கதிராளிகள் – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூல் : கதிராளிகள்
ஆசிரியர் : ஆமினா முஹம்மத்
பக்கம் : 172
விலை :ரூபாய் 225
வெளியீடு : இஃக்ரா பப்ளிகேஷன்ஸ்
தொகுப்புகளின் கதை..
தமிழ் மொழியில் உருவாக்கப்பட்ட பனுவல்களைத் தொகுத்துப் பார்த்திடும் வழக்கம் சங்க இலக்கிய காலத்தில் இருந்தே துவங்கியுள்ளது. சங்க இலக்கியம் எனும் பெயர் அறிமுகம் ஆவதற்கு முன்பாக பாட்டும் தொகையும், பதினெண் மேற்கணக்கு நூல்கள் எனும் பெயர்களே அவற்றிற்கு வழங்கப்பட்டிருந்தன. பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் தொகுத்தவர் தொகுப்பித்தவர் எனும் அடையாளங்களோடுதான் நமக்கு வாசிக்கக் கிடைக்கின்றன. இது இலக்கிய வாசகனுக்கு உணர்த்துவது தமிழர்களின் ஆதி மனநிலையே எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்திடும் வழக்கம் கொண்டது என்பதைத்தான். சங்க இலக்கியம் துவங்கி நவீன இலக்கியம் வரையிலும் நிகழ்ந்திருக்கிற தொகுப்புலகின் நடைமுறை குறித்த விவரங்களைப் புத்தகம் பேசுது “தமிழ் நூல் தொகுப்பு வரலாறு” எனும் சிறப்பு மலராக 2010ல் வெளியிட்டிருக்கிறது.
பின்னாட்களில் உருவான எல்லா இலக்கிய வகைமைகளைப் போல தமிழ்ச்சிறுகதைகளும் ஆங்கிலக்கல்வி கற்ற இந்தியர்களால் உருவானதுதான். கதைகளை எழுதத் துவங்கிய போதே அதனைத் தொகுத்துப் பார்க்கும் வழக்கமும் நிச்சயமாக உருவாகிவிட்டது என்றே சொல்லலாம். பல்வேறு மனநிலைகளில் பல தளங்களில் இயங்கிடும் தன்னுடைய கதைகளைத் தொகுத்துப் பார்த்திடும் வழக்கம் எங்கு துவங்கியிருக்கும் என எழுதுவதே ஒரு சுவாரஸ்யமான கதைதான். இதனைத் தமிழ்ச்சிறுகதைகளின் மூத்த முன்னோடிகளான பாரதி, வ.வே. சு. அ.மாதவையா ஆகியோரே துவக்கி வைத்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.
வ.வே.சு. புதுச்சேரியில் இருந்த நாட்களில் தொகுத்த “மங்கையர்கரசியின் காதல்” எனும் தொகுப்பு நூலில்தான் தமிழின் முதல் சிறுகதையான “குளத்தங்கரை அரசமரம்” இடம் பெற்றிருக்கிறது. அன்றிலிருந்து இன்றுவரையிலும் எல்லா எழுத்தாளர்களும் பல்வேறு மாத இதழ்களில் வந்த தன்னுடைய கதைகளைத் தொகுத்துப் புத்தகமாக்கிடும் வழக்கம் இன்றுவரையிலும் நீடித்திருக்கிறது.
தொண்ணூறுகளின் துவக்கத்தில்தான் ஒரு படைப்பாளியின் மொத்தச்சிறுகதைகளையும் ஒரே நூலாக உருமாற்றிப் புத்தகமாக்கிடும் வழக்கம் அதிகமாகியது. அதற்கு மிக முக்கியமான காரணம் அப்போது பெருநகரம் தோறும் நடக்கத் துவங்கியிருந்த புத்தகக்காட்சிகள். தமிழ்க்கல்விப் புலத்தில், பல்கலைக்கழக வளாகத்தில் ஆய்வுநுட்பம் குறித்த அக்கறை தென்படத் துவங்கியிருந்த நாட்களாக அவை இருந்ததும் கூட இருக்கலாம். இதோடு மட்டுமில்லாமல் உலகம் முழுக்க இடம் பெயர்ந்து இருந்த ஈழத்தமிழர்களிடம் முகிழ்த்திருந்த இலக்கிய வாசிப்புப் பழக்கம் போன்றவையெல்லாம்தான் மொத்தத் தொகுப்பு நூல்கள் உருவாதற்கான அடிப்படையான காரணம். புதுமைப்பித்தன், கு.ப.ரா. மௌனி, கு. அழகிரிசாமி துவங்கி கந்தவர்ன், ச.தமிழ்ச்செல்வன். உதயசங்கர், ஆதவன் தீட்சண்யா வரையிலுமான தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு நூல்கள் வாசிக்கக் கிடைக்கின்றன. இது தனிநபர்களின் படைப்புகளை மொத்தமாக்கிப் பார்த்திடும் வழக்கத்தின் கதை. இந்தத் தொகுத்திடும் வழக்கத்தின் வேறு ஒரு முறைமை குறித்தே இந்தக் கட்டுரையில் கவனப்படுத்த விரும்புகிறேன்.
நூல் அறிமுகம் எழுதியவர் :
மணிமாறன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.