katturai: thozhar musaffer (kakaabaabu)-r.paari கட்டுரை: தோழர் முசாபர் (காக்கா பாபு) - இரா.பாரி
katturai: thozhar musaffer (kakaabaabu)-r.paari கட்டுரை: தோழர் முசாபர் (காக்கா பாபு) - இரா.பாரி

கட்டுரை: தோழர் முசாபர் (காக்கா பாபு) – இரா.பாரி

காலனியமும், நிலப்பிரப்புத்துவமும் தலை துவங்கிய இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிக் கட்டும் பணிக்காக, காலனிய இந்திய சுதந்திரத்திற்காக 20 ஆண்டுகள் சிறையிலும், 8 ஆண்டுகள் மிகவும் சிக்கலான சூழ்நிலையுடன் தலைமறைவாக வாழ்ந்த மகாத்மா தோழர் முசாபர் அகமது.

“என் வாழ்வும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ” அவரின் சுயசரிதையில், “இது கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றிய என் நினைவுகள் அதற்கு உண்மையான ஆவணங்களைத் திரட்டி இருக்கிறேன்”, என்கிற அவரின் மொழியாகவே அவரைப் பற்றி நினைவுகள்……..

கட்சி அமைப்பாளராக, வழிக்காட்டியாக, மார்க்சியப் பத்திரிகையாளராக, சிறந்த தொழிற்சங்கத் தலைவராக அவர் பணிகள் அமைந்திருந்தன. இவை மூன்றும் ஒன்றை, ஒன்று விஞ்சி நின்றன.

மீரட் சதி வழக்கு:

1929 மார்ச் 30 அதிகாலை 3 மணி கல்கத்தா- ஐரோப்பிய அசைலம் சந்து 2/1 வீட்டின் கதவுகள் வேகமாக தட்டப்படுகிறது. தொழிலாளர்கள், விவசாயிகள் கட்சியின் அலுவலகத்தில் இருந்தது அதுவே கடைசி முறை. முசாபர்,ஷாலின் , ஸ்ப்ராட், ஹீடா, அயோத்தியா பிரசாத் கைது செய்யப்பட்டனர். முதல் சோசியலிஸ்ட் மையத்துடனான தொடர்புகள் முடிந்தன. இந்திய கம்யூனிஸ்ட்டுகளை ஒடுக்க உலகப் புகழ்பெற்ற மீரட் சதிவழக்கு 1929 – மார்ச் 20-ல் புனையப்படுகிறது. இந்திய தண்டனைச் சட்டம் 121 ஏ பிரிவில் கைது செய்ய இர்வின் பிரபு உத்தரவிடுகிறார். 31கம்யூனிஸ்டுகள் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டனர்.மார்க்சும், ஏங்கல்சும், ஜெர்மன் கொலோன் நீதிமன்றத்தைப் பயன்படுத்தியதைப் போன்று செயல்பட முசாபர் வலியுறுத்தினார். அவ்வாறே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் என்று முசாபர் உள்ளிட்ட 18 தோழர்கள் கையெழுத்திட்டப் பொது அறிக்கையை நீதிமன்றத்தில் நிம்ப்கர் முன் வைத்தார்.

காலனிய ஆட்சியில் மிக நீண்ட நான்கு ஆண்டுகள் விசாரணை நடைபெற்று 1933-ல் முசாபர்,டாங்கே, உஸ்மானி,ஸ்பிரேட் தவிர மற்றவர்கள் விடுதலைச் செய்யப்பட்டனர். முதல் மூவர் கான்பூர் சதி வழக்கிலும் தண்டனைப் பெற்றிருந்தனர். (மாஸ்கோ சதி (3-வது பெஷாவர் ) வழக்கில் 1922-23 முசாபர் அகமது, செளகத் உஸ்மானி – யை சேர்த்தால் வழக்கு முதலிலிருந்து நடக்கும் என பிரதம கமிஷ்னர் மாபே மறுத்ததால், அவ்வழக்கிலிருந்து தப்பினர்) சந்தீப் தீவிலும், மிதனப்பூர் மாவட்டத்திலும் தனியாகவும் அடைத்து வைக்கப்பட்டுப் பின், 1936 ஜூன் 24 விடுதலைச் செய்யப்பட்டார். 1943 வரை நாடு முழுவதும்,நேபாளம், பர்மாவிலும் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் பணிகளை மேற்கொண்டார். இந்திய சுதந்திரத்திற்குப் பின்னும் கல்கத்தா நகருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தலைமறைவாகச் செயல்பட வேண்டிய நிர்ப்பந்தம். தலைமறைவு அலுவலகத்தில் தன்னோடு பணியாற்றும் இளம் தோழர்களை மருமகன்கள் என்று குறிப்பிடுவது வழக்கம். அவர்களும் இவரைக் காக்கா (மாமா) பாபு என்று அன்புடன் அழைத்தனர். 1948 நீங்களாக, அவர் மரணவிக்கும் 1973 டிசம்பர் 18 வரை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். 1918 முதல் 1973 வரை முழுநேர ஊழியராக வாழ்ந்தார்.கணசக்தி நாளிதழைத் துவக்கி, வளர்ந்தவர், நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனர். கட்சியின் பல இதழ்களுக்கு ஆலோசகர், வழிக்காட்டி.

அகிலத்தின் தலைவர்:

1921-ல் அலகாபாத்தில் நடந்த காங்கிரஸ் 36 வது – மாநாட்டில் கம்யூனிஸ்டு கட்சியின் “முழுச்சுதந்திரம் பெறுதல்”, அறிக்கை அளிக்க எம்.என்.இராய்யின் தூதுவராக வந்த நளினிகுப்தா முசாபரை சந்திக்கிறார். அகிலத்திற்கு எழுதிய 1922 மார்ச் 22 கடிதத்தில் முசாபர் குறிப்பிடுவது “நளினி கம்யூனிசத்தின் பாதை பற்றிய விளக்கங்களைத் தெரிவித்தார், அதை எங்களது பாதையாக ஏற்றுக் கொண்டோம்,”

1922-லிருந்து கம்யூனிச அகிலத்துடன் தொடர்பில் இருந்த முசாபர் காலனிய நாடுகளில் செயல்பட்டு வரும் முக்கிய கம்யூனிஸ்டு தலைவராக அகிலத்தால் கருதப்பட்டார். இத்தகையோர்களின் விமர்சனப்பூர்வமான கருத்துக்கள் மூலமே அகிலம் தவறுகளை உணர்ந்தது, உள்ளூர் முடிவில் தலையிடக் கூடாது எனப் புரிந்து கொண்டது. அவரின் சமக்காலத்திய ஹோசுமின்,மாசேதுங், கிராம்சி, கார்லஸ் மரியே டிகி தலைவர்களிடமிருந்து உத்வேகம் பெற்று மார்க்சிய அடிப்படையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஜனநாயக கூட்டணியாக வங்கத்தில் முதல் சோசியலிச அமைப்பு உருவாக்கினார்.

புதிய அரசியல் வழியில்,யாரும் பயணப்பட்டிராதத் திசையில் நடந்தார். அவருக்குள்ளேயே அது மாற்றத்திற்கு வழியாகியது. இந்திய விடுதலைக்காக ஆயுதங்களைத் தேடி, ஆதரவுகளை நாடி வெளிநாடுகளுக்கு ஒரு பகுதியினர் சென்றனர். வெளிநாட்டிலிருந்த எம்.என்.ராய் தன்னையும், அகிலத்தையும் சந்திக்கக் கேட்டுக்கொண்டார். மற்றொருபுறம் இந்துகள், முஸ்லிம்கள் மதஅமைப்புகளின் பின்னால் திரட்டப்பட்டனர். உழைக்கும் வர்க்கத்தையும், மக்களையும் விடுதலைப் போரில் ஈடுபடுத்துவதன் மூலம், பரந்தபட்ட ஜனநாயக மேடையின் மூலமே விடுதலை சாத்தியம் என்று இந்தியாவில் மக்களைத் திரட்டும் பணியில் தன்னை அர்ப்பணித்தார்.

முழுநேர ஊழியராக வளர்தல்:

1918 இல் வங்க மொழி இலக்கியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 32 கல்லூரி தெருவில் இயங்கிய அச்சங்க அலுவலகத்திலேயே இருந்த உலகப்புகழ் பெற்ற உருதுகவி காசி நஸ்ருல் உடன் தங்கி இருவரும் “நியூ ஏஜ்”, பத்திரிகை நடத்தினர். தன்னுடைய அத்தியாவசிய செலவினங்களுக்காக மதரஸா ஆசிரியர்,மொழிப்பெயர்ப்பாளர் மாமிசக் கூட எழுத்தர் எனப் பல பணிகளைச் செய்தார். 1918-ல் கடல் வழியே “ஃப்ளுசுரம்”, கல்கத்தா நகரை தாக்கியது ஆயிரத்திற்கு 64 பேர் இறந்ததாகப் பதிவானது. தொற்றுநோய், வறுமை, சுரண்டல்களினால் கல்கத்தா நகரம் தொழிலாளர்கள் கிளர்ச்சி மையமாக மாறியது. 137 ஐரோப்பிய, இந்திய நிறுவனங்களில் வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. முசாபர் மார்க்சியப் பத்திரிகையாளராக, சிந்தனையாளராக, போராட்டங்கள் வழியே மாறி இருந்தார்.

தொழிலாளர் விடுதலைக் கட்சி :

முசாபர், செளகத்உஸ்மானி,குலாம் உசேன்,பம்பாயில் டாங்கே 1923 மே மாதம் கைது செய்யப்பட்டனர். “கான்பூர் போல்ஷ்விக் சதி” என இந்தியப் பத்திரிகைகளில் வெளியாகின. குற்றவாளிகளுக்குக் கழுத்தில் இரும்பு வளையம், காலில் இரும்பு சங்கிலி, அரைக்கால் சட்டை அணிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து உண்ணாவிரதத்தைத் துவக்கினர். சிறையில் நோய்வாய்ப்பட்ட முசாபர் ரத்த வாந்தி எடுத்து ஆபத்தான நிலையில் இருந்ததால் 1925 செப்டம்பர் 12 அன்று முசாபர் விடுதலைச் செய்யப்பட்டார். கல்கத்தா வந்தடைந்த முசாபர் 1925 நவம்பரில் வங்காளத்தில் “தொழிலாளர் விடுதலைக் கட்சி”யை ஆரம்ப காலச் சோசலிஸ்டுகளுடன் இணைந்து உருவாக்கினர்.

37 ஹாரிசன் தெருவில் செயல்பட்ட அக்கட்சி அலுவலகத்திலேயே முசாபர் தங்கி அமைப்பின் பத்திரிக்கை “லங்கால்” (ஏர்க்கலப்பை) ஆசிரியராய் செயல்பட்டு வெளியிட்டார். அவரின் முதல் கட்டுரை “இந்தியா ஏன் சுதந்திரமாகவில்லை” வெளியானது. “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ” (கட்சி தடைச் செய்யப் பட்டிருந்தது) சேர சிறப்பு வேண்டுகோள் விடுத்தார், கிலாபத் குழு அறிக்கையை, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை, சர்வதேசக் கீதத்தை மொழிப் பெயர்த்து வெளியிட்டார். ஆப்கான் நாட்டிற்குச் சென்ற இந்திய இஸ்லாமியர்கள் மீது பிரிட்டிஷ் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து எழுதினார்.

காலனி அரசால் பத்திரிக்கைத் தடைச் செய்யப்படுகிறது. 1926 இல் ஏப்ரல் 15 லங்கால்-ன் கடைசி இதழ் வெளியானது.1926 ஆகஸ்டு “இந்திய மக்களின் வெற்றி” என்ற முழக்கத்தோடு “கணவாணி”( மக்கள்குரல்) இதழாக வெளிவந்தது.

 

விவசாயிகள் தொழிலாளர் கட்சி:

“தொழிலாளர் விடுதலைக் கட்சி” 1926 பிப்ரவரியில் நாடியா கிருஷ்ணா நகரில் வங்காள மக்கள் மாநாட்டை நடத்தியது. மாநாட்டில் அமைப்பின் பெயர் வங்காள “விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி” என்று மாற்றப்பட்டது.தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று செயற்குழு உறுப்பினரில் முசாபர் இருந்தார், 1928 இல் அதன் பொதுச் செயலாளரானார். அமைப்பின் பெயர் “தொழிலாளர் விவசாயிகள் கட்சி” என்று மாற்றப்பட்டது. தொழிலாளர் விவசாயிகள் கட்சியின் 1927 இல் நடந்த பம்பாய் மாகாண அமைப்பு மாநாட்டில் முசாபர் பங்கேற்றார். அமைப்பின் இதழாக கிராந்தி வெளிவந்தது.

1928 ஏப்ரல்- பப்பாராவில் நடைபெற்ற வங்காள மாகாணத் தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சி மாநாட்டில் “செயலுக்கான அறைகூவல்” ஆவணம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஸ்பிராட்டுடன் கலந்து கொண்டு முசாபர் ஆவணத்தைத் தயாரித்திருந்தார். இதில் அரசியல் நிர்ணய சபைக்கு தேர்தல் நடத்துவது, புதிய அரசியலமைப்புச் சட்டத்தை வரைவது சைமன் கமிஷன் எதிர்ப்பது, அனைவருக்கும் வாக்குரிமை, காங்கிரஸ் மற்றும் தற்போதைய தொழிலாளர் தலைமை குறித்து நமது அணுகுமுறைகளை நிர்ணயித்தது.அன்றைய அரசியல் சூழலில் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். மேலும்,இது சுயேட்சியான இளைஞர் அமைப்பை உருவாக்கவும், அமைப்பிற்கு 6 அம்ச செயல் திட்டத்தையும் வரையறுத்தது.1928 ஜூலை வங்காளத்தில் “இளம் தோழர்கள் லீக்” உருவாக்கப்பட்டது. திட்டம், கொள்கை அறிக்கை” ஆகஸ்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டன பம்பாயில் இளைஞர் லீக், பஞ்சாபில் நவஜவான் பாரத் சபாவின் இளைஞர்களைத் தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சித் திரட்டியது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி:

1925 டிசம்பர் கான்பூரில் முதன் முறையாகக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு சிங்காரவேலர் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மத்தியக்குழு அமைக்கப்பட்டது. எஸ் வி காட்டே கட்சியின் பொதுச் செயலாளராக, கல்கத்தா பிரிவுக்குப் பொறுப்பாளராக முசாபர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநாட்டில் கட்சியின் பெயர் “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி” என இறுதிச் செய்யப்படுகிறது. அமைப்புச் சட்டத்தை உருவாக்குவது, இந்திய அளவில் தொழிலாளர், விவசாய கட்சியை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. 1927 மே பம்பாயில் கட்சி மாநாடு நடத்தி முசாபர் உள்ளடக்கிய ஐந்து தோழர்கள் கொண்டத் தலைமைக் குழுத் தேர்ந்தெடுக்கப்பட்டது. கம்யூனிச அகிலத்தின் திட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும், அமைப்புகளில் உபக்குழுக்களை (Fraction) உருவாக்குவது, வகுப்புவாத அமைப்புகளில் கட்சி உறுப்பினர்கள் இருக்கக் கூடாது என்கிற விதிகள் நடைமுறைக்கு வந்தன.

கல்கத்தாவில் 1926இல் மதக் கலவரத்தால் 138 நபர்கள் படுகொலைச் செய்யப்பட்டனர். “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முஸ்லிம் சிக்கலைப் பற்றிய அறிக்கை”-யை முசாபர் வெளியிட்டார்.கொள்கை அளவில் வெளிவந்த முதல் முயற்சியாக இருந்தது. அது வேதக் காலத்திற்குத் திரும்புவது, கிலாபத் சூழலுக்கு மாறுவது, இப்போது நம்முள் உள்ள வழியல்ல,சமூகப் பொருளாதார விடுதலைக்குப் போராடும் படி தொழிலாளி வர்க்கத்தை வலியுறுத்தியது.

அகில இந்திய மாநாடு:

1927 டிசம்பர், சிங்காரவேலர் இல்லத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு ரகசியமாகக் கூடியது. அதில் தொழிலாளர்கள்,விவசாயிகள் கட்சியின் அகில இந்திய மாநாட்டை நடத்துவது,பொறுப்பாக முசாபர் அகமது செயல்படுவது என முடிவு செய்யப்பட்டன. மத்தியக் குழுவிலும், அப்போது சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநாட்டிலும் பங்கேற்றுத் திரும்பிய முசாபர், தொழிலாளர்கள்,விவசாயிகள் கட்சியின் அகில இந்திய மாநாட்டுப் பணிகளைத் துவக்கினார். 1928 டிசம்பர் 21-24, கல்கத்தாவில் இம்மாநாடு நடைபெற்றது. பம்பாய், பஞ்சாப், ஐக்கிய மாகாணம், வங்காளப் பிரதிநிதிகளும், ரகசியமாக பகத்சிங்கும் மாநாட்டில் பங்கேற்றனர்.

கட்சி “அமைப்புச் சட்ட வரைவு” -க்கு, “விவசாயிகள் அமைப்பு” உருவாக்குவதற்கு “ஒரு தெளிவானசுதந்திரமான பாதை பின்பற்ற, “மாநாடு ஒப்புதல் அளித்தது. கட்சி உறுப்பினர்கள் வகுப்புவாத அமைப்பிலோ, பிரச்சாரத்திலோ ஈடுபடுவதைத் தடை செய்தது அமைப்புச் சட்டம்.1929 பிப்ரவரியில் நாடியாவின் குஷ்தியில் விவசாயிகள் மாநாடு நடத்தப்பட்டு, “வங்காள விவசாய சங்கம்” அமைக்கப்படுகிறது. மீரட் வழக்கு விசாரணையில் இவ்வாறு விவசாயிகளைத் திரட்டியது, தேசவிரோத நடவடிக்கையாகப் பதிவுச் செய்யப்பட்டது.

1929 ஜனவரி- கலந்தாவில் கம்யூனிஸ்டுகளின் ரகசியக் கூட்டத்தை முசாபர் ஏற்பாடு செய்தார். அதில் 1928 டிசம்பரில் கிடைத்த கம்யூனிச அகிலத்தின் ஆறாவது மாநாட்டு முடிவுகளான “விவசாயிகளை அடித்தளமாகக் கொண்டு வலிமையான கம்யூனிஸ்ட் கட்சிக் கட்ட வேண்டும், தேசிய முதலாளித்துவ அமைப்பில் இருந்து தனித்த நிலைப்பாட்டுடன் இயங்க வேண்டும், பம்பாய், வங்காள மாகாணங்களில் கட்சி அமைப்பு வடிவத்துடன், அரசியல் தன்மையுடன் செயல்படுகின்றன”, என்றதின் மீது விவாதிக்கப்பட்டன. தொழிலாளர்கள், விவசாயிகள் கட்சி முசாபரின் நடைமுறை அனுபவத்தின் மூலம் அகிலத்திற்கு முன்பே இம்முடிவிற்கு வந்தடைந்திருந்தன. இந்தியாவில் காங்கிரஸிலிருந்து பிரிந்து தனித்து இயங்க வேண்டும், குறிப்பிட்டப் பிரச்சினைகளில் காங்கிரஸ், மற்ற அமைப்புகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றதோடு, இந்தியாவில் இரண்டு ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்கள் உள்ளன. ஒன்று, குடியேற்ற அங்கீகாரம் கோரிய முதலாளிகள் தலைமையிலான தேசியவாதிகள் இயக்கம், மற்றது முழு விடுதலைக் கோரியக் கம்யூனிஸ்டுகள் தலைமையிலான வர்க்கப் போராட்டம் என முசாபர் வரையறுத்தார். அதன்படியாகக் கட்சி சீரமைக்கப்பட்டது. முசாபரின் பரிந்துரையால் பிசி ஜோசி, சோகன் சிங்ஜோசு கட்சி உறுப்பினராயினர். எம் என்ராயின் கடிதத்துடன் ஜெர்மனியிலிருந்து திரும்பிய டாக்டர் கங்காதர் (ஜி) அதிகாரி முசாபருக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, கட்சி உறுப்பினராகச் சேர்க்கப்படுகிறார். அதிகாரி முயற்சியால் பிடி ரணதிவே கட்சி உறுப்பினரானார்.

முழு விடுதலையும், காந்தியும்:

காங்கிரஸ் கட்சியின் ஆண்டு மாநாடு கல்கத்தாவில் 1928 டிசம்பரில் நடைபெறுகிறது.கம்யூனிஸ்டுகள் முசாபர், ஷாலிம், சக்கரவர்த்தி கோஸ்வாமி, ஸ்பிராட், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் செங்கொடியுடன் ஊர்வலமாக மாநாட்டில் நுழைந்து, முழு விடுதலைத் தீர்மானத்தை ஏற்க முழக்கமிட்டு முற்றுகையிடுகின்றனர். இத்தொழிலாளர்கள் சார்பாக பக்கிம் முகர்ஜி மாநாட்டில் உரையாற்றுகிறார். கோரிக்கைகளைப் பரிசிலீக்கிறோம் எனச் சுருக்கமாக உரையை முடித்துக் கொண்டு காந்தி மாநாட்டில் இருந்து வெளியேறினார். காங்கிரஸ் ஓராண்டு கழித்து இக்கோரிக்கை ஏற்றது.

1929 பிப்ரவரி 3, தொழிலாளர்கள், விவசாயிகள் கட்சி சைமன் குழுவிற்கு எதிராகக் கல்கத்தா நகரம் அதுவரை சந்தித்திராதப் பெரும் ஊர்வலம் நடத்தியது. இந்தியாவில் முதல் முறையாக “இன்குலாப்ஜிந்தாபாத்”( புரட்சி வாழ்க) என ஊர்வலம் முழங்கின. இன்று எங்கெங்கும் எதிரொலிக்கின்றன. மாதுங்காவிலிருந்து, போரஸ் ரோடு வரையில் நீண்டபாதை நெடுங்கிலும் தொழிலாளர்களின் பேரணிக்கு தலைமை ஏற்று நடந்தே சென்றோம். தொழிலாளர்கள் விவசாயகள் கட்சி முதல் முறையாக அறிவாள், சுத்தியல் தாங்கிய செங்கோடிகளுடன், செம்பதாகைகளுடன் வீதிகளில் அணிவகுத்தது. பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது முதன்முறையாக ஒலிபெருக்கி பயன்படுத்தப்பட்டது.

தொழிற்சங்கப் பணிகள் :

1927 கான்பூரில் நடந்த அகில இந்திய தொழிற்சங்க மாநாட்டில் துணைத் தலைவராக முசாபர் தேர்ந்தெடுக்கப்பட்டார். நவம்பர் மாதம் கழிவு நீர்ச்சுத்தம் செய்யும் (மாதேதாரர்களை), குப்பைகளை அகற்றும் (சாருதார்களை) தொழிலாளர்கள் அவர்களின் குடியிருப்பில் சந்தித்து, ஒன்று திரட்டி, கூட்டங்கள் நடத்தி சங்கத்தை அமைத்தனர். “பொதுச் சுகாதாரத் தொழிலாளர் சங்கம்” அமைக்கப்பட்டது. தரணி கோஸ்வாமி செயலாளராக, முசாபர் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தன்னிச்சையாக வேலை நிறுத்தம் 1928 ஏப்ரலில் துவங்கியது. வேலை நிறுத்த நிர்ப்பந்தத்தால் கல்கத்தா மேயருடனான பேச்சுவார்த்தையில் கூலிஉயர்வுக்கு ஒப்புக்கொள்ளப்பட்டது, வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது. நகரமன்ற உறுப்பினர்கள் கூலிஉயர்வுக்கு எதிராக வாக்களித்து தொழிலாளர்களை ஏமாற்றினர். இரண்டாம் கட்ட வேலை நிறுத்தம் 1928 ஜூனில் பெரும் வெடிப்போடு துவங்கியது, மறுநாள் முசாபர், பிரபாவதி கைது செய்யப்பட்டனர். ஜாமினில் வெளியே வந்து தொடர்ந்து போராட்டத்தை நடத்தினர்.கம்யூனிஸ்ட் கட்சி முழுவதும் திரண்டு ஆதரவாக செயல்பட்டது. “ராணுவம், போலீசு குவித்து தாக்குதலை நடத்தினர்,பொய் வழக்குகள் புனைந்தனர், 200க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் கைது, முசாபர், பிரபாவதி கைது, அடக்குமுறைகள் தொடர்ந்தன” – என டாங்கேவிற்கு, ஷாலின் கடிதம் எழுதினார். தொடர்ந்தது வேலை நிறுத்தம் வெற்றி பெற்றது.

அதைத் தொடர்ந்து ஹவுராவில் 3000 துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கினர்.தொழிலாளர் குடியிருப்பிற்குள் காவல்துறை நுழைந்து தாக்குதல் நடத்தினர். பெண்கள் வீறுக்கொண்டு எதிர்த்தனர், குப்பைகளை அள்ளி போலீஸ் மீது கொட்டித்தடுத்தனர். வேலை நிறுத்தத்தைத் துவங்கியக் காங்கிரஸ் தலைவர்களை அக்கட்சியின் ஹவுரா நகரச் செயலாளர் கட்சிநீக்கம் செய்யப்படுவீர்கள், வேலை நிறுத்தத்தை நிறுத்துங்கள் என மிரட்டப்பட்டனர்,அவர்களும் ஒதுங்கினர்.முசாபரும், பிரபாவதியும் வேலை நிறுத்தத்தை நடத்தி, பேச்சு வார்த்தையில் கூலி உயர்வுடன் முடித்தனர்.

தொழிலாளர்கள், விவசாயிகள் கட்சி 1927- 28 ஆண்டுகளில் கல்கத்தா துறைமுகம் சுமை தூக்கும் தொழிலாளர்கள், சணல் ஆலை தொழிலாளர்கள், ரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்கள் நடத்தின.வேலை நிறுத்துங்கள் கல்கத்தா நகரை உலுக்கி எடுத்தன,துப்பாக்கி சூடும், உயிரிழப்புகளும் பல ஏற்பட்டன. அன்றையத் தினத்தில் சணல் ஆலை சங்கத்தில் 5250 உறுப்பினர்கள் இருந்தனர். சங்கம் இரவு நேர பள்ளிகள், மனமகிழ் மன்றங்கள் சொந்தமாக ஒரு பள்ளிக்கூடத்தையும் நடத்தின.

முசாபர் தலைமையிலான முதல் சோசியலிஸ்ட் மையம் இம்மாதிரியான கட்சி அமைப்பு பணிகளில், இயக்கப் பணிகளில் ஈடுபட்டது. கம்யூனிஸ்ட் அடித்தளம் அமைக்கப்பட்டது, அவர்களது நடவடிக்கையின் முக்கிய களமாகத் தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சி இருந்தது. “விவசாயிகள் நலனைப் பாதுகாத்தது, ஜமீன்தாரி முறை ஒழிப்பதற்கு, முழு விடுதலைக்கு ஆதரவாக இருந்தது” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ன் அகில இந்திய பொதுச்செயலாளர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித் விளக்குவது முசாபருக்கு சூட்டப்படும் மணிமகுடமாகும்.

முசாபர் எழுத்துக்கள்:

1922 ல் தேசியவாதத்திற்கும், வகுப்புவாதத்திற்கும் மாற்றாக சோசலிச மாற்றை முன்னெடுத்தார். அது அன்றைக்குப் புதியத் தடமாக இருந்தது, அமைப்புகள், விதிகள் இல்லை, முசாபர் அவற்றெல்லாம் முனைந்தார்.இந்தியாவில் ஏகாதிபத்திய எதிர்ப்பை தேசியவாதிகள், இடதுசாரிகள் – தொழிலாளர்கள் தலைமையிலானது எனப் பிரித்தார்.

பிரிட்டிஷ், ஏகாதிபத்திய முதலாளிகள், இந்திய முதலாளிகள், நிலப்பிரபுக்கள், கொள்ளையர்கள், மதவாதிகள், பாதிரிகள், முல்லாக்கள் வர்க்க ஒற்றுமையைச் சீர்க்குலைக்கும் சக்திகள், விவசாயிகள் தொழிலாளர்கள் விடுதலையைத் தடுக்கும் சக்திகள் வர்க்க எதிர்ச் சக்திகளாக அடையாளப்படுத்தினார். முதலாளித்துவத்தையும், நிலப்பிரபுத்துவத்தையும், எதிர்க்காமல் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்போம் எனத் தேசியவாதிகள் சொல்வது வெறும் வேஷம். நிலப்பிரபுவத்துவத்தை ஆதரிப்பது, ஏகாதிபத்தியத்தை ஆதரிப்பதாகும், ஒன்றிற்கொன்று தொடர்புடையவை.

லெனினிய வழியில் ஏகாதிபத்தியம் பேரரசுகளைக் கடந்து செயல்படுவதை விளக்கினார். இங்கிலாந்து அரசர் பெயருக்குத்தான், ஏகாதிபத்தியம் செயல்படுவதில் அவருக்குப் பங்கு இல்லை. எனவே, அரசுக்கு எதிராகச் சதி, ராஜதுரோகக் குற்றம் சாட்டுவது நகைப்பிற்குரியது என்று பிரிட்டிஷ் அரசைச் சாடினார். உடைமை வர்க்கத்தின் இரு பக்கமும் கூர்மையான கத்தி வகுப்புவாதம் அது தனது பேரம்பேசும் திறனை அதிகரித்துக் கொள்கின்றன, மக்களை வகுப்புவாதச் செயலுக்குத் திரட்டுகின்றன. மதம், மனித இனத்தைச் கொலைச் செய்யும் வேலையை நியாயப்படுத்துகிறது, மதச்சின்னங்கள், கருவிகள், மதஅடையாளங்கள் கலவரங்களில் மதரீதியில் மக்களைத் திரட்டும் கருவிகள் என்று விமர்சித்தார்.

முதல் (1920) கம்யூனிஸ்டுக் கட்சிக் கிளையில் முஸ்லீம்கள் பங்குபற்றி எழுதிய ஒரே இடதுசாரி எழுத்தாளர். இஸ்லாமிய மதத்தில் செய்ய வேண்டிய வைகளையும், இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளையும் பற்றி எழுதினார்.

” என் காலத்தின் கதை”, -யை 1963இல் சிறையிலேயே முசாபர் பிறந்த நாளன்று வெளியிட்டார். அவரின் “காசு நஸ்ருள் இஸ்லாம் நினைவு” – நூல் 1965ல் வெளியானது. இது மிகச்சிறந்த இலக்கியப் படைப்பாகக் கருதப்படுகிறது.

முசாபர் பற்றி:

இடைவிடா வறுமை, நெருக்கடியான வாழ்விடம், பண நெருக்கடி, நோய்பட்ட நிலை, அடிக்கடி வீடுதேடும் படலம், தொடரும் போலீஸ் சோதனைகள், கைதுகள், சிறைவாசம் ஒவ்வொரு நாளும் தொடர்ந்தன, இவற்றுக்கிடையே ஓய்வில்லாது பணிகள் அமைந்தன.

1923 பிப்ரவரி இடையில் “கண்காணிக்க அனுப்பப்பட்ட உளவாளிகள் இடையே என் வாழ்நாள் கழிந்தது, கண்காணிப்பில் இருந்து ஒருநாள் தப்பிக்க நடையின் வேகத்தை அதிகரித்தேன், கல்கத்தாவின் சந்து, பொந்துகள், இஸ்லாமிய சேரிகளின் குறுகியச் சந்து வழியே கல்லூரிச் சதுக்கத்தின் பூங்காவை அடைந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன். சதுக்கம் மூடப்படும் நேரம் திடீரென வெறிநாய் ஓடிவந்து போலீஸ் ஏஜெண்டைக் கடிக்க முயன்றது, பின் என் மேல் பாய்ந்து கடித்தது. அது, மேலும் சிலரைக் கடித்துக் குதறியது. இவை அனைத்தும் சில நொடியில் நடந்து முடிந்து விட்டன” சில்லாங்கில் கடிக்கான வைத்தியம் செய்துகொண்டதும் கான்பூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்டார்.

சந்த்வீப் தீவில் வங்க மொழி தொடக்கப்பள்ளி கட்டணம் கட்ட முடியாது பள்ளி இடையில் நிற்க வேண்டியக் குடும்பச் சூழல், தந்தை வழக்குரைஞர் “மன்சூர் அலி” வங்க மொழி எழுத்துக்களைக் கற்பித்தார். மதப்பள்ளியில் அரபும், பாரசீகமும் கற்றார். 1905 இல் தந்தை இறப்புக்குப் பின் கல்விக் கற்க வீட்டைவிட்டு வெளியேறி பாகர்கஞ்ச் மாவட்டத்தில் இஸ்லாமிய விவசாயி வீட்டில் தங்கி வங்க மொழிக் கற்பித்தார். அவரின் இருப்பிடம் அறிந்து பின் சந்த்வீப் தீவிற்கு அழைத்து வரப்பட்டு பள்ளியில் சேர்க்கப்பட்டார். 1910ல் நவகாளியில் உயர்கல்விக் கற்கும் போது ‘பராபாசி இதழில் ‘ கட்டுரைகள் எழுதத் துவங்கிவிடுகிறார். கல்கத்தா வங்க பாஹி கல்லூரியில் பயின்ற 27 இஸ்லாமில் மாணவர்களில் ஒருவராக முசாபர் இருந்தார்.

அவருடைய மகள், வயதான முசாபரை தன்னுடனே இருக்க வலியுறுத்தினார். அதை மறுத்துக் கல்கத்தாவில் தோழர்களுடன் இருந்து விட்டார். வங்கதேசம் 1972ல் உருவானபோது தனது உறவுகளை, நண்பர்களை சென்று கடைசி முறையாகச் சந்தித்தார். அனைத்து உறவுகளும் இயக்க அடிப்படையில் இருந்தன, அரசியல் பணிகளே முதன்மையானதாகி விட்டன. 1889 ஆகஸ்ட் 5-ல் சந்த்வீப் தீவில் (நவகாளி மாவட்டம்) வங்காளத்தில் பிறந்தார் மாமனிதர்.

இரா.பாரி

திருவண்ணாமலை

ஆதாரங்கள்:

1. தொடக்கக் கால கம்யூனிஸ்ட் முசாபர் அகமத்

சுயசேதனா சட்டோபாத்யாய், தமிழில்: ஆதிவராகன்,

2. இந்திய கம்யூனிச இயக்கம் ஒரு நூற்றாண்டுப் பயணம்

தமிழில்: வி பா கணேசன்,

3. இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் பெருமைமிகு நூற்றாண்டு

என் ராமகிருஷ்ணன்.

4. இந்திய கம்யூனிஸ்டு இயக்க வரலாறு 1920 -1933 வரை

சிபிஎம் மத்தியக் குழு வெளியீடு.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *