கவிதை உலா 2 – நா.வே.அருள்

கவிதை உலா 2 – நா.வே.அருள்

 

கவிஞர்கள் தங்கள் கவிதைகளால் உலகை அலங்கரிக்கிறார்கள்.  தங்கள் கவிதைகளால் கன்னத்தில் கண்ணீர்க் கோடுகள் வரைகிறார்கள்.  பூசற்களரியில் ஆயுதங்களால் மோதுகிறார்கள்.  வயல்வெளிகளில் புள்ளம் கொண்டு புற்கள் அறுக்கிறார்கள்.  காதலிக்குப் பூக்கள் கொடுக்கிறார்கள்.

அவர்கள் தங்களுக்காகக் கவிதைகளை மட்டும் எழுதிக் கொள்கிறார்கள்.

அவையும் அவர்களுக்குச் சொந்தமில்லை.

முகமது பாட்சா (Mohamed Batcha) என்கிற கவிஞன் தொடர்ந்து பல உருது வார்த்தைகளால் கவிதை ஆலத்தை (கவிதை உலகத்தை) அழகு படுத்தி வருகிறான்.  அவன் இன்றைக்கு வானத்திற்கு அடித்த வானவில் சுண்ணம் இதோ….

“என் இதயம்

அழுது கொண்டேயிருக்கிறது

இந்த ஆலம் எத்தனை

ஆபரணங்களால் பூட்டப்பட்டிருக்கிறது!”

அவனது அழுது கொண்டிருக்கும் இதயத்தை ஆபரணங்களால் பூட்டப்பட்ட உலகம் பகடி செய்கிறதாம்….

காதலுக்கு பூச்சி கூட ஒரு உன்னத பொருளாகிவிடுகிறது.  காதலியின் மூச்சு வழியே கங்கு பூச்சி பறக்கிறதாம்…. என்ன கற்பனை!  அடடா… கழுத்தோ சங்குப் பூச்சி… மூச்சில் கங்குப் பூச்சி….

“மெல்லிய கங்கு பூச்சியை

மூச்சு வழி

பறக்க விடுகிறாய்…

கங்குப் பூச்சியின்

மகரந்தச் சேர்க்கைக்கு

எந்த கவிதை

பொருத்தமாயிருக்கும்….”

–பொள்ளாச்சி முருகானந்தம்

அடுத்து, Sujatha Kannan கவிதை… பெய்து முடித்த நிலத்தைக் கற்பனை செய்து கொள்ள வேண்டும்.  அதாவது எங்கும் நீர் நிறைந்திருக்கும்.  அதன் மேல் நின்று தூறும் மழைக்கு ஓவியம் ஆகத் தொடங்குகிறதாம் நிலம்!  தூறத் தூற நீர் வளையங்களைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.  அத்தனையும் ஓவியங்களாம்….

“சில்லறைச் சலனமென

பெய்து முடித்தபின்னே

நின்று தூறும் மழைக்கே

ஓவியம் ஆகத் தொடங்குகிறது

நிலம் நெகிழ்வாய்”

–சுஜாதா கண்ணன்

Raj kumaran க.ராஜகுமாரன் ஒரு ஓவியத்தைத் தீட்டுகிறார்…

உதிர்ந்த இலை

நகருகிறது

தன் நிழலோடு

அன்பையும் வெறுப்பையும் இரண்டு தனித்தனி ஓவியங்களாக்குகிறார் ரிஸ்கா முக்தார் Riska Mukthar /  அன்பை வழித்துணையாகக் கொண்டவர்களுக்குப் பாதை கிடைத்துவிடுகிறது.  வெறுப்பில் ஓடிக் கொண்டிருப்பவர்களுக்கு  பாதை கிடைப்பதில்லை. வெறும் நிழல்தான்!  அன்பானவர்கள் இளைப்பாறுகிறார்கள்.  வெறுப்பானவர்கள் தொலைந்து போகிறார்கள். கவிதை என்னும் ஓவியக் கித்தானில் ஒருபுறம் அன்பு, மறுபுறம் வெறுப்பு. இரண்டு ஓவியங்களை எவ்வளவு அழகாகத் தீட்டிவிடுகிறார் ரிஸ்கா!

“அன்பின் பாதையில் நடந்துக்கொண்டிருப்பவர்கள்

அடிக்கடி நின்று

எங்கேனும்

இளைப்பாறிக்கொள்கிறார்கள்..

 

வெறுப்பின் நிழல்களில்

நடந்துக்கொண்டிருப்பவர்கள்

எவரும்

நிற்பதே இல்லை..

அவர்கள்

அவ்வளவு அவசரமாக சென்றுக்கொண்டிருக்கிறார்கள்

அவ்வளவு வேகமாக தொலைந்துகொண்டிருக்கிறார்கள்!!!

Image
நா.வே.அருள்

தொடர் 1 :  கவி உலா – நா.வே.அருள்

Show 1 Comment

1 Comment

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *