கோவை மாநகரம் தான் பாரதியாருக்கு “பாரதி” என்ற பட்டத்தினை வழங்கிய பெருமை மிக்க நகரமாகும்.
பழைய கோவை மாவட்டத்திலுள்ள அவிநாசியை (தற்போது திருப்பூர் மாவட்டம்)சேர்ந்த சித்தமருத்துவ நிபுணர் மற்றும் யோகக் கலை வல்லுநர் சிவஞான யோகி என்பவரால் பாரதியாருக்கு பாரதி என்ற பட்டம் வழங்கப்பட்டது.
சிவஞான யோகி என்பவர் தன்னுடைய திறமைக்கு பொருத்தமான இடம் எனக் கண்டு கொண்டது விருதுபட்டி (தற்போதுள்ள விருது நகர் மாவட்டம் ) ஆகும் .
விருதுபட்டிக்கு நன்றி செலுத்தும் விதமாக தன்னுடைய பெயருக்கு முன்னால் விருதை என்ற அடை மொழியை சேர்த்து விருதை சிவஞான யோகி என மாற்றிக்கொண்டார் .
திருவிடர் கழகம் “ மற்றும் ”பத்திவிளை கழகம்” என்ற பெயர்களில் கோவில்பட்டியில் சங்கங்கள் அமைத்து, சித்த மருத்துவச் சாலை மூலமாக தீர்க்க முடியாத பல பெரு நோய்களைத் தமிழ்த் சித்த வைத்தியத்தின் மூலம் தீர்த்து வைத்தவர் விருதை சிவஞான யோகி ஆவார்.
விருதை சிவஞான யோகி அவர்களால் அன்று போட்ட விதை தான் இன்று வளர்ந்துள்ள சென்னையில் சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் இம்ப்காப்ஸ் போன்ற மருத்துவ நிறுவனங்கள் ஆகும் .
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுர ஜமீனில் திசம்பர் 11, 1882 ஆம் ஆண்டு மகாகவி சுப்பிரமணிய பாரதி அவர்கள் சுப்பையா (எ) சுப்பிரமணியன் ஆக பிறந்தார். இவர் இளம் வயத்தில் எட்டயபுர ஜமீனுடன் மிகுந்த நெருக்கமாக இருந்தார். அவர் ஜமீன்தாருடன் நெருக்கமாக இருந்ததால், வித்வான்களும் மற்றவர்களும் அவரிடம் அன்பும் மரியாதையும் காட்டினர். தனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். அப்போது எட்டயபுரம் சமஸ்தானத்தில் கோவை தமிழ்ப் புலவர் விருதை சிவஞான யோகி அவர்களால் பாரதியாருக்கு அவரின் 11 வயதில் ‘பாரதி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.
பாரதி என்றால் சரஸ்வதி மற்றும் கலைமகள் என்று பொருளாகும் . நல்ல சொல்வன்மையும் மற்றும் கவித்துவமும் மிக்கவர்களுக்கு அந்தக்காலத்தில் இப்பட்டம் வழங்கப்பட்டது .அந்த வகையில் பாரதியார் பட்டம் பெற்ற பலர் உண்டு. அவ்வாறு பட்டம் பெற்றவர்களாக
சோமசுந்தர பாரதியார் ,
சுப்ரமணிய பாரதியார் ,
சுத்தானந்த பாரதியார் ,
கோபாலகிருஷ்ண பாரதியார் எனப் பலர் காணப்பட்டனர் .
ஆனால் தனது கவித்துவத்தால் பாரதியார் என்றதுமே சுப்பிரமணிய பாரதியாரே நமது நினைவிற்கு வருபவராக உள்ளார்.
எட்டயபுரம் சமஸ்தானத்தில் பாரதி பட்டம் வழங்கப்பட்டாலும், வழங்கியவர் கோவை தமிழ் புலவர் விருதை சிவஞான யோகி என்பதால் கோவை பெருமையடைகிறது. மகாகவியை வணங்குகிறது .
பேசும் பிரபாகரன்