Subscribe

Thamizhbooks ad

கட்டுரை: மூளையைச் சூழும் கற்சுவர்-வறீதையா கான்ஸ்தந்தின்

‘இராஜபார்வை’ திரைப்படத்தின் கதைநாயகன் பார்வைப் புலனற்ற இசைவாணன். குடியிருக்கும் வாடகை வீட்டின் வரைபடத்தைத் தன் நினைவில் தெளிவாகப் பதிய வைத்திருக்கிறான். எல்லாவற்றிலும் ஓர் ஒழுங்கை நிறுவிப் பின்பற்றுபவன். அந்தப் படத்தில் ஒரு காட்சி. மின்சாரம் நின்றுபோய், அறை இருட்டாகிவிடுகிறது. அவனைச் சந்திக்க வந்தவள் செய்வதறியாது தடுமாறுகையில், கதைநாயகன் வெகு இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கிறான். அவள் அவன் பார்வையில் மிளிரும் கம்பீரத்தை வியப்போடு பார்க்கிறாள். சராசரி மனிதர்களால் உணர முடியாத கம்பீரம் அது.

வழமையான தடங்களில் மட்டுமே மனிதர்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவே அவர்களுக்கு வசதியாக இருக்கிறது. சுகம், சொகுசு என்பதன் கதகதப்பைத் தாண்டி பாலைவனத்தின் தகிக்கும் வெய்யில், மூடுபனி, புயல்மழையை எதிர்கொள்ள யார்தான் விரும்புவார்கள்? பிறழ்வும் திரிபும் மனிதர்களுக்கு உவப்பானவை அல்லவே!

எது இயல்பு, எது திரிபு? அவ்வாறு வரையறுத்தவர் யார்? நேற்றைய ‘இயல்பு’ இன்று திரிபாகலாம்; இன்றைக்குத் திரிபு நாளை இயல்பென்றாகலாம். என் இயல்பு மற்றொருவருக்குத் திரிபு ஆகலாம். காலம் சார்ந்து, இடம் சார்ந்து, மனிதர் சார்ந்து வரையறைகள் மாறிக்கொண்டே இருப்பது; இதை மனிதர்கள் அறிவார்களா? தன் ‘இயல்பு’ நிலைக்கு நீண்டகால உத்தரவாதம் இல்லை என்பதை, இயல்பும் மற்றமையும் வெறும் நிகழ்தகவுகளின் கருணை என்பதை மனிதர்கள் அறிவரோ?

இரவும் பகலும் போல, ஒளியும் இருளும் போல, அசலும் பிரதியும் போல எல்லா மனிதருக்குள்ளும் இயல்புலகும் பிறழ்வுலகும் ஒன்றுக்கொன்று இணையாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

எல்லாப் புலன்களும், எல்லா உறுப்புகளும் இயல்பாய் வேலை செய்கிற, புஷ்டியான ஒரு குழந்தைதான் ஒவ்வொரு பெற்றோரின் கனவாய் இருக்கிறது; எதிர்பார்த்தபடியே ஒரு குழந்தை பிறந்துவிட்டால் அதைத் தன் சாதனையாய்க் கருதிப் பெருமிதம் கொள்கிறான் தந்தை. உண்மையில் அப்படி வாய்ப்பதே நிகழ்தகவின்  அதிசயம் என்பது அவனுக்கு உறைப்பதில்லை. இப்படி வாய்த்தவர்கள், வாய்க்காத மனிதர்களின் உலகத்தை திரும்பிப் பார்ப்பதில்லை.

பத்மஜா_நாராயணன் மொழிபெயர்த்துள்ள ‘ஆட்டிசம்_கவிதைகள்’ Book coverஎன்கிற தொகுப்பில் ஓர் ஆட்டிச சிறுவனின் தந்தை தன் மகனைக் கொண்டாடுவதாய் ஒரு கவிதை (1):

 …நீ உருவகத்தில் உறவாடுகிறாய்

இருமக் குறியீட்டில் சிந்திக்கிறாய்…

நீ அற்புதமானவன் மகனே!’ (1)

200க்கு மேற்பட்ட பிறவிசார் நோயியங்களை மருத்துவ உலகம் மனிதவுடலில் கண்டறிந்துள்ளது. பார்வைக் குறைபாடு, இரத்த சோகை, தோல் நிறமிக் கோளாறு, டவுன் சிண்ட்ரோம்… போலவே, ஆட்டிச நிலையாளர்களுக்கு உடலியல் ரீதியான பலவகைப் போதாமைகள் உண்டு; அவற்றின் தொகையை ‘ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம்’ என்கிறார்கள். சூரிய ஒளியில் அடங்கி நிற்கும் நிறமாலை போல, ஆட்டிச நிலையாளர்களுக்கு வேறு பல தனித்திறன்கள் உண்டு. நிறமாலையின் அழகு மிளிரும் திறன்களை, பெருமை என்பதா, போதாமை என்பதா?

ஆட்டிச நிலையாளர்களின் எழுத்துகள் பெரிதாய் எங்குமே கிடைக்கவில்லை. அக் குறைபாட்டின் கிடுக்கிப்பிடியை மீறி வெளியே வந்து, ட்ரெம்பிள் கிராண்ட்லின்நவோகி ஹிகாடா போன்ற ஓரிருவரின் தன்வரலாறுகளைத் தவிர, சில மொழிகளில் கொஞ்சம் கவிதைகள் கிடைக்கப்பெறுகின்றன. இக்கவிதைகளில் ஆட்டிச நிலையாளர்களின் உறவினர்/ பராமரிப்பாளர்களின் பதிவுகளும் அடங்கும். தொல்லியல் தடயங்களின் மதிப்புக் கொண்டவை இப்பதிவுகள். மருத்துவ உலகம் அறியத்தரும் அடிப்படை அறிவியல் விவரங்கள் ஒழிய, அவர்களின் மனஉலகினுள் பயணிக்க, அவர்களின் சிக்கல்களை அறிந்துகொள்ள இன்றைக்கு இப்பதிவுகள் மட்டுமே சிறுவிளக்குகளாக நம் கைகளில் கிடைத்திருக்கின்றன. இக்கவிதைகளின் வழியாக அவர்களின் உலகத்துக்குள் பயணிக்கையில் அனுதாபத்தைக் கடந்த அக்கறை ஏற்படுகிறது; அவர்களை நேசிக்கத் தொடங்குகிறோம்…

மனச்சிதைவு, சித்தப் பிரமை, தோற்ற மாயை போன்ற மனநலக் கோளாறுகளைக் குறித்த சிறு புரிதலை வாசிப்பு, அனுபவங்கள், உரையாடல் வழி பெற்றிருக்கும் எனக்கு, ஆட்டிச நிலையாளர்களின் உலகத்துக்குள் பயணிக்கும் வாய்ப்பு பத்மஜாவின் தொகுபு போன்ற சில நூல்களின் மூலம் கிடைத்திருக்கிறது. என் தெருவில் அப்படிப்பட்ட இரண்டு சிறுவர்கள் உள்ளனர். அவர்களுக்குச் சரியான சிகிச்சை, பயிற்சி தரப்படுகிறதா, பராமரிப்பவர்கள் சரியான புரிதலோடு அணுகுகிறார்களா என்பதைக் குறித்த கவலை எனக்கு இருந்தது, இப்போதும் இருக்கிறது. ஆட்டிசம் என்பது உண்மையில் என்ன மாதிரியான குறைபாடு, அதன் அடிப்படை அடையாளங்கள் கூறுகள் என்னென்ன என்பதே பெரும் புதிர்தான். மனப் பிறழ்வைப் புரிந்துகொண்ட அளவுக்குக் கூட ஆட்டிசம் புரிபடவில்லை. வழமையான வெளி அடையாளங்கள் இவர்களிடம் தென்படுவதில்லை. லக்‌ஷ்மி_பாலகிருஷ்ணனின் எழுதாப்_பயணம், பாலபாரதியின் துலக்கம் என்னும் இரண்டு புத்தகங்களை வாசித்த பிறகு எனக்குக் கொஞ்சம் பிடிபட்டது. ‘எழுதாப் பயணம்’ என்கிற நூலை அண்மையில் ஓர் ஆட்டிச நிலையாளரின் தந்தைக்குக் கொடுத்தேன்.

ஆட்டிச நிலையாளர்களின் உலகம் எப்படி இருக்கும்? அவர்களுடைய எண்ணப் போக்கை எப்படி அறிந்துகொள்வது? இக் கேள்விக்குப் பதிலாக சில கவிதைகள் தொகுப்பில் உள்ளன.

ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சாம்பல்நிற நதியைப் போல

என்னைச் சுற்றி ஓசைகள் மங்கத் தொடங்கின… (2) 

என்கிறது ஒரு கவிதை. தகவல் பரிமாற்றத்துக்கு நாம் வழமையாகப் பேச்சுமொழி, உடல்மொழியைச் சார்ந்திருக்கிறோம். பொதுவாக, ஆட்டிச நிலையாளர்களால் எண்ணங்களைப் பேச்சாகவோ எழுத்தாகவோ வெளிப்படுத்த முடியாது. அதன்பொருட்டு, ‘ஆட்டிச நிலையாளர்கள் மூளை வளர்ச்சி குறைந்தவர்கள்’ என்பது அபத்தமான முடிவு. ‘சிந்தனையிலும் உணர்விலும் மற்றவர்களைப் போலவே இருப்பார்கள்’ என்று மருத்துவ அறிவியல் சொல்கிறது. அவர்கள் தனித்துவமானவர்கள், நம் சட்டகங்களுக்குள்ளே வைத்து அவர்களைப் புரிந்துகொள்வது கடினமானது. அது நம்முடைய சிக்கல். சட்டகத்தை மாற்றுவதுதான் சரியான தீர்வு.

இவ்வுலகில் நான் தனித்துவமானவன்

கொஞ்சம் மர்மமானவனும் கூட

என் வேகம் உன்னுடையது போலல்ல…(3)

ஒற்றைத் தன்மை, ஒற்றை அடையாளம், சீர்மை என வலிந்து திணிக்கிறது உலகம். எவராயினும் அவ்வழியையே பின்பற்ற வேண்டும் என்பது எத்தனை பெரிய வன்முறை? சதுரமான கோலை வட்டமான குழுயில் பொருத்தியே தீரவேண்டும் என்று ஆணையிடுவது அறியாமையா, ஆதிக்கமா? துருவிப் பார்க்கும் கண்கள் அம்மனிதர்களைப் புண்படுத்துகின்றன. தன்னை அடையாளம் காணும் அடங்கா வேட்கை அவர்களை இயக்கிக் கொண்டிருக்கிறது (‘நான் ஏன் நானாக இருக்கிறேன்?…(4); தான் ஒரு காட்சிப் பொருளல்ல என்று ஆட்டிச குழந்தைகள் உலகுக்கு உரக்கச் சொல்ல விரும்புகின்றனர் (‘தன் ஆன்மாவைப் புகைப்படங்கள் / திருடிக்கொண்டுவிடும் என அவள் ஏன் நினைக்கிறாள் / என யாராவது அவளிடம் கேட்டதுண்டா?… (4) மற்றொருவரின் தனிமைக்குள் எட்டிப் பார்ப்பதும் ஒட்டுக்கேட்பதும் மீறல் என்பது நம் பண்பாட்டில் இன்னும் சொல்லப்படவில்லையோ? (5)

யாருமே பார்க்காத, யாருமே எண்ணாத

ஒரு நாணயத்தின்

ஆயிரம் பக்கங்கள் நான்… (6)

ஆட்டிச குழந்தை தன்னைப் புரிந்துகொள்ளக் கோருகிறது (‘நிழலில் நடந்தபடி, அமைதியாக / நானும் உங்கள் காதில் முணுமுணுக்கிறேன் / இது கடவுளின் கீர்த்தியென!… (1) ‘தான் ஏன் மற்றவர்களின் புறக்கணிப்புக்கு ஆளாகிறேன்?’ என்கிற கேள்வியின் சுழலுக்குள் அக் குழந்தைமனம் மூழ்கித் தவிக்கிறது (‘அனைவரிடமிருந்தும் அவள் கண்கள் விலகிச் செல்லுகின்றன… (4); அக்கறையின் தழுவலால் அக்குழந்தையை அதிலிருந்து மீட்டுவிட முடியும்தான்.

ஆட்டிச உலகம் மானுடத்துக்கு விடுக்கும் மிகப்பெரிய சவால், ‘என் கண்களால் பாருங்கள்’ (7) எனும் தலைப்பிட்ட கவிதை.  மனிதனால் நினைத்துப் பார்க்க முடியாத எத்தனையோ செயல்பாடுகள் உண்டு. எனில், சற்றே வித்தியாசமாய் இருப்பவர்களைத் தீர்ப்பிடும் உரிமையை மட்டும் எப்படி நம்மால் கையில் எடுத்துக்கொள்ள முடிகிறது?

ஆட்டிசம் மிகவும் கடுமையானது / அன்பு செய்தல்… மிக எளிதானது…’ என்கிறது மற்றொரு கவிதை (8). ‘என் மூளையைச் சுற்றி கல்லால் ஒரு சுவர் எழுப்பியதுபோல் உள்ளது. (9) அன்பைப் புரிந்துகொண்டு ஏற்கும் திறனற்றிருக்கிறது ஆட்டிச குழந்தை (10). பிரித்தறியும் திறன் மங்கிப்போன நிலை அது

எல்லாம் கருமை

அனைத்தும் வெண்மை

பழுப்பே எங்குமில்லை… (11)

அவன் புரிந்துகொள்ளும் மொழி

அவன் வெளிப்படுத்தும் மொழியைவிட மேலானது… (12)

மனதில் பொங்கிவரும் எண்ணங்களை மற்றவர்களைப்போல் வெளிப்படுத்த இயலாமல் போகும்போது வேறு விதங்களில் மனம் அவற்றுக்கு வடிகால் தேடும்:

 

என்னுடைய நோக்கம் தெளிவாக இருந்தும்

ஒவ்வொரு திருப்பத்திலும் தடுக்கப்பட்டேன்…

நுழைவாயிலுக்கும் வெளிவாயிலுக்கும் இடையே

நான் அலைந்து கொண்டிருந்தேன்… (12)

சில வேளைகளில் அது வன்முறையின் வடிவம் எடுப்பதும் உண்டு. பராமரிப்பாளர்களின் தரப்பில் நின்று பார்க்கும்போது அத்தகைய சூழல்களைக் கையாள்வது கடினமானது என்றாலும் முடியாத ஒன்றல்ல. ஆனால் பெற்றோர்கள், சகோதரர்கள் அதைப் பெரும் சுமையாகப் பார்ப்பது இயல்புதான். இது தொடர்பில், ஆட்டிசத்தின் ஆரம்பகால அடையாளங்கள், குழந்தை வளர்ச்சியின் மைல்கற்கள் குறித்த புரிதலும், சீரான கண்காணிப்பும் பெற்றோர் தரப்பில் அற்றுப்போவது எவ்வாறு நிலைமையை மேலும் சிக்கலாக்கும் என்பதைப் பற்றிப் பேசும் கவிதை (12) மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

ஆட்டிச குழந்தையின் பெரும் ஏக்கம் என்னவாக இருக்கும்? அங்கீகாரம், கவனிப்பு, அக்கறை. ‘உலகிலிருந்து என்னைத் தள்ளி நிறுத்தாதீர்கள்’ (13) என யாசிக்கிறது அக்குழந்தை.

நான் யாசிப்பதெல்லாம்

பேசுவதைக் கேட்கும் ஒரு செவி

உதவிக்கு நீளும் ஒரு கரம்… (14)

என்னுடன் விளையாட விரும்பும்

ஒரேயொரு நண்பன் வேண்டும்… (15)

ஒரேயொரு மனிதனின் அக்கறைப் பார்வை அதன் வாழ்வில் வசந்தத்தைக் கொணர முடியும். அந்நாளுக்காய்த் தவங்கிடக்கிறது குழந்தை மனம் (ஆயினும் அவனின் மிகச் சிறந்த நாள் அது…). (16)

ஆட்டிசக் குழந்தையுள்ள ஒரு குடும்பம் ஒருவகையில் இயல்பு வாழ்க்கை மறுக்கப்பட்ட ஒன்று. குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரும் அச்சுமையைப் பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும்- ஏதோவொரு வகையில். உடன்பிறந்த தம்பியின் மனப்பதிவாக வரும் ஒரு கவிதை, அந்த வலியை நமக்குச் சொல்லுகிறது:

பொறியில் அகப்பட்டவனாய்

நான் உணர்வதைத் தவிர்க்க முடியவில்லை.

……

என்னால் காதல் வயப்பட முடியாது

அவர்களும் உன்னை ஏற்றுக்கொள்ளும் வரை…(17)

இத்தொகுப்பில் ஒரேயொரு கவிதை, ஆட்டிசக் குழந்தையின் ‘தாயைப் பழித்தல்’ (18) என்கிற முக்கியமான பேசுபொருளை முன்வைக்கிறது. தாயின் இறுக்கமான மனநிலைதான் குழந்தைக்கு ஆட்டிச பாதிப்பு ஏற்படக் காரணம் என்று 80 ஆண்டுகளுக்கு முன்னால் லியோ கார்னர் தன் சந்தேகத்தைச் சொல்லிச் சென்றிருக்கிறார். அவரது கூற்று பிழையென எப்போதோ நிறுவப்பட்டுவிட்டது. எனினும், பொதுவெளிக்கு அவ்வறிவு போய்ச் சேரவில்லை. நீங்கள் சிரிக்கும்போது / நாங்கள் பாதியாய் உடைகிறோம்… (19) என்கிற வரிகளில் தாய் – மகவு இருவரின் வலிகளை உணர முடிகிறது. ஆட்டிச குழந்தையைப் பராமரிக்கும் தாயிடம் குற்றவுணர்வைத் தூண்டுகிறது. தன் குழந்தையின் எதிர்காலத்தை முன்னிட்டு அதன் தாய் துணிவுடன் எழுந்து நிற்க வேண்டும். பொதுவெளியில் ஆட்டிசம் குறித்த சரியான புரிதலை ஏற்படுத்துவது பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆதரவான சூழலை உருவாக்கும்.

வெளிச்சம் பெறாத மற்றோர் உலகத்தின் பாதாளக் கடல்களுக்குள் நம்மை அழைத்துச் செல்கின்றன இக்கவிதைகள். நாம் அறிந்திராத, அறிவதற்கு அக்கறைப்பட்டிராத உலகம் அது; புறக்கணிப்பின் துயர்மிகு உலகம்; மூச்சுத் திணறடிக்கும் தோல்விகளின் இருட்பாதாளங்களில் இன்னும் நம்பிக்கை இழக்காமல் உறுதியுடன் போராடிக் கொண்டிருக்கும் தாய்-மகவுகளின் உலகம். உங்களிடம் அவர்கள் பெரிதாய் எதையும் கேட்கவில்லை- சிறு துளி அக்கறை ஒழிய.

மொழியில் எளிமை பேணுவதற்குப் புலமை மிக வேண்டும். ஆட்டிசம் போன்ற புரிந்து கொள்வதற்குக் கடினமான குறைபாட்டின் தாக்கங்களைப் பேச கவிதையைவிட எளிமையான இலக்கிய வடிவத்தையே முன்மொழிவேன்.  எனின், கிடைக்கப்பெறும் இலக்கிய வடிவங்களில்தான் வாசிப்பை நிகழ்த்த வேண்டியிருக்கிறது. பத்மஜா நாராயணனின் ஆற்றொழுக்கான மொழி, கவிதைகளுக்குள் நம்மை எளிதாய்ப் பயணிக்க வைக்கிறது; அதோடு, அவர் தேர்ந்துகொள்ளும் சொற்களின் துல்லியத்தையும் சொல்லியாக வேண்டும். மொழிபெயர்ப்புக்கு ஒருவர் தேர்ந்துகொள்ளும் நூல் ஒருவகையில் அவருடைய மானுட அக்கறையின் அடையாளமாகிறது. முன்னதாக, பத்மஜா மொழிபெயர்த்த மனச்சிதைவு நோயாளியைப் பராமரிப்பவரின் அனுபவத்தைப் பேசுகிற, ‘ஷ்-இன் ஒலி’ (டேனியல் லிம்) என்னும் நூலையும் வாசித்திருக்கிறேன். அவருக்கு எனது அன்பும் வாழ்த்தும்.

———–

மேற்கோள் கவிதைகள் (ஆட்டிசம் கவிதைகள்)

 1. ஆட்டிசமும் கலையுணர்வும்

2 .அந்த நடைமேடையில் நான் என்ன செய்துகொண்டிருந்தேன்?

 1. எப்பொழுது?
 2. அசுரச் சிறுமி
 3. உங்களுக்கு உறுத்தவில்லையா?
 4. நசுங்கிய நாணயம்
 5. என் கண்களால் பாருங்கள்
 6. ஆட்டிசம்
 7. சுவர்
 8. அவள் மகன்
 9. ஆ ஆ ஆ ஆ ஆ
 10. அது ஆட்டிசம் என்று உங்களுக்குத் தெரியவில்லை
 11. என் கண்களைப் பாருங்கள்
 12. நட்சத்திரத்திடம் ஒரு வேண்டுகோள்
 13. நான் வித்தியாசமானவன் – எனக்கு நண்பர்கள் கிடைப்பதில்லை
 14. ஆட்டிச சிறுவனின் முதல் பிறந்தநாள் விழா
 15. ஆட்டிசக் குழந்தையின் சகோதரன்
 16. தாயைப் பழித்தல்
 17. வலி மிகுந்த ஆட்டிசம்

Latest

நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்

"டா வின்சி கோட் " ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து) வெளியீடு :சான்போர்ட் ஜெ...

நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்

தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான்...

நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்

இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு...

நூல் அறிமுகம்: கொடிவழி – இரா.செந்தில் குமார்

சமீபத்தில் வெளியான காமுத்துரை தோழரின் புதிய நாவலான கொடிவழி நாவல் வாசித்தேன்....

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்

"டா வின்சி கோட் " ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து) வெளியீடு :சான்போர்ட் ஜெ கிரீன் பர்கர் அசோசியேட்ஸ் ஐஎன்சி ,யுஎஸ்ஏ  தமிழில் :எதிர் வெளியீடு முதல் பதிப்பு 2016 -நான்காம் பதிப்பு 2021 600 பக்கங்கள்- ரூபாய் 699 தமிழாக்கம்...

நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்

தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான் கதையில் வரும் குருவம்மா என்கிற எருமை தான் கதாநாயகி என்றாலும் அதில் மிக முக்கியமான செய்தியான கவனக்குறைவு பற்றி சூசகமாக...

நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்

இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு . சற்று பொறுமையாய் நேரம் மெனக்கெட்டு வாசிக்க ; இதயம் உள்ள ஒவ்வொருவரையும் வேண்டுகிறேன். தூங்கவிடாமல் துரத்தும் குழந்தைகளின் மரண ஓலம்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here