ஏறக்குறைய எழுபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. சுஜாதாவைப்பற்றி கூறவேண்டியதில்லை, பாமர வாசகர்களின் எழுத்தாளர் , ஆம், சார்பியல் கோட்பாட்டை எளிமையாக விளக்கி கூறியவரை பின் எப்படி அழைப்பது. சிக்கலான விஷயங்களை எளிமையாகச் சொல்லத்தெரிந்தவர். மரபுக்கவிதைகளின் பக்கம் நின்றாலும் புதுக்கவிதைகளையும், ஹை கூ கவிதைகளின் ரசிகர். சினிமா வசனகர்த்தா, அறிவியல் அறிஞர், சோர்வில்லாத எழுத்துக்குச் சொந்தக்காரர். எள்ளல் நடையில் நம்மை விரல்பிடித்து அழைத்துச்செல்பவர். அடுத்தவர் திறமையை பாராட்டும் பண்பாளர்.
கவிஞர் மீராவை வெகுவாக புகழ்ந்துவிட்டு அவரின் ஒரு புதுக்கவிதையில் உள்ள அங்கத சுவையை வெளிப்படுத்தும் ஒரு கவிதையை நமக்கு அடையாளப்படுத்துகிறார்.
“உனக்கும் எனக்கும் ஒரே ஊர்
வாசுதேவநல்லூர்
நீயும் நானும் ஒரே மதம்
திருநெல்வேலி
சைவப்பிள்ளைமார்
வகுப்பும் கூட
உந்தன் தந்தையும்
எந்தன் தந்தையும்
சொந்தக்காரர்கள்
மைத்துனன்மார்
எனவே
செம்புல பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம்
தாம் கலந்தனவே “
இக்கவிதை மீராவின் ஊசிகள் என்ற தொகுப்பில் உள்ளது. ‘யாயும் ஞாயும் யாராகியரோ ‘என்ற சங்கப்பாடல் தெரிந்தால் இதிலுள்ள அங்கதம் புரியும்.
வீரமா முனிவர் எழுதிய பரமார்த்த குருவின் கதைகளில் வரும் குருவும் சீடர்களும் ஒரு முறை ஆற்றைக்கடக்கும்போது எரியும் கொள்ளியை எடுத்து ஆற்றில் முக்கும்போது ஏற்படும் சுர்ர்ர் சத்தம் கண்டு ஆறு விழித்துள்ளது என்றும், பின் அதே கொள்ளியை ஆற்றில் மீண்டும் வைத்துப் பார்த்து ஆறு தூங்குகிறது என்று கூறி ஆற்றைக்கடப்பார்கள். இந்தக்கதையை வீரமாமுனிவர் “The merry tales of ten wise men of Gotham “என்ற தொகுப்பிலிருந்து சுட்டுள்ளார் என்று கூறுகிறார்.
மரபு பா இயற்றுவதில் சுஜாதாவை கவர்ந்தவராக குறிப்பிடப்படுகிறவர் விழுப்புரம் மாவட்டம் ஆகாசம்பட்டு சேஷாசலம். இவர் எழுதிய உளுந்து சாகுபடிப்பற்றிய நேரிசை வெண்பா
“நெத்து வெடிக்கையிலே பத்துகிலோ தேன்தடவி
அதை உடைச்சாக்க ஆறுகிலோ -குத்தி
எடுத்து தொடச்சாக்க அஞ்சுகிலோ ஆச்சே
அடச்சாமி இந்த உளுந்து “எப்படி அருமையான சோகத்தை வெளிப்படுத்தும் நேரிசை வெண்பா.
பில் கேட்ஸ் இந்தியா வந்து இரண்டாயிரம் கோடி டாலர் கொடுத்தது தானமல்ல, நல்ல உட்டாலக்கடி என்று ஜூவியில் கட்டுரை எழுத, இவரை கண்டித்து ஏகப்பட்ட கடிதங்கள் வந்துள்ளது. அதற்கு பதிலாக இவர் கூறுவது, அது இந்தியர்களுக்கு விரித்த டாலர் வலை, இந்தியாவை மைசரோசாப்ட் மட்டுமே ஆட்சி செய்யவேண்டுமென்பதே பில்கெட்ஸின் தானத்துக்கு அடிப்படை என்கிறார். அதற்கு பதிலாக open source இயக்கத்தைச் சேர்ந்த லீனக்ஸ் போன்ற இலவச ஆபரேஷன் சிஸ்டம்கள் இந்தியாவுக்கு அதிக பயனளிக்கும் என்கிறார் சுஜாதா. கலிபோர்னியாவின் கல்யாணசுந்தரம் தமிழ் லினெக்ஸ் முயற்சிகள் பற்றி குறிப்பிடுகிறார். விரைவில் வெளிவரவிருக்கும் மேண்ட்ரேக் லினெக்ஸ் 90 மூலம் கணினியை வடிவமைத்துக் கொண்டு இயக்கவும், இணையத்தை பயன்படுத்தவும் முடியும், தமிழ் மட்டும் தெரிந்திருந்தால் போதும் என்கிறார். எனக்கு இது பற்றிய அறிவு இல்லை, அதனால் வாசிக்கும் நமது குழுவின் நண்பர்கள் இதற்கான விளக்கத்தை கொடுத்தால் சிறப்பு.

பால்டேவிஸ் எழுதிய அறிவியல் கட்டுரைகளை குறிப்பிடவரும் சுஜாதா காலண்டர் காட்டும் காலமும், கடந்த நிகழ் எதிர்காலங்களாகப்பிரியும் பௌதிகக் காலமும் ஒன்றல்ல என்கிறார். காலம் சாஸ்வதமானது எனும்போது எதிர்காலம் முன்பே தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. இது டிட்டர்மினிசத்தை ஊர்ஜிதப்படுத்துகிறது. எல்லாம் தீர்மானித்தாகிவிட்டால் அங்கே மனித யத்தனம் தேவை இல்லை என்று ஆகிவிடும். விதிமேல் பூரண நம்பிக்கை ஏற்பட்டு விடும். விதி அறிவியலுக்கு ஒவ்வாத விஷயம். ஹைசன்பர்க்கின் நிச்சயமில்லா தத்துவமும் டிட்டர்மினிசத்திற்கு எதிரானது. நவீன இயற்பியலில் காலம் என்பது விண்வெளியின், பிரபஞ்சத்தின் மற்றொரு பரிமாணம் ஆகும். அதற்கு ஆரம்பம் உண்டு, முடிவும் உண்டு. முடிவு இன்னும் வரவில்லை. பால் டேவிசின் கடைசி மூன்று நிமிடங்கள் என்ற புத்தகத்தில் ஐன்ஸ்டீனின் புரட்சிகரமான சிந்தனையின்படி காலம் என்பது சார்புள்ளது, மிகுந்த ஈர்ப்பு விசையின் அருகில் காலத்தின் அளவு மாறும். வளைந்து கொடுக்கும் என்ற எழுதிவிட்டு இதை புரிந்து கொள்வது சிரமம் என்று கூறிவிட்டு, வாருங்கள் எளிமையான காலண்டர் காலத்தைப் பார்ப்போம் என்று கூறி கிரெகோரியன் காலண்டர் வந்தக்கதையை சொல்ல ஆரம்பித்துவிட்டார். இதுதான் சுஜாதா.
கைகூ கவிதைகள் எப்படி இருக்கவேண்டும் என்று எடுத்துக்காட்டுகளை கொடுத்துள்ளார்.
“குளிரில்
பிறை நிலா
குட்டை மாறுகிறது “
“காலைப் பனியில்
மலர்கள் விற்கும்
முரடன் “
“கொல்லாதே
கைகளையும் கால்களையும்
தேய்த்துக்கொண்டிருக்கிறது
ஈ “
“செவிட்டு ஊமையின்
பிச்சைப்பாத்திரத்தை
தட்டுகிறது
மழை “
என்று கோப யாஷி எழுதிய கவிதைகளை சுட்டிக்காட்டுகிறார்.
திருமண பத்திரிக்கை ஒன்று அச்சடிக்கப்படுகிறது. அச்சக மேலாளர் அதில் பிழையுள்ளது என்றுசுட்டுகிறார். அதில் மணமகன் பெயரைக் குறிப்பிடும்போது “எனது மகன் “என்று போட்டுள்ளது, அதுதான் தவறு என்கிறார். அப்போது உயர்திணையுடன் (என் ), அது என்ற ஆறாம் வேற்றுமை உறுபு வருவதால் திணை தவறாகிவிடும் என்கிறார். என் +அது =எனது மகன், இதற்குப் பதிலாக எனக்கு மகன் என்று கூறுவதே இலக்கணப்படி சரியாக இருக்கும் என்கிறார்.
ஐசக் அசிமோவ் 35 வருடம் இடைவெளியில்லாமல் நிமிசத்திற்கு 90 வார்த்தைகள் வீதம், தினத்திற்கு எட்டுமணிநேரம் எழுதினாராம். ஒரே சமயத்தில் மூன்று புத்தகங்களை எழுதினாராம், p. G. வுட்ஹவுஸ் என்பவர் 90வயதைத்தாண்டியும் எழுதினாராம். இதற்கு எதிடையாக ஹார்பர் லீ என்பவர் ஒரே ஒரு புத்தகத்தில் உலக பிரசித்தி பெற்றாராம் (To kill a mocking bird ). Kafka, “metamorphosis ” என்ற ஒரு சிறுகதையில் உலக பிரசித்தி பெற்றார்கள் என்று சுஜாதா கூறுகிறார்.
மார்க்ஸ் மெட்டீரியலிசம் என்று சொன்னது பொருள்கள் மேல் உள்ள ஆசையை அல்ல. மனித யத்தனங்கள், விருப்பங்கள் அத்தனையும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும் அதன் பூகோள ஸ்திதிதையும் பொறுத்தது என்கிறார்.
1, உங்கள் வீட்டில் குழந்தையையும் சேர்த்து மூன்று பேர், நாலு போன், இரண்டு டிவி
2, உங்கள் வீட்டு சாப்பாட்டு மேஜை காகிதங்கள், ஆவணங்கள், செக் புக், சாவிக்கொத்து, படிக்க மறந்த புத்தகம், மனைவி வாங்கிய காய்கறிகள் மற்றும் செய்தித்தாள்கள் வைக்கும் இடமாக இருக்கும்
3, ஒரு போன் நம்பராவது உங்கள்நினைவில் இருக்காது
இது போன்று இருபது விஷயங்களைக்கூறி இதெல்லாம் உண்மையாக இருந்தால் நீங்கள் 2004 ல் வாழ்கிறீர்கள் என்பது பொருளாம்.
“அறையை அலசிப்
பலமுறை பார்க்கும்
தலையை அசைக்கும் உறுமல் விசிறி
தவணை முறையில்
அவ்வப்பதொரு வேக லாரி
அறையை சற்றே அதிரவைக்கும்
சுவரின் தோலி இன்னும் உரிந்து
தக்கை தகடாய் தரையில் சிதறும்
தொண்டை கமற ஸ்கூட்டர் ஹார்ன்
வண்டிக்காரனை எதிர்த்துப்பேசும்
ரோஜாப்பூவை அதட்டி விற்கும்
பூக்கடைக்காரன் குரலும் கேட்கும்
பாடல் வரியை திரும்பத் திரும்ப
வானொலி பாடித்
தடங்கல் செய்தமை
வருந்திச் சொன்னவள்
குரலும் கேட்கும் “
கவிதை நல்லாயிருக்கா, கட்டுரையின் இறுதியில் கவிஞரைக் கூறுகிறேன்.
ஒரு சமயம் சுஜாதாவின் நண்பர் சுஜாதாவிடம் வந்து தான் எழுதிய கதைகளைக் காட்டி, இத்தனை எழுதியுள்ளேன், இதில் ஒன்றுகூட பிரசுரமாகவில்லை என்று தன் வருத்தத்தை பதிவு செய்துள்ளார். அதில் ஒரு சிலவற்றை எடுத்து கொடுத்துள்ளார். வாசித்த பின்பு சுஜாதா காதல் கதை எழுத அனுபவம் வேணும் என்று அறிவுரை கூற, வந்தவர் நீ மட்டும் கொலைக் கதைகளை எழுதுகிறாய் என்று கூறிவிட்டு புறப்பட்டார்
இன்னும் இன்னும் நிறைய செய்திகளின் குவியலாக உள்ளது இப்புத்தகம். இதில் பாகம் இரண்டு மட்டும்தான் என்னிடம் இருந்தது, இரண்டு பாகம் வாங்கிப்படிக்கும்போது நிறைய விஷயங்கள் நமக்குத்தெரியவரும்.
அந்தக்கவிதையை எழுதியவர் நடிகர் கமலஹாசன். பல்துறை வித்தகர். பாராட்ட வேண்டும். அநேகமாக தமிழ் திரையுலகில் கவிதை எழுதும் ஆற்றல் உடைய முன்னணி நடிகர் இவர் மட்டுமே என்று நினைக்கிறேன்.

நூல் =கற்றதும் பெற்றதும் (இரண்டாம் பாகம் )
ஆசிரியர் =சுஜாதா
பதிப்பு =விகடன்
விலை =ரூ 100/
அன்புடன் =பெ. அந்தோணிராஜ்
தேனி.

