சினிமா எனும் கலைவடிவம் நாடகக்கலையின் ஒரு பரிணாம வளர்ச்சி என்று கூறும்போது அதில் நாடகத் தன்மையின் அத்தனை அம்சங்களும் அதனுள் உள்ளடங்கியிருக்கும். ஒரு கதை மற்றும் அந்த கதையை நகர்த்திச் செல்லும் கதாநாயகன் கதாநாயகி மற்றும் நகைச்சுவை நடிகர்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். நாடகமோ சினிமாவோ அது எழுதப்படுகிற போது நிலவிய சமூகச் சூழல் அந்தக் கதையில் பிரதிபலிப்பதைக் காணமுடியும். அதைத் தவிர்த்து எந்த ஒரு படைப்பும் உருவாகமுடியாது.
கலைஞர் வசனத்தில் உருவான “பராசக்தி “ என்கிற திரைப்படம் தமிழர் மனதில் என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும் படமாகும். இந்தப் படம் வெளியான வருடம் 1952. அப்போதைய சமூகச் சூழலை முன்வைத்து கதை உருவாக்கபட்டிருக்கும்
சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் காங்கிரஸ் கட்சியின் முகச்சாயலே மாறிவிட்டது. அந்தக் கட்சியை வழிநடத்தி வந்தவர்கள் படித்த மேட்டுக்குடி சமூகத்தினர் என்பதாலும் அந்த மேட்டுக்குடியில் கணிசமான அளவில் உயர்சாதியினர் இருந்ததால் அவர்களின் சமூகப்பார்வை மெச்சும்படியாய் இல்லாது போனது.
வெறும் அரசியல் மாற்றம் ஒன்றே ஏற்பட்டு சமூக ஏற்றதாழ்வுகள் தீண்டாமை, சாதிக்கொடுமை, பரந்தஅளவில் இருந்தபோது தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சமூக சீர்திருத்தவாதிகள் தோன்றினர்.
ஏற்கெனவே சுதந்திரப் போராட்ட காலத்திலேயே டாக்டர்.பாபாசாஹேப் அம்பேத்கர் தலித்தியர்களுக்கு ஆதரவாய் குரல் கொடுத்து வந்த சூழலில் பிராந்திய அளவில் தந்தை பெரியார் போன்றோர்களும் உயர்சாதியினர் அடக்குமுறை, தீண்டாமை, பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.
தமிழகத்தில் காங்கிரஸ் ராஜகோபாலாச்சாரியார் தலைமையில் ஆட்சிபீடத்தில் இருந்தபோது குலக்கல்வி முறை கொண்டு வரப்பட்டது .இவை போன்ற செயல்கள் மற்றும் அன்றைக்கு மறுக்கப்பட்ட அனைவருக்கும் கல்வி போன்றவைகளுக்கு எதிராகத் தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு அலை கிளம்பியது. சமூக ஏற்றதாழ்வுகள் போன்ற அநீதிகளுக்கு எதிராக அன்றைய காலகட்டத்தில் தந்தைபெரியாருக்குத் துணையாய் ஒரு இளைஞர் கூட்டம் அணிசேர்ந்தது.
அந்த அணியில் தவிர்க்க முடியாத முக்கியமான ஒருவர் கலைஞர் கருணாநிதி. திருவாரூர் மாவட்டம், திருக்குவளை எனும் ஊரில் 1924 ம் வருடம் ஜூன் மூன்றாம்தேதி ஒரு இசைவேளாளர் குடும்பத்தில் முத்துவேலர் அஞ்சுகம் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த கலைஞருக்கு இயல்பிலேயே மேடைப்பேச்சு, எழுத்து இவைகளில் ஆர்வம் அதிகம் ஏற்பட்டுத் தனது இருபதாவது வயதிலேயே முதல் மேடை நாடகமான “பழனியப்பன் ” எனும் நாடகத்தை அரங்கேற்றினார்.
அவர் வசனம் எழுதிய முதல் படம் ராஜகுமாரி (1947)வெளிவந்தபோது கலைஞருக்கு வயது 23. இதனைத் தொடர்ந்து 1952ல் கலைஞரின் திரைக்கதை வசனத்தில் வெளிவந்த ” பராசக்தி ” சிவாஜியை தமிழ்த் திரைக்கு நல்கிய படம். கிருஷ்ணன்பஞ்சு இயக்கத்தில் உருவான இந்தப் படம், தமிழ் சினிமாவைப் புரட்டிப் போட்ட படம்.
அன்றைய சமூக அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்த படம். பெண்ணடிமைத்தனத்துக்கு எதிராக உயர்சாதி ஆதிக்கத்தை ஒரு பூசாரி மூலம் கேள்வி கேட்ட படம் . தமிழ்த் திரையில் பகுத்தறிவை முன் வைத்த முதல் படம்.
அன்றைக்கு அரசியலில் மட்டுமல்ல சினிமா போன்ற கலைத்துறைகளிலும் உயர்சாதி ஆதிக்கம் மேலோங்கி இருந்த காலத்தில் பகுத்தறிவாளர்களும் சினிமாவுக்குள் வரமுடியும் என்பதை நிரூபித்தபடம் . இது முதல் சமூகப்படம். சமூக அவலங்களைத் தட்டிக் கேட்ட படம்.
அடித்தட்டு மக்களுக்கு எதிராக அபலைப் பெண்களுக்கு எதிராக ஈனச்செயலை செய்துவிட்டு கற்சிலைக்குப் பின்னால் மறைந்து கொள்ளும் போலி ஆன்மீகவாதிகளை வசனங்களால் சாட்டை கொண்டு விளாசினார் கலைஞர்.
“ஏய்பூசாரி… என்றைக்கடா பேசினாள் அம்பாள்”…எனும் சாட்டையடி வசனத்தில் போலி ஆன்மீகவாதிகளை அடையாளம் கண்டு கொள்ள வைத்த படம்.
சம்பவத்திற்கு வசனம் என்றில்லாமல் வசனத்திற்காக சம்பவங்களை நுழைத்து வசனங்கள் மூலம் ரசிகன் மனதிலும், உணர்விலும் பகுத்தறிவு பூகம்பம் ஏற்படுத்திய படம் இந்தப் படம்.
தன்தங்கையிடம்முறைதவறிநடந்தபூசாரியைதாக்கியதால்குற்றவாளிகூண்டில் நிறுத்தப்பட்டசிவாஜிதன்நிலையைநியாயப்படுத்திபேசும்நீதிமன்றகாட்சிதமிழ் திரையில்மட்டுமல்லஒட்டுமொத்ததமிழ்சமூகத்திற்கேஒருபுதுவிதஉத்வேகம் கொடுத்தஒன்றாகும்.
“கோவிலில் கலகம் செய்தேன்… கோவில் கூடாது என்பதற்காக அல்ல… கோவில் கொடியவர்களின் கூடாரமாகி விடக்கூடாது என்பதற்காகத்தான் ….என் செயலை சுயநலம் என்பீர்கள் …ஆம் சுயநலம்தான் …ஆகாரத்திற்காக அழுக்கைத் தின்று தடாகத்தை சுத்தம் செய்கிறதே மீன்; அதுபோல என் சுயநலத்திலும் ஒரு பொதுநலமும் கலந்திருக்கிறது…” என்பதான வசனம் ஒரு பாதிக்கப்பட்டவனின் புரட்சிகரக் குமுறலில் பொதுநலனும் அடங்கி இருக்கிறது என்பதை கலைஞர் தம் வசனம் மூலம் கூறி இருப்பது பாராட்டுதலுக்குரிய ஒன்றாகும்.
ஒரு புரட்சியாளனை உருவாக்குவது சுற்றுசூழல் மட்டுமல்ல அவனின் தனிப்பட்ட வேதனைகளுக்கும் வலிகளுக்கும் கூடப் பெரும்பங்குண்டு என்பதை கலைஞர் சுட்டிக் காட்டியிருப்பார்.
“பூசாரியை தாக்கினேன், அவன் பக்தன் என்பதற்காக அல்ல ..பக்தி பகல் வேசமாகி விட்டதை கண்டிப்பதற்காக …” என்கிற வசனம் மூலம்தான் ஒரு வறட்டு நாத்திகவாதி இல்லை என்பதை முன்வைக்கிறார் கலைஞர்..தவறு எவன் செய்தாலும் குற்றம் குற்றமே என்பதே இதன் பொருள்.
அன்றையசமூகத்தில்ஒருபெண்எவ்வாறெல்லாம்துன்பத்திற்குஆளாக்கப்பட்டாள்என்பதற்குவெளிப்பாடுஇந்தவசனம்
“பகட்டு என் தங்கையை மிரட்டியது பயந்து ஓடினாள் ..பணம் ஏன் தங்கையை துரத்தியது மீண்டும் ஓடினாள் ..பக்தி என் தங்கையை பயமுறுத்தியது. ஓடினாள் …ஓடினாள் …ஓடினாள் …வாழ்க்கையின்ஓரத்திற்கேஓடினாள் …”
இந்த வகையில் எல்லாம் அந்தக் காலத்து கலைஞரின் பேனா சமூகப் புரட்சியைப் பற்றிப் பேசியது. அன்றைய தமிழகத்தின் ஆட்சியின் அவலம் இவ்வாறு பராசக்தியில் வெளிப்படுத்தப்பட்டது.
“சிங்கத் திருநாடே நீ சிலந்திக்காடாக மாறியது எப்போது …வந்தாரை வாழவைக்கும் வளமிகு தமிழகமே சொந்த நாட்டானையே சுரண்டுவது எத்தனை நாள்களாக …வீரப் பெண்களின் ஏடுகளை எழுதி எழுதி ஏற்றம் பெற்ற என்னருமை பொன்னாடே நீ வீதிகளிலே விபச்சாரிகளை திரியவிட்டு உன் விழிகளை மூடிக்கொண்டது ஏன் …ஏன் ..என்கிற வசனம் பெண்களின் அவலநிலையை எடுத்துக் கூறியது .
இது ஒரு புறமிருக்க பொருளாதார ஏற்றதாழ்வுகளைப் பற்றி இந்தப் படத்தில் கலைஞர் “வானத்தை முட்டும் மாளிகைகள் மானத்தை இழந்த மனிதர்கள் …உயர்ந்த கோபுரங்கள் தாழ்ந்த உள்ளங்கள் “என்பன கலைஞருக்குள் இருந்த உணர்வை அன்றைய சமூகச் சூழலை வெளிப்படுத்தியது .
அடிப்படையில் பராசக்தி பாவலர் பாலசுந்தரத்தின் நாடகம். .ஆனால் அது கலைஞரின் கைவண்ணத்தில் கலைஞர் படமாக புரட்சிகரமான படமாக மாறிப் போனது.
இந்தப் படத்தில் ஆரம்ப காட்சியில் ரங்கூனில் இருந்து சிவாஜி தமிழகம் வரும்போது செல்வச் செழிப்போடு, தான் ஒரு செல்வந்தன் தோற்றத்தில், கோட்டு சூட்டு அணிந்து வலம் வருகிறார். அந்த சமூகத்திற்கே உரித்தான பலவீனத்தால் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து செல்வங்களை எல்லாம் இழக்கிறார். அப்படி செல்வங்களை இழப்பதற்கும் ஒரு பெண் தான் காரணம் என்று கதை கூறுகிறது. ஒரு விலைமாதுவின் வஞ்சக சூழ்ச்சியால் செல்வத்தை எல்லாம் நாயகன் இழந்து விடுவதாக கதை நகரும். இங்கே அந்த நாயக கதாபாத்திரத்தின் பலவீனம் முன்னிறுத்தப்படாமல் விலைமாது பெண்ணின் சூழ்ச்சியே பிரதானமாய் சுட்டிக்காண்பிக்கபட்டிருக்கும். எல்லாமும் எல்லோரும் கலந்திருக்கும் சமூகத்தில் வாழ்ந்து வருகிற நாம் எதனைத் தேர்வு செய்கிறோம் எனபது மிக முக்கியமான ஒன்று. அந்த தேர்வு தான் நம்மை சீரான பாதைக்கு வழி நடத்தும். தேளும் பாம்பும் நிறைந்த இடத்தில கை வைத்தால் அது நம்மை தீண்டத்தான் செய்யும். தவறு நம்மேல் இருக்கும்போது நாம் அதனை சாடுவது அறிவான செயல் ஆகாதல்லவா.
யாரும் ஆதரவற்ற அபலைப் பெண் என்றால் ஆணின் பார்வை என்னவாக இருக்கும் என்பதில் பராசக்தி காலத்தில் இருந்து இன்று வரை எந்த வித மாற்றமும் ஏற்பட்டு விடவில்லை. ஆதரவு தருகிறேன் என்கிற சாக்கில் முதலாளி வி.கே.ராமசாமி, விதவைப்பெண் கல்யாணியைத் தீண்ட முயல்வதும் அதனைத் தவிர்த்து அவள் அங்கிருந்து தப்பித்து வருவது மற்றும் கோவில் பூசாரி வசம் மாட்டிக் கொள்வது என்பதான விசயங்களை எல்லாம் சுட்டிக்காட்டி சிவாஜி இறுதி நீதிமன்ற காட்சியில் தன் தங்கை அனுபவித்த இன்னல்களைக் குறிப்பிட்டு அந்தக் கொடியவன்களோடு இணைந்து செல்வதைத்தான் இந்தக் கோர்ட் விரும்புகிறதா என்று பெண்மையின் மகத்துவத்தை முன் வைத்து கலைஞர் வசனம் தீட்டி இருப்பார்.
சிவாஜிக்கு ஜோடியாக நடித்திருக்கும் பண்டரிபாய் வெகு சில படங்களில் மட்டுமே இளமை தோற்றத்தில் தோன்றி இருப்பார். அதுவும் இந்தப் படத்தில் துள்ளித் துள்ளிக் குதித்து “ சிறு பெண்ணின் மனதை தொட்டு போறவரே….” என்ற பாடலில் தோன்றியிருப்பார். வலியச் சென்று நாயகனை நேசிக்கும் கதாபாத்திரம். இந்தத் தொழில் நுட்பம் இன்று வரை தமிழ்த் திரையில் தொடர்ந்திருக்கிறது.
பெரும்பாலான படங்களில் கதாநாயகர்களுக்கு அம்மாவாகத்தான் தோன்றுவார் பண்டரிபாய். எம்.ஜி.ஆர் படத்தில் இருந்து இதனைக் காணமுடியும். இந்த பார்முலா ரஜினி படத்து மன்னன் வரை தொடர்ந்திருந்தது. இத்தனை ஆண்டு காலமாய் அம்மா வேடம் போட்டு நடித்து இருந்ததற்கு மணி மகுடம் சூட்டும் வகையில் தான் அவருக்காக “அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே” என்ற பாடல் அமைந்து போனது.
பராசக்தி வெறும் ஒரு படம் என்று நம்மால் எளிதில் கடந்து சென்று விடுகிற ரகத்தைச் சார்ந்ததல்ல. அதனையெல்லாம் கடந்து பகுத்தறிவு மற்றும் பெண்ணுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளைப் பற்றி பேசிய படம். அதுவும் அந்த காலத்திலேயே அப்படியெல்லாம் திரையில் சாத்தியமானது என்பது பாராட்டுக்குரியதே.