கவிதைச் சந்நதம் 1: நா.வே.அருள்

கவிதைச் சந்நதம் 1: நா.வே.அருள்

இன்றைய இளைஞர்கள் கவிதையை அதன் முடியைப் பிடித்துத் தெருவுக்கு இழுத்து வருகிறார்கள்.  இலக்கிய உலகில் ஒரு சந்நதம் நிகழ்ந்து வருகிறது.  சாமியாடியின் முன்பு கைக்கட்டி சொல்லு சாமி என்று அவர்களிடம் கவிதைகளின் எதிர்காலம் குறித்துக் குறி கேட்கத் தோன்றுகிறது.  வழிப்போக்கன் கவிதை ஒன்றினைப் படிக்க நேர்ந்தது.  மரணமென்பது திரவ வடிவிலானது என்கிற தலைப்பு நம்மைத் தண்ணீரின் சுழலுக்குள் தள்ளி விடுகிறது.  நாம் குடித்த தண்ணீர் கூட நமக்கு மரணத்தை நினைவுபடுத்துகிறது.  பிறந்தநாள் கொண்டாடுவதை எவ்வளவு சாதாரணமாக, அநாயசமாக மரணத்துடன் இணைத்துவிடுகிறார் இந்த இளைஞர்.  வயது முதிராத இளைஞரின் மூளை ஒரு வனத்தைப் போல.  எந்த நேரத்தில் எந்த விலங்கு வேட்டைக்காகச் சுற்றிக் கொண்டிருக்குமோ?  அடர்த்தியான இருட்டில் அவர்களின் மூங்கில் புதர்கள் அனைத்தும் புல்லாங்குழல்களாக இசைக்கத் தொடங்குகின்றன.  “வயதாவதென்பது மரணத்திற்குள் மெல்ல நுழைவது”…. பிறந்தநாளன்று கல்லறைச் சாலையில் கூடுதலாக ஓர் அடி எடுத்து வைத்துவிடுவது வலி தெரியாமல் வார்த்தைகளாகின்றன.

மரணம் என்பது வித விதமாக இருக்கிறது.  சில மரணங்கள் பஞ்சு மெத்தையில் விழுகிற மலரைப்போல சப்தமே இல்லாமல் விழுகின்றன.  சில மரணங்கள் ஓர் அருவியைப்போல பெருஞ்சத்தத்துடன் விழுகின்றன.  கவிஞன் சொல்கிறான்….“ சமயங்களில் மெல்ல நகரும் சுனையாக
சமயங்களில் பெருக்கெடுக்கும் நதியாக”

“மரணம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு வடிவமாகிறது” என்கிறான்.  மிகப் பெரும் தத்துவத்தை ஒரு வரியில் சுருக்கித் தருகிறான்.

“மரணம் ஒவ்வொரு மனிதனுக்கும்
ஒவ்வொரு நிறத்தை வைத்திருக்கிறது”  என்றவன்
“ஆம் நீங்கள் நம்பவில்லையென்றாலும்
மரணம் என்பது நிறமற்றது” என்கிறபோது குழப்பத்தை அடைகிறோம்.  இவ் வரிகளைக் கையாள்வதற்கு முன்பே, கவிதையின் முந்தைய வரிகளில் இந்த முரண் குழப்பத்தை விடுவித்திருக்கிறான்.

“மரணம் நீரைப் போல நிறமற்றது
நீங்கள் ஊற்றும் இடத்தைப் பொறுத்து
அல்லது அது நிரம்பும் பாத்திரம் பொறுத்து”

நிறம் மாறிவிடுகிறது என்கிறான். இக் கவிதை முழுவதும்  நுட்பமான முடிச்சுகளை மிக எளிமையாகப் போட்டுச் செல்கிறான்.

“மரணமென்ற
மாபெரும் உண்மை
திரவ வடிவிலானது
அது நிறமும் உருவமுமற்றது
அதன் குணம் மட்டும் நீரைப் போலானது.”

மரணத்தை ஒரு கவிதை நாணயத்தைப் போல விரல்களால் சுண்டி வானில் எறிகிறான்.  அது பூவா தலையா என்று பார்ப்பதற்காக நாம் அவசர அவசரமாகக் குனிந்து பார்க்கிறோம். அதுவோ இரண்டு பக்கமும் பூ அல்லது இரண்டு பக்கமும் தலை உள்ள ரகசிய நாணயம் என்பதை நாம் இறுதி வரையிலும் அறியவே இல்லை.

இனி  கவிதையைப் படித்துப் பாருங்கள்……

#மரணமென்பது_திரவ_வடிவிலானது

ஒழுகும் கணங்களில்
உயிர் கொஞ்சம் கொஞ்சமாய்
வெளியேறுகிறது
அதை தான் நாம்
பிறந்தநாள் என்று சொல்லி
கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
வயதாவதென்பது மரணத்திற்குள்
மெல்ல நுழைவது.

பள்ளத்தை நோக்கிப் பாயும்
நீரைப் போல மரணம்
மனிதர்களை நோக்கிப் பாய்கிறது
சமயங்களில் மெல்ல நகரும் சுனையாக
சமயங்களில் பெருக்கெடுக்கும் நதியாக.

மரணத்தின் வடிவம் நீரைப் போன்றது
வடிவமற்ற நீரை நீங்கள்
எந்த பாத்திரத்தில் ஊற்றினாலும்
அது அந்த வடிவாமாக
மாறிவிடுவதைப் போல
மரணம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்
ஒவ்வொரு வடிவமாகிறது
ஆம் நீங்கள் நம்பவில்லையென்றாலும்
மரணம் என்பது திரவ வடிவிலானது.

மரணம் நீரைப் போல நிறமற்றது
நீங்கள் ஊற்றும் இடத்தைப் பொறுத்து
அல்லது அது நிரம்பும் பாத்திரம் பொறுத்து
அதன் நிறம் மாறுவதைப் போல
மரணம் ஒவ்வொரு மனிதனுக்கும்
ஒவ்வொரு நிறத்தை வைத்திருக்கிறது.
ஆம் நீங்கள் நம்பவில்லையென்றாலும்
மரணம் என்பது நிறமற்றது.

உடலிலுள்ள திரவங்கள் மெல்ல
வற்ற ஆரம்பிக்கையில் அல்லது
வெளியேற ஆரம்பிக்கையில்
அந்த நிறமற்ற மரணம்
ஒவ்வொருவருக்கும் நிகழ்கிறது.

ஆம் நீங்கள்
நம்பவில்லையென்றாலும்
நிச்சயிக்கப்பட்ட மரணமென்ற
மாபெரும் உண்மை
திரவ வடிவிலானது
அது நிறமும் உருவமுமற்றது
அதன் குணம் மட்டும் நீரைப் போலானது.

Show 10 Comments

10 Comments

  1. நா.வே.அருள்

    பிரசுரித்தமைக்கு மிக்க நன்றி .

  2. குமரேசன்

    மரணத்தைப் பேரிழப்பாகச் சொல்வோர் உண்டு. நிலையாமைத் தத்துவத்தை வலியுறுத்த மரணத்தைக் காட்டுவோர் உண்டு. மரணத்தைப் பாவத்தின் சம்பளம் என்றும், மறுமைக்கான நுழைவாயில் என்றும், இறைவனோடு ஆன்மா ஐக்கியமாகிற வரையிலான பிறவிகளின் தொடர் என்றும் சொல்கின்றன மதங்கள். பிறந்த பொழுதிலேயே தீர்மானமாகிவிட்ட நிகழ்வு மரணம், அது நிகழ்வதற்குள் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்ளச் சொல்கிறது அறிவியல். அந்த அறிவியலுக்கு அழகியலைச் சேர்க்கிறது இந்தக் கவிதை. வழிப்போக்கனிடமிருந்து எடுத்துக் கொடுத்த அருளுக்குத்தான் நன்றி.

  3. நா.வே.அருள்

    தீக்கதிரின் மூத்த பத்திரிகையாளராக இருந்து இன்றும் முக்கியமான அரசியல் சமூக விமர்கராகவும் பன்முக ஆளுமையாகவும் திகழும் தோழர் அ.குமரேசன் அவர்களின் இந்தப் பாராட்டுதலை வணங்கி ஏற்கிறேன். பிரசுரித்த புக் டே இணைய இதழுக்கு என் நன்றிகள். வழிப்போக்கனுக்கு வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *