கதிர் சக்தியின் “ரீங்ங்ங் (விழித்தெழும் தேடலுக்கான ஓர் அழைப்பு)” புத்தகம் | Kathir Sakthi's Ringring Tamil Book Review | சுகிர்தா. அ | www.bookday.in

கதிர் சக்தியின் “ரீங்ங்ங் (விழித்தெழும் தேடலுக்கான ஓர் அழைப்பு)” – நூல் அறிமுகம்

“ரீங்ங்ங் (விழித்தெழும் தேடலுக்கான ஓர் அழைப்பு)” – நூல் அறிமுகம்

*நாம் வாசிக்க சில கதைகள் நம்மை வாசிக்கும் சில கதைகள்* என கதையாசிரியர் தம் வரிகளில் குறிப்பிட்டுள்ளார், ஆனால் புத்தகத்தை திறந்தால், அனைத்து கதைகளும் நம்மை வாசித்து, நம்முள் உறங்கிக் கிடக்கும் கேள்விகளை தட்டியெழுப்பி, சிந்தனையைச் செயலாக மாற்றும் உத்வேகத்தையும், மாற்றத்தை நோக்கியும் நம்மை நகர்த்தி செல்கிறது..

உறங்கிக் கிடக்கும் மனங்களுக்குள் ஓர் அலாரமாக,
பண்படாத மண்ணுக்குள் விழும் முதல் விதையாக,
பழுதடைந்த சிந்தனைகளுக்கு எண்ணெய் பூசி மீண்டும் இயங்கச் செய்யும் சீரமைப்பாக ஆசிரியரின் எழுத்தாணி🙏🏻

இன்றைய அலட்சியம் நாளைய உயிர்வாழ்வின் விலையாகிவிடக்கூடாது என்ற எச்சரிக்கையை உயிர்வ(லி)ளி கதையின் மூலம் ஆழமாகப் பதிவு செய்திருப்பது சிறப்பு ..

பாவாடை சட்டையா? பச்சை மாத்திரையா?’ கதையின் விறுவிறுப்பு நம்மை அடுத்தடுத்த பக்கங்களுக்குத் தள்ளிச் செல்கிறது.. ஒரு பெற்றோராகத் தன் பிள்ளை படும் வேதனையைக் கண்டு மனம் நொந்தாலும், அந்த நிலையிலும் பிறருக்கு உதவ வேண்டும் என்ற மனிதநேயத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் மனம் நம்மை நெகிழச் செய்கிறது. துயரத்தின் நடுவிலும் பிறர் துயரத்தை உணரக்கூடிய மனிதம் இக்கதையின் மிகப்பெரிய பலம்…

கரும்பலகை கனவுகள் என்ற சிந்தனையே ஆசிரியரின் கற்பனைத் திறனுக்குச் சான்று… உயிரற்ற ஒரு பொருளுக்கு உயிரூட்டி, அதன் பார்வையில் வகுப்பறையைப் பார்க்க வைத்திருப்பது வாசிப்பில் ஒரு சுவாரஸ்யமான புதுமையை உருவாக்குகிறது

இக்கதையை வாசிக்கும் போதே *நாளை என் மாணவனும் இதே போல் நான் நடத்திய வகுப்பறைக்குள் நுழையும் போது நான் நடத்திய பாடங்கள் அவன் நினைவில் வருமா?* என்ற சிந்தனையை எழ வைத்து சிறப்பித்தது…

உழவன் நகர் என்னும் கதை *மண்ணைக் காத்தால் மண் நம்மைக் காக்கும்* என்ற கருவோடு விளைநிலத்தை வெறும் சொத்தாகப் பார்க்காமல், தலைமுறைகளின் வாழ்வாதாரமாகப் பார்க்க வேண்டும் என்ற செய்தியை ஆழமாகப் பதிக்கிறது..

டெக்நெக் சிண்ட்ரோம், இளைஞர்களுக்கு மட்டுமல்ல மொபைலைக் கையில் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் தன்னைத் தானே சுயபரிசோதனை செய்து கொள்ளும் சிந்தனையை சிதறி செல்கிறது..

ரீங்ங்ங்… என்ற தலைப்பே ஒரு அழைப்பைப் போல பட்டாம்பூச்சியின் உருவகத்தின் வழியாக, நாளைய உலகில் சிறகடிக்கப் போகும் வண்ணத்துப்பூச்சிகளாகிய மாணவக் கண்மணிகளுக்கு அறிவுரை வழங்கும் தலைமை ஆசிரியர் கதாபாத்திரம் மாணவர்களின் மாற்றத்தை நோக்கிய ஓட்டத்தையும், அவர்களின் எதிர்காலப் பயணத்தையும் கதையின் கருவாகவும் புத்தக தலைப்பாகவும் வைத்தது அருமை..

சிறிய கவனக்குறைவு எவ்வளவு பெரிய இழப்பை உருவாக்கிவிடும் என்பதை உணர்த்தும் வகையில் சக்கர நாற்காலி கதை நகர்கிறது.. குற்றவுணர்ச்சியின் உச்சத்திலிருந்து மீள்வதற்கான வழியாக ஆசிரியர் அமைத்திருக்கும் *இணை பிரபஞ்சம்* கதாசிரியர் கதிர் சக்தி அவர்களின் படைப்பாற்றலை இப் பிரபஞ்சத்திலேயே அடுத்த நிலைக்கு தள்ளும் ஓர் உந்து சக்தி…

*கடைசி புத்தகம்* வாசிப்பின் மேன்மையை மிக அழகாக நிலைநிறுத்துகிறது.. துரைராஜ் தாத்தா என்ற கதாபாத்திரம் ஒரு தனிமனிதராக மட்டுமல்லாமல், வாசிப்பை அடுத்த தலைமுறைக்குக் கடத்திச் செல்லும் ஒரு பாலமாகத் தெரிகிறார்..

அந்தக் கதாபாத்திரத்தை வாசித்தபோது என் தாத்தாவின் பெயரும் துரைராஜ் தான்.. என் வாழ்வில் வாசிப்பின் மீது நேசத்தை முதன்முதலில் விதைத்தவரும் அவர்தான்.. எனது சிறுவயது ரயில் பயணங்களின்போது பிளாட்பாரத்தில் வாங்கிவரும் அக்பர் பீர்பால் கதைகள்,
தெனாலிராமன் கதைகள்,
விக்ரமாதித்தன்-வேதாளம்,
முல்லா, பரமார்த்த குரு கதைகள் மற்றும் சிறுவர் மலர் புத்தகங்களில், படங்கள் நிறைந்த புத்தகத்திற்காக நானும் என் தாத்தாவும் சண்டையிட்ட சிறுவயது நினைவுகள் ரயில் பயணத்திற்கே என் தாத்தாவிடம் கொண்டு சேர்த்தது..
ஒரு பெயர் என் தாத்தாவை நினைவூட்டியது, ஒரு கதை என் குழந்தைப் பருவத்தை மீட்டுத் தந்தது. வாசிப்பின் வேர்களோடு என் நினைவுகளையும் இணைத்த கதையாசிரியருக்கு என் நன்றிகள் பல.. மட்டுமல்ல வாசிப்பின் நேசிப்பில் வழிநடத்திய இன்னும் பல அன்புள்ளங்கள் என் மனத்திரையில் நிழலிட்டனர்…

மற்ற நூல்களைப் போல நாம் எண்ணியதையும், சிந்தித்ததையும், புரிந்துகொண்டதையும், அனுபவித்ததையும் மட்டுமே பதிவு செய்யாமல் வரப்போகும் காலத்தின் சவால்களை முன்கூட்டியே உணர்ந்து, அவற்றை இன்றே சரிசெய்வதற்குத் தேவையான நல்ல சிந்தனை விதையை விதைத்திருப்பதே கதை ஆசிரியர் கதிரேசன் sir அவர்களின் தனிச்சிறப்பு..

இன்று விதைக்கப்படும் இந்தச் சிந்தனை விதை, நாளைய தலைமுறையின் இதயத்தில் வேரூன்றி, மாற்றத்தின் விருட்சமாக வளரட்டும்…

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:ரீங்ங்ங் (விழித்தெழும் தேடலுக்கான ஓர் அழைப்பு)
ஆசிரியர்:கதிர் சக்தி (கதிரேசன்)
வெளியீடு:மௌவல் பதிப்பகம், 2026
விலை:₹.130
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 சுகிர்தா. அ
நெல்லை

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Show 3 Comments

3 Comments

  1. KATHIRESAN SAKTHIVEL

    என் “ரீங்ங்ங்…” நூலை வாசித்து, அதன் சிந்தனைகளை அழகாகப் பதிவு செய்த Bookday.in தளத்திற்கும், விமர்சனத்தை எழுதிய திருமதி. சுகிர்தா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். 🙏

    ஒரு எழுத்தாளனின் மகிழ்ச்சி, தன் எழுத்து வாசகரைத் தொட்டு ஒரு சிந்தனையைத் தூண்டும் தருணத்தில்தான். அந்த மகிழ்ச்சியை இந்த விமர்சனம் எனக்குத் தந்துள்ளது. ❤️📚

    • Sugirtha

      You are most welcome sir..
      It’s our esteemed duty to honour the writers moreover the revolutionary writers..

  2. KATHIRESAN SAKTHIVEL

    என் “ரீங்ங்ங்…” நூலை வாசித்து, அதன் சிந்தனைகளை அழகாகப் பதிவு செய்த Bookday.in தளத்திற்கும், விமர்சனத்தை எழுதிய திருமதி. சுகிர்தா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். 🙏

    ஒரு எழுத்தாளனின் மகிழ்ச்சி, தன் எழுத்து வாசகரைத் தொட்டு ஒரு சிந்தனையைத் தூண்டும் தருணத்தில்தான். அந்த மகிழ்ச்சியை இந்த விமர்சனம் எனக்குத் தந்துள்ளது. ❤️📚

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *