மன ஊரின் கவிதைக் குடிசைகள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கவிஞர்கள்
க. அம்சப்ரியா, ராம் பெரியசாமி, கோ. பாரதிமோகன், டீன் கபூர், கயல், அசோக்ராஜ்
சூட்சுமங்களை உள்ளடக்கிய சின்ன கவிதைகள் சிக்கனத்தின் செய்நேர்த்திகள். சொல்ல வந்ததைச் சுருக்கென்று சொல்லிவிடுகிற வசீகரமான வசியங்கள்; உள்ளத்தைக் கிள்ளும் வாய்த் துடுக்குகள். இலக்கை எய்தி இரையைக் கொத்திக் கொள்கிற சுருக்கச் சொல்லம்புகள்.
பூமி முழுவதும் ‘பொய்’களின் புல்வெளிகள். வசீகரமான ‘வஞ்சகப்’ பூக்கள். படபடக்கும் ‘துரோகங்க’ளின் பட்டாம் பூச்சிகள். பெரிய பெரிய ‘பேராசை’ மரங்கள். காணவில்லை அறிவிப்புப் பலகையின் கீழே சின்ன எழுத்துகளில் பரிதாபமாக எழுதப் பட்டிருந்தது… உருவப் பொலிவிழந்த “உண்மை.”
வரிசை
இந்த வரிசைக்கு எப்படி வந்தேன்
என்று தெரியவில்லை
பின்னால் என்னைவிட உயரமாக
இரண்டு பொய்கள்
முன்னால் என்னிலும் வலுவான
நாலைந்து துரோகங்கள்
வஞ்சகம்தான் வரிசையை
நடத்திக் கொண்டிருந்தது
கட்டக் கடைசியில் பேராசை
நின்று தள்ளிக் கொண்டிருந்தது
நிற்க முடியாமல் விழுந்த
என்னைக் கண்டு எல்லாம் சிரித்தன
என்ன சத்தம் என்று வஞ்சகம்
திரும்பிப் பார்த்தது
உண்மை விழுந்துவிட்டது என்றது
என் பின்னாலிருந்த பொய்!
–அசோக்ராஜ்
சண்டை போடுவதற்காகவே வாய் திறக்கும் காதலன், சாளரத்தைச் சாத்துகிற காற்றுதானே? கண் இல்லாத காற்றே! முகத்தில் அடித்த மாதிரி மூடிவிடுகிற உன்னிடம் முணுமுணுத்து என்ன பயன்? காதலி பாவம் வெக்கையில் கரைந்து போகிறாள்…. ஆனாலும் காதலில் உறைந்து போகிறாள்!
நுட்பத்தில் நெய்த கைக்குட்டைதான் இந்தக் கவிதை….
வருகைக்காக வைக்கப்பட்ட சாளரத்தை
அறைந்து சாத்தியடியே வரும் காற்று
சந்தித்த மறு நொடி
நீ துவக்கும் பிணக்கு.
–கயல்.
பிரபஞ்சத்தின் மிகப் பெரிய பேரிடரே “மானுடன்”தான் போலும். மரம்தான். மரம்தான். எல்லாம் மரம்தான். மறந்தான். மறந்தான். மனிதன் மறந்தான்.” பாகப் பிரிவினையின் போது பங்குக்கு வந்து விடுகிற பங்காளிகள் மாதிரி, பார்வையில் படாதவர்கள் எல்லாம் பயன்களை அனுபவிக்க மட்டும் பக்கத்தில் வந்துவிடுகிறார்கள். விதைக்காதவர்கள் அறுவடைக்கு வருகிறார்கள்….
“விதையிடவில்லை
முளைத்த காலம் தெரியாது
வளர்ந்த காலத்தில்
நீரூற்றவில்லை
மரமான பின்
எங்கிருந்தோ வந்தார்கள்
பொருத்தமான ஆயுதங்களோடு”
–க. அம்சப்ரியா
அப்துல் ரகுமானைத் தொடர்ந்து ஏராளமான இளைய சக்திகள் கஸலைக் கையில் எடுத்திருக்கிறார்கள். கவிஞர் பாரதி மோகன் கஸல்களின் பேருந்தில் ஜன்னலோரப் பிரசன்னம்! அவை கஸல்கள் அல்ல; காதலின் கையெறிகுண்டுகள்! ஆனால் அவை காதலிக்கோ புளகிக்கும் பூச்செண்டுகள். எல்லோரும் விண்மீனைப் பார்த்துத்தான் வியந்துபோவோம். கவிஞன் கதையைத் திருப்பிப் போடுகிறான். விண்ணுக்கு வாய்க்காத நீர்மீன்கள்… அபாரம் கவிஞனே… இதோ….
கண்ணீர்த் துளிகளில் மையெடுக்கிறான் இந்தக் கஸல் கவிஞன்.
பெருகினாலென்ன கண்ணீர்
எனது கஸலுக்கான மை அது
உனது வேலையெல்லாம்
தீராத துயரைத் தருவதே
புதிதொன்றுமில்லை புகாரி
கள்ளித் தோட்டத்தில் அலையும்
காற்று என் காதல்
அண்ணாந்து மட்டுமே பார்க்கலாம்
விண்ணிற்கு வாய்க்காத நீர்மீன்கள்
வலையோ தூண்டிலோ
தக்கை மூழ்கினால்
முடிந்தது எல்லாம்
–கோ. பாரதிமோகன்
ஹைகூவை மிகவும் லாவகமாகக் கவிதையில் வைத்து புள்ளியைக் கோடாக்குகிறான் ஒரு கவிஞன். ஜப்பானியக் கவி பாஷோவின் பரிமாணங்கள் தமிழ்க் கவிதையுலகில் தனக்கான இடத்தைப் பரவலாகத் தக்கவைத்திருக்கிறது. உதிர்ந்த பூவின் வண்ணத்துப் பூச்சியைப் பார்த்த கண்கள்தாம் இப்போது வண்ணத்துப் பூச்சியின் இறக்கையில் வானவில்லைத் தரிசிக்கிறது. இறகு மனிதனுக்கு இறகு. காகங்களுக்கு காற்றில் சட சடத்து இறங்கும் சடலம்! வார்த்தைகளை வீழ்த்த வார்த்தைகளையே பயன்படுத்தும் விநோதம்தான் வாழ்க்கை! மனதிற்குள் கைநுழைத்துக் கண்டுபிடிக்கிறான் கவிஞன்.
வீழ்ந்து கிடந்த வண்ணத்துப் பூச்சியின் இறக்கையிலிருந்து
வானவில் எழுந்தது.
••••
மனிதன் யாதுமறியாது செல்கிறான்.
ஓர் இறகை உயிரென மதிக்கும்
காகங்கள் கரையத் தொடங்கின.
•••
நான்
நீ
என்ற பாகுபாட்டுடன்தான்
வாழ்கிறது
பிரபஞ்சம்.
சில வார்த்தைகள்
தப்பித்துக் கொள்வதற்காக
இன்னொரு வார்த்தையின் உதவியை நாடவேண்டி இருக்கிறது.
–டீன் கபூர்
வாழ்க்கையை விதவிதமாகக் கவிதையில் ஓவியமாகத் தீட்டிவிடுகிறார்கள் நவீன கவிஞர்கள். அதிலொருவன்தான் ரணகளக் கவிஞன் ராம் பெரியசாமி. எந்தவிதப் புகார்கள் எழுதாமல் ஒரு மனு சமர்ப்பித்துவிடுகிற சாமர்த்தியம் நிகழ்கிறது ராம் பெரியசாமியின் இந்தக் கவிதையில். அய்யோ…. அம்மா…. பார்த்தீர்களா…. என்னே கொடுமை…. என்றெல்லாம் வியப்புக் குறி வார்த்தைகளை விலக்கிவிட்டு ஒரு சித்திரத்தைக் காட்டுகிறான். பாசி விலக்கித் தண்ணீர் குடிக்கிற பக்குவம். விளக்கமே தேவைப்பாடாத கவிதை… நம் மனசை விட்டு விலகவே விலகாத கவிதை!
ஒரு செருப்புடன்
வீட்டிற்கு வருகிறார் அப்பா…
குடம் ஓட்டையெனத்தெரிந்தும்
தண்ணீர் கொண்டு
வருகிறாள் அம்மா…
பொத்தான் இல்லாத சட்டையை ஊக்கு போட்டு
பள்ளி கிளம்புகிறாள் அக்கா..
பழைய சாதத்தை அடுப்பேற்றி
சொப்புச்சாமானில் சமைக்கிறாள் அம்முக்குட்டி.
–ராம் பெரியசாமி
முந்தைய தொடர்களை படிக்க:
தொடர் 1 : கவி உலா – நா.வே.அருள்
தொடர் 2 : கவிதை உலா 2 – நா.வே.அருள்
தொடர் 3 : கவிதை உலா 3 – நா.வே.அருள்
தொடர் 4 : கவிதை உலா 4 – நா.வே.அருள்
தொடர் 5 : கவிதை உலா 5 – நா.வே.அருள்
தொடர் 6 : கவிதை உலா 6 – நா.வே.அருள்
தொடர் 7 : கவிதை உலா 7 (சிலுவை ஆணிகள்) நா.வே.அருள்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.