சிலுவை ஆணிகள்
**************************
கவிஞன் நம் முகத்திலறைவதற்காக சில வரிகளை எப்போதும் கைவசம் வைத்திருக்கிறான். நாம் திரு திருவெனத் திருட்டு முழி முழிக்கையில் நம் மீது குற்றப் பத்திரிகையைச் சாற்றுகிறான். கையும் களவுமாகப் பிடிபட்ட திருடனைப் போல குற்றவுணர்ச்சியில் கூனிக் குறுகிப் போகிறோம். சில நேரங்களில் பதில் சொல்ல முடியாமல் நிலைக் குத்திப் பார்த்தபடி நின்றுவிடுகிறோம். அந்தக் கேள்வியின் அடியில் இருக்கிற நியாயம் ஒரு விதையைப் போல நம் இதயத்திற்குள் வேர் விட ஆரம்பிக்கிறது. இதோ கவிஞன் சந்துருவின் சாட்டையடி ஒன்று….
பழகிய பக்கத்து வீட்டுக்காரனின்
மரணம்…
அடுத்தவாரம்
வீட்டில் விசேஷமிருப்பதால்
சாவுக்குப்போவது தீட்டென கதவடைத்துக்கொண்டவன்
உணவுத்தட்டில்
உட்கார்ந்து கொண்டிருக்கிறது
சற்றுமுன்
பிணத்தின் முகத்திலமர்ந்திருந்த
ஈ…
— சந்துரு
மரத்துப் போன வாழ்க்கையில் நம்மை மண்ணை நோக்கிப் பார்க்க வைக்கிற கவிதையொன்று. “மண்ணிலிருந்தாலும் விண்ணையே பார்த்துக் கொண்டிருக்கும் மரபு மலர்கள் அல்ல நாங்கள். விண்ணிலிருந்தாலும் மண்ணையே பார்த்துக் கொண்டிருக்கும் சூரிய சந்திர நட்சத்திரங்கள் நாங்கள்… புதுக் கவிதைகள்!” என்று புதுக் கவிதைக்காக திருத்தி எழுதிய தீர்ப்புகளில் வக்காலத்து வாங்குவார் கவிஞர் வைரமுத்து. இங்கே அப்பட்டமான வாழ்க்கையின் தரிசனம் கவிதையாகிறது. நாம் மறந்துபோனவற்றைச் சகுந்தலா சீனிவாசன் ஞாபகப் படுத்துகிறார். நமக்கு ஒரு நாளின் சம்பவம் என்பது தினக் காலண்டரின் தேதித்தாள் போலத்தான். வெகு அசட்டையாக அடுத்தநாள் காலையில் கிழித்தெறிவோம். அப்படியா விவசாயியின் வாழ்க்கை?…. பொட்டில் அறைகிறார் கவிஞர்.
நீங்கள் இயேசுவை சிலுவையில் அறையுங்கள்
புத்தனை நிர்வாணப் படுத்துங்கள்
சிவனுக்காக காடுகளை அழியுங்கள்
முருகனுக்காக வாயில் அலகை
குத்திக் கொள்ளுங்கள்
முட்டிப் போட்டு மூன்று வேளையும்
தொழுகை செய்யுங்கள்
அங்கப் பிரதட்சிணை செய்யுங்கள்
அன்னதானம் செய்யுங்கள்
ஏன் கடவுளே இல்லை என்றுக்கூட கூறிவிடுங்கள்
ஆனால் ஒருபோதும் விவசாயிகளை
பிச்சை எடுக்க வைக்காதீர்கள்..
ஏனென்றால் அவர்கள் கடவுளை விட மனிதர்களை நம்பி தான் வாழ்கிறார்கள்…
— சகுந்தலா சீனிவாசன்
சக மனிதனின் காயங்களில் சம்பந்தமே இல்லாதது மாதிரி எப்படி நம்மால் போக முடிகிறது? எதனால் இப்படி என்று வியக்கிறான் கவிஞன். அவனது கவிதையின் வரிகள் ஒவ்வொன்றும் சிலுவையில் நம்மை வைத்து ஆணியைப்போல அறைகிறது. கண்ணுற்ற காட்சிகளால் துடிக்காத மனம் கவிஞனின் சிலுவை ஆணிகளால் சில்லிட்டுப் போகிறது.
நாம் எல்லோரும்
ஆதாமின் வழி களிமண் வார்ப்பு வாரிசுகள்…
ஒன்றிலிருந்து
ஒன்றாகவே படைக்கப் பட்டோம்!
அங்கத்தினொன்றில்
வலியென்றால்
அங்கத்தின் அனைத்துமல்லவா துடிக்கிறது!
ஒரு மனிதனுக்கு வலியென்றால்
நீயேன் துடிப்பதில்லை?
நீ உண்மையில் ஆதாமின் மகனா?
–
சூஃபி ஞானி சாதி ஸிராஸி
தமிழில் : முகமது பாட்சா*
மரம் செடி கொடிகளை விட மனிதன் எவ்வளவு ஈனத்தனமானவன் என்பதைப் பறைசாற்றுகிறது இந்தக் கவிதை. வேர்களுக்கு எல்லைகள் தெரிவதில்லை. அடுத்த வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து விடுகின்றன. கிளையோடும், வேரோடும் நின்றுவிடவில்லை கவியின் பார்வை. அது தனது மூதாதையரின் சின்னப் புத்தியை நினைவுபடுத்திவிடுகிறது. எல்லை மீறி வேர்விடுவது அத்துமீறல்தான். எல்லை மீறி நிழல் பரப்புவது?… நிழல் நன்றாகத்தான் இருக்கும். சருகுகள் குப்பைகளாகிறபோது சலசலப்பு ஏற்படத்தானே செய்யும்?
ஈவு இரக்கமின்றி
மூங்கில்களை
எத்தனை முறை
வெட்டிப் போட்டாலும்
துளிர்த்துக்கொண்டே இருக்கிறது.
மதில் தாண்டிச் சென்று
அடுத்த வீட்டினருக்கும்
எங்களுக்கும்
சண்டை மூட்டி விடுகிறது.
அக்கம் பக்கத்து மண்ணில்
வேரூன்றி இருந்தாலும்
கிளை முடக்கி வைத்துக்கொள்ளத்
தெரிவதில்லை.
என்றோ நட்டு விட்டுப் போன
கொள்ளுப் பாட்டியின் புத்தி
அப்படியே இருக்கிறது
எல்லை தெரியாமல் நிழல் பரப்பும்
என் வீட்டு முருங்கை மரத்திற்கு.
–தி.கலையரசி.
தொடர் 1 : கவி உலா – நா.வே.அருள்
தொடர் 2 : கவிதை உலா 2 – நா.வே.அருள்
தொடர் 3 : கவிதை உலா 3 – நா.வே.அருள்
தொடர் 4 : கவிதை உலா 4 – நா.வே.அருள்
தொடர் 5 : கவிதை உலா 5 – நா.வே.அருள்
தொடர் 6 : கவிதை உலா 6 – நா.வே.அருள்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.