அதன் உயிர் மேலே புற்று வந்து இற்று வீழலாமா? ……
என்று தொடரும் இந்தக்கவிதையின் இறுதி வரிகள் எழுத்தாணி கொண்டு முடி சூடி நிற்கின்றன….
அலை தோன்றி மடிவது போல் கவிதை மாறலாமா? எழுத்தாணி கொண்டுநீயும் முதுகு சொறியலாமா?

தமிழ்ச்சினிமாவின் முகங்களைப் பேசுகிறது கவிதைக் கதை கவிதைகள். ஆதிக்க சாதியினரின் கஈழ்கஉடஇ மக்களின் மீதான அடக்குமுறையை ஒடுக்கப்பட்ட மக்களின் திறமைகள் வெளிச்சப்படக் கூடாது என்று அன்றே கட்டைவிரல் தட்சிணை கேட்ட பார்ப்பனிய தந்திரத்தை பேசிய மகாபாரத்தின் ஏகலைவ துரோணர் இடையில் நிகழ்ந்த ஆதிக்க ஆணவ சம்பத்தின் நவீன முற்போக்குத் திரிபுக்கொண்ட காலத்தின் படைப்பாக ஆதிக்கக் குடியின் அம்பலத்தை இன்றைய ஏகலைவன் எவ்வாறு கையாள்வான் என்பதை மாறுபட்ட கோணத்தில் அணுகுகிறது நூலின் பெரிய புராணம் கவிதைத் தொகுப்பு. ஒரு எழுச்சியையும் சாதிய சிதிலத்தைத் துடைத்து எறியும் பக்கங்களாக ஒவ்வொரு பத்தியும் புதிரான பல புராணத்துவத்தை உள்ளொடுக்கியுள்ளது. இதிகாசங்களின் வல்லுணர்வை அறிந்தவர் இதை வாசித்தால் புதியபாரதத்தைத் தோற்றுவிக்கலாம் சாதி பாகுபாடற்ற கல்விஆலை வழியாக…

தொகுப்பில் இது இல்லை என்று சுட்டிக்காட்டாதவாறு அனைத்து களங்களையும் சுழற்றியடித்து காவியம் படைத்துள்ளார் கவிஞர். காதல் நீதி சாதியம் கல்வி உளவியல் சுமத்தினர் தேடல் இதிகாசம் ஆதிக்க மேலாண்மை என திக்கொன்றின் ஒவ்வொரு மூலேயையும் காட்சிப்படுத்திய கவிஞர் மனிதகுலத்தின் அன்பின் நிமித்தம் பண்பின் விளிம்பில் ஆபத்தின் அறிய பொக்கிஷமான சோர்வின் சாய்வாக திகழும் நட்பின் ஆழத்தை தோழனின் மாண்பை பேச ஒரு வரியும் இல்லையே என்கிற தீராத குறையையும் நிவர்த்தி செய்கிறது இந்தக் கவிதை. நூலேந்தல் கொண்டு நண்பனுக்கு பிரியாவிடை அளித்த கவிதை.. பகல் மறைந்ததும் காணாமல் போய்விடும் நிழலை போல.. என்னை சுற்றியிருந்த அத்தனை திசைகளிலும் இயங்கிக் கொண்டிருந்த அன்புத் தோழன்… இறுதியாக கவிதை இலக்கியத்தின் செல்லப்பிள்ளையாக ஹைக்கூ வடிவங்களுக்கான சில பக்கங்களும் இடம்பிடித்துள்ளன.. அவற்றில் முத்தாய்பான சில மூன்று வரிகள்.. உழைப்பின் சுகந்தம்… அமெரிக்க செண்டையும் அரேபிய அத்தரையும் மீறி இந்திய வியர்வை வாசம். கருவறையிலிருந்து கவிதையின் பிரசவம்.. அனுபவ வாசல் அகலத் திறந்தது பார்ப்பதெல்லாம் கவிதை. மத மேலாண்மையில் நெருக்கப்படும் பாமர மனிதர்… இயேசு கன்னம் காட்டினார் நபி முதுகு காட்டினார் அடி விழுகிறது அப்பாவி மனிதனுக்கு.. சாதியிலிருந்து முளைத்த மற்றொரு பூதத்தின் கரம்.. இடஒதுக்கிடே வேண்டாம் கேட்காதே என் சாதிப் பெயரை. தொகுப்பை புதுக்கவிதைகளின் சாயை என்று போர்த்திக் கொள்ளவும் முடியாது மரபுக்கவிதை வழிவந்த சந்ததி என்று அணைத்துக் கொள்ளவும் ஏலாது. இரண்டிற்குமான ஒரு புதிய முயற்சியாக புதுதடத்தை இளம்கவிஞர்களுக்கு அமைத்துத் தந்துள்ளது கதவடைத்துக் கிடக்கும் வீடு தொகுப்பு. சில பத்து ஆண்டுகள் முன்பாக எழுதப்பட்ட கவிதைகள் என்று கவிஞர் குறிப்பிட்டிருந்தாலும் தன்னை பாதித்த சமூக அவலங்களுக்கு சவால் விட வேண்டி கவிஞரின் மெனக்கிடல் இன்றைய காலத்தேவையாகவும் அமைந்து விட்டது . எழுத்து என்பது வெறும் வாசிக்க மட்டுமே என்கிற பொதுப்புத்தியிலிருந்து அணுகாமல் மனிதகுலத்திற்கு எதிராக செயல்படும் ஒவ்வொரு சூதுகளையும் எதிர்த்து ஒலிக்கும் தொனியில் அமைய வேண்டும் என்கிற தனது சமூக அக்கறையை படைப்பின் ஊடாக நிலை நாட்டியுள்ளார் கவிஞர். ஒவ்வொரு எழுத்தாளனின் பேனாவிற்கு உரித்தான கடமை. ஒன்று மட்டும் விளங்குகிறது..‌அன்று கவிஞரின் சமூகமாற்றத்திற்கான ஆயுதம் இன்று வரை ஓயவில்லை… அற்புதமான ஒரு படைப்பை உருவாக்கி கவிதைபுலத்தில் பல கேள்விகளுக்கான சவாலை எதிர்கொண்டு நிற்கும் கவிஞர் உமர்பாரூக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

நூல் : கதவடைத்து கிடக்கும் வீடு
நூலாசிரியர் : கவிஞர் அ.உமர்பாரூக்
வெளியீடு. : நம் பதிப்பகம்
பக்கங்கள். : 118

து.பா.பரமேஸ்வரி
சென்னை.

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *