ஒரு பறவையைப் போல
தன் கைகளை
அகல வீசி
பறந்துப் பறந்து
நடித்துக் காட்டும்
அக்குழந்தையிடம்
வானத்தை
வரைந்து கொடுத்தேன்
வலசைகள் போன
பறவைகள் திரும்ப
வந்தபடியே தான் இருக்கின்றன
எங்கள் கிராமத்தின்
குடிசைகளை நோக்கியே ,
*
வேலை முடிந்து
வீடு வந்த
தன் மகனிடம்
நம் வீட்டில் தான் பாட்டிகள்
இல்லையே
நீ யேன் தினமும்
வெற்றிலை பாக்கு
வாங்கிக்கொண்டு வருகிறாயே
என்று
அம்மா கேட்டாள்
எனக்கு தான் பாட்டிகள் இல்லை
என் மகனுக்கு
பாட்டி இருக்கிறாள் யென்று
மகன் சொல்ல
இறந்து போன தன்
பாட்டியின் புதிய
புகைப்படத்தின் கீழே தான்
இன்னும்
ஊஞ்சலாடிக்கொண்டிருக்கிறது
பாட்டியின் பழைய சுருக்குப் பையொன்று ,
*
அழுது அழுது
குளமாகிவிட்ட
என் ஆறடி குடிசைக்குள்
மீனும் இல்லே
நீரும் இல்லே
இப்பொழுது
எந்துணைக்கு யாருமில்லே
நினைவுகளாக
புதைந்து கிடக்கிறது
அப்பாவும் அம்மாவும்
ஒன்றாக சேர்ந்து
எப்பொழுதே
எடுத்துக்கொண்ட
பழைய புகைப்படமொன்று ,
*
மழையில்
நனையாதேயென்று
அம்மா அதட்டுவதும்
வெளியில் வாவென மழை அழைப்பதும்
இருவருக்குமான இடைப்பட்ட இடைவெளியின் தூரத்தில்
வானம் பூமியைப்
பார்த்துச் சிரிக்கிறது
கைவிடப்பட்ட ஒவ்வொரு
குழந்தையின் கைகளிலும்
அழகாக பூத்திருந்தன
யாரோ ஒரு வழிப்போக்கன்
வரைந்த வால் நட்சத்திரங்கள்
*
வெயிலில் சுற்றாதே
உள்ளே வாவென
அவ்வப்போது
அதட்டும் அப்பாவை
நேற்று என் ஜன்னலின்
வழியாக முழுமையாகப்
பார்த்தேன்
அவரின் தேகமெங்கும்
உப்பளங்களாகப் பூத்திருக்கும்
அக்கடலின் உடலில்
கரையேதும் இல்லாமல்
மீன்களாகத் தான் நீந்திக்கொண்டிருந்தது
படரும் மஞ்சள் வெயில்
*அம்மாவைப் புதைத்த ஆறடி
நிலத்தின் பக்கத்திலே
அப்பாவையும்
புதைக்கச் சொன்னார்கள்
அம்மாவை இடது பக்கத்திலும் அப்பாவை வலது பக்கத்திலும்
புதைத்து விட்டு
வீடு திரும்பும் மகனின்
வழியெங்கும்
கண்ணீராக நிரம்பி வழிகிறது
அப்பா அம்மாவுக்கும் இடையில்
ஆறடி நிலத்தில்
புதைத்த தன்னுடைய
எதிர்காலக் கனவுகளின் உயிர் ,
கவிஞர் ச.சக்தி
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
சிறப்பு 💙🎉