katturai: ilampaarathi: panmuga ilakkiya aalumai -pudhuvai yugabharathi கட்டுரை: இளம்பாரதி : பன்முக இலக்கிய ஆளுமை - புதுவை யுகபாரதிkatturai: ilampaarathi: panmuga ilakkiya aalumai -pudhuvai yugabharathi கட்டுரை: இளம்பாரதி : பன்முக இலக்கிய ஆளுமை - புதுவை யுகபாரதி

கண்ணுக்கு அழகர்; கருத்துக்கு இனியர்; பூமுகத்தர்; பாஅகத்தர்; வேதியியல் பேராசிரியர்; இலக்கியத்தைச் சுவைத்துச் சமைத்துப் பரிமாறும் இலக்கண இலக்கியர்; மனம் ஐற்றால், மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்பதை அறிந்து, பிறமொழி இலக்கியங்களைப் படித்துச் சுவைத்துத் தமிழுக்கு மொழிபெயர்த்துத் தருகின்ற பன்மொழி அறிஞர்.

மண்ணூறும் சுவைநீர்போல் எந்நாளும் வாழ்ந்துகொண்டிருக்கும் இலக்கியங்களைப் படைத்துத் தொண்ணூறாம் அகவையைத் தொட்டுக்கொண்டிருக்கும் இளம்பாரதி அவர்களின் இலக்கிய நடைச்சுவடுகளே இளம்பாரதி : பன்மொழி இலக்கிய ஆளுமை என்னும் இந்தக் கட்டுரை.

எமக்குத் தொழில் கவிதை
இமைப்பொழுதும் சோராதிருத்தல்
நாட்டிற்கு உழைத்தல்

என்று தம் தொழில் என்ன என்பதைப் பாடிக் காட்டியதுடன் யாதானும் தொழில் செய்க என்று முழங்கிச் செய்து காட்டியவர் மகாகவி பாரதி. .

பாரதியின் வழியில் தம் பெயரை இளம்பாரதி ஏன்று வரித்துக்கொண்ட ருத்ர துளசிதாசு அவர்கள் யாதானும் தொழில் செய்க என்னும் முழக்கத்தைத் தம் வீட்டில் பதித்துப் பணிநிறைவுக்குப் பின்னும் அச்சகம் ஓன்றை நிறுவித் தமிழ்த் தொண்டாற்றி வருகிறார்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்

என்று பாடிய பன்மொழிப் பாவலர் மகாகவி பாரதியைப் போல் இளம்பாரதி அவர்களும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சமற்கிருதம் போன்ற பன்மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்

என்று பாடி, ஆங்கில, சப்பானிய, வங்க இலக்கியங்களைத் தமிழுக்குக் கொணர்ந்த பாரதியைப் போல் இளம்பாரதி அவர்களும்,

மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, சமற்கிருதம் மற்றும் ஆங்கில மொழி இலக்கியச் செல்வங்களைத் தமிழுக்குப் பெயர்த்துத் தந்தவர்.

தமிழைக் காத்த-காத்துக்கொண்டிருக்கும் புதுச்சேரிச் சாலைகளில், பாரதி பாவேந்தருடன் கைகோத்துச் சென்றதுபோல், சங்கம் வைத்துத் தமிழ்வளர்த்த மதுரைச் சாலைகளில் இளம்பாரதி அவர்களும் பாவேந்தருடன் கைகோர்த்துச் சென்றவர்.

எங்கெங்குக் காணினும் சக்தியடா
ஏழுகடல் அவள் வண்ணமடா

ஏன்ற பாவேந்தரின் பாடலுக்குப் பாரதி சான்றளித்துச் சுதேசமித்திரனில் வெளியிடச் செய்ததுபோல்,

கவிதை உள்ளம் உடையவர்;
அண்மை எதிர்காலம் வருக கவிஞரே
என்று இப்போதே அழைக்கிறது

என்று அழைத்துத் தோழர் இளம்பாரதி எழுதிய இப்பாட்டுக்கள் மிக நல்லன, பிழை இல்லாதன என்று பாவேந்தரால், பாராட்டிச் சான்றளிக்கப்பட்டவர்.

இளம்பாரதி அவர்கள் ஓரு வேதியியல் பேராசிரியராக இருந்தபோதும், தமிழின் மீதுள்ள தணியாக் காதலால் இலக்கண ஆறிஞர் ஆ.கி.பரந்தாமரிடம் முறையாக யாப்பிலக்கணம் பயின்று கவிதை எழுதத் தொடங்கியவர்.

இளம்பாரதி தமிழ்மகள் செய்த தவப்பயனால் வேண்டிய யாப்பிலக்கணமும் இலக்கியமும் கற்று, மறுமலர்ச்சிக் கருத்திலும் சிறந்து, பாரதி பரம்பரையை ஓட்டி வளர்ந்து வெளிவந்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.

என்று அறிஞர் அ.கி. பரந்தாமரால் பாராட்டப்பட்டவர் இளம்பாரதி ஆவர்கள்.

இவர் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்து மூன்றாம் இண்டு சூலைத் திங்கள் இரண்டாம் நாள் திருநெல்வேலி மாவட்டத்தில் ஊள்ள கோவில்பட்டி இளைய அரசனேந்தல் என்னும் சிற்றூரில் பிறந்தவர்.

மகாத்மா காந்தி, வினோபா ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய விடுதலைப் போராட்ட வீரர் இவர் தம் தந்தையார் ருத்ரப்பாசாமி அவர்கள்; தாயார் லட்சுமி அம்மாள்; கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றிய இராசு இவரின் ஓரே உடன்பிறப்பு.

இவர்தம் மனைவியார் செங்கமலம் அவர்கள் விருதுநகர் மாவட்டக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். இவருக்கு விசயலட்சுமி என்னும் ஒரே மகள்.

இளம்பாரதி அவர்கள் தம் பதினாறாம் அகவையிலேயே எழுதத் தொடங்கியவர். கடந்த 70 ஆண்டுகளாகத் தமிழ் இலக்கிய உலகில் தடம்பதித்து வருபவர். பாரதியைப் போல், பாக்கள், சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எனத் தம் இலக்கிய எல்லையை விரிவுபடுத்திக் கொண்டவர்.

கவிதை, புதினம், வரலாறு மொழியியல், அறிவியல், மொழிபெயர்ப்புகள், சிறுவர் இலக்கியம் என எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.

1998ஆம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்கான சாகித்திய அகாதெமியின் விருதைத் தம்முடைய மய்யழிக் கரையோரம் என்னும் மலையாள மொழிபெயர்ப்பு நூலுக்காகப் பெற்றவர்.

இவர் தெலுங்கில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த அடுத்த வீடு என்னும் சிறுகதைத் தொகுப்பு நூலும், அனல்காற்று என்னும் கவிதைத் தொகுப்பு நூலும் நடுவண் அரசின் பரிசுகளைப் பெற்றவை.

இவருடைய அடுத்த வீடு, அனல் காற்று, கௌசல்யா, மரக்குதிரை ஆகிய மொழிபெயர்ப்பு நூல்கள் மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் முதுகலை மாணவர்களுக்கும், விஞ்ஞானமும் வாழ்க்கை நலமும் என்னும் நூல் புதுமுக மாணவர்களுக்கும் பாடநூல்களாகப் பரிந்துரைக்கப்பட்ட சிறப்புக்குரியன.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், கேரளப் பல்கலைக் கழகத்திலும் இவருடைய நூல்கள் பாடநூல்களாகப் பயிற்றுவிக்கப்பட்ட பெருமைக்குரியன.

இவருடைய கரையான்கள் என்னும் தெலுங்குச் சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நூல் திருப்பூர்த் தமிழ்ச்சங்க விருதையும், நல்லி திசையெட்டும் இதழ்ப் பரிசினையும் பெற்ற சிறப்புக்குரியது.

காலமெனும் கடற்கரையில்
காலரிக்க நடக்கின்றேன்
வலப்பக்கம் மணல்மேடு;
அலைகடலோ மறுபக்கம்

நடப்பதனால் பதிகின்ற
அடிச்சுவட்டைப் பார்ப்பதற்காய்த்
திரும்பி நான் நிற்கையிலே
உருவழிந்து போனதுவே

மணல்மேட்டில் நடைதொடர்ந்தால்
உணர்வெல்லாம் துடிப்புற்றுச்
சுவடறியும்; ஆனாலும்
புவனத்துச் சூடெல்லாம்
மணல்மேட்டில் குடியிருக்க
கணமேனும் அவ்வழியே
நடப்பதெனில் அஞ்சுகின்றேன்
இடப்பக்கம் அலைமோதும்

ஆழ்கடலை வயப்படுத்தும்
சூழ்ச்சியது தெரியவில்லை
நடக்கின்றேன் தொடர்நடையாய்;
நெடுநடையாய் நடக்கின்றேன்
அனுபவத்தின் முத்திரையாய்
நினைந்தங்குச் சுவடொன்றை
நிலையாக்கத் துடிக்கின்றேன்
அலையடுத்த கடற்கரையில்.

என்று பாடித் தடம்பதித்து தொண்ணூறாம் அகவையைக் கடந்து இலக்கிய நடைப்பயணம் செய்கின்ற இளம்பாரதி அவர்கள் இளந்தலைமுறையினர்க்கும் இனிவரும் தலைமுறையினர்க்கும் வழிகாட்டியாய்த் திகழ்கிறார்.

05.07.2023
புதுச்சேரி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *