கவிதை உலா 4 – நா.வே.அருள்



கலையின் மேன்மைதான் கவிதையின் சாரம்.  கலை ஒரு மனிதனைப் பித்து நிலைக்குத் தள்ளிவிடுகிறது. பாரதி ஒரு பித்தன் அல்லவா? அவனால்தான் காக்கைக் குருவி எங்கள் ஜாதி, கடலும் நீள்மலையும் எங்கள் கூட்டம் என்று கவிதை மார்தட்ட முடியும்.  ஓவியர் வான்கோ தன்னிலை மறந்த (நோயுற்றிருந்த காலத்தில்) நிலையில் காதறுத்துக் கொள்கிறான்.  அதை ஒரு கவிஞன் ஜெயந்த் பார்மர் காதறுத்த கதையைக் தன் கவிதையின் மூலம் கலையாக்கிவிடுகிறார்.

Indran Rajendran. Amudha Bharathi. Sakunthala Srinivasan. கோ.பாரதிமோகன், கவிசெல்வா



வான்கோ / ஜெயந்த் பார்மர்

ஒருநாள் மாலையில் நிலாவுக்காக

கூர்மையான சவரக்கத்தியால்

தன் வலது காதை அறுத்துக் கொண்டு

சுயநினைவின்றி கட்டிலில் படுத்துக் கொண்டார்.

காலையில் வந்த சூரியனின் வெளிச்சக் கிரணம்

கதவுக்கு வெளியே

குளமாகக் குருதி தேங்கியிருப்பதைப் பார்த்தது.

இதய வடிவத்தில் ஒரு இலை

குருதியில் தோய்ந்தபடி

இன்னமும் பற்றி எரிந்து கொண்டிருந்தது. –

தமிழில் :இந்திரன்

 

வானத்தின் பித்துநிலையை ஹைகூ கவிதை மூலம் படம் பிடிக்கிறார் ஓவியக் கவிஞர் அமுதபாரதி.

தான் பொழிந்த நீரில்

தானே படுத்திருக்கிறது

வானம்

  • ~•~•~•~•~•~●~•

அமுதபாரதி

மனிதர்களின் முகமூடி அலாதியானது. அதிசயமானது.  மனம் ஆட்டிப்படைக்கிற மனித அசைவுகளைப் படம்பிடிக்கிறது இந்தக் கவிதை.

ஒரு சொல்லின் கூர்மையை மழுங்கடிக்க இன்னொரு சொல்லை உருவாக்குகிற கவிஞனின் நாடகம்தான் இந்தக் கவிதை. சிருஷ்டிக்குள் புதைந்திருக்கும் மர்மங்களைக் கோடிட்டுக் காட்ட எத்தனிக்கும் கவிதை.



நான் அழுகையில் அது சிரிக்கும்

நான் சிரிக்கையில் அது அழும்

எனக்கே எனக்காய் பிரத்யேகமாக

ஒரு முகமூடியை தயாரித்து

வைத்திருக்கிறேன்..

என் முகவெளிக்குள் ஒருதுளி

நட்சத்திரங்களின் கனம் விம்மியழ

அயர்ச்சிக்கொள்கிற மனதினை

திறந்து பறப்பதற்கு உத்தேசிக்கிறேன்..

ஒரு சொல்லிற்குள் புதைந்திருக்கும்

நாடகத்தன்மையின் கூர்வாளை

மழுக்கிக்கொள்ள இன்னொரு சொல்லை உருவாக்கிக்கொள்கிறேன்..

எனதுயிரை நீட்டி வாழ்விப்பதற்கு

ஒரு மேடை அரங்கேற்றம் புரிகையில்

நீங்கள் வரிசைகளாக நொடிக்கு நொடிக்கு மாற்றுகிற முகங்களை

செய்வதற்கு பிரம்மனிடம்

என்ன லாவண்யம் தந்தீர்கள்…

சகுந்தலா ஸ்ரீனிவாசன்

Sakunthala Srinivasan

துளித் துளியாய் சிந்திப் பெருகுகிற கண்ணீர் நதியை உருவகிக்கிறார் கவிஞன். கண்ணீரின் கரிப்பே வரம் என்கிற கஸல் கவிதை. இந்தக் கண்ணீர் நதிக்குக் காதலியின் பெயர் சூட்டப்படக் கூடாதே என்கிற கவலையில் இருக்கிறான் கவிஞன்.

கஸல்

துளித் துளியாய் சிந்திப்

பெருகினால் என்ன..

யார் குளிக்கப்போகிறார்கள்

இந்தக் கண்ணீர் நதியில்?

கைவிடப்பட்டதன் காரணமாய்

வாய்க்கப்பெற்றது

இந்தக் கரிப்பு வரம்

என் கவிதை ரசிகர்களே..!

என்மேலுள்ள அனுதாபத்தில்

இந்த நதிக்கு

பாவம்

அவளின் பெயரை

வைத்துவிடாதீர்கள்

கோ. பாரதிமோகன்



என் பெயர் வைத்து நீ வளர்த்த ரோஜாவில் செத்துக் கொண்டே இருக்கிறது அதன் நிறம்….அடடா…. வீதியில் விழுந்த காதலனின் நிழலை ஒரு நினைவுக் குப்பை என்று சொல்கிறார் கவிஞர்…. அட … அட…. அடடா….

பிரியத்தைக் கூட

பிரிவு மட்டுமே

ஊர்ஜிதப் படுத்துகிறது

என் பெயர் வைத்து

நீ வளர்த்த ரோஜாவில்

செத்து கொண்டே இருக்கிறது

அதன் நிறம்

மறந்து விட்ட உன்னை

மறுபடியும் நினைவு படுத்துகிறது

என் நினைவு குப்பையில்

ஏதோ ஒரு குப்பை

வீதியில் விழுந்தது

உன் நிழலென்று தெரியாமல்

மிருகத்தனமாய் மிதித்து விட்டேன் மன்னித்துவிடு

நான் மறந்து விடுகிறேன்.

   –கவி செல்வராணி திருச்சி.

    கவிசெல்வா



தொடர் 1 :  கவி உலா – நா.வே.அருள்

தொடர் 2 : கவிதை உலா 2 – நா.வே.அருள்

தொடர் 3 : கவிதை உலா 3 – நா.வே.அருள்