கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு தொடர் கட்டுரை – 4
கூட்டாஞ்சோறு அரங்கு – தமுஎகச, தென்சென்னை மாவட்டம்.
காளியும் கூளியும் காக்கவில்லை:
இந்த பூமி சூரியனைச் சுற்றுகிறதா இல்லை சூரியன் பூமியைச் சுற்றி வருகின்றதா என்று கேட்டால் நீங்கள் விடையைச் சொல்லி விடுவீர்கள். இந்திய உபகண்டம் யாரைச் சுற்றுகிறது? இந்திய நாடு 2012 லிருந்து 2021 வரை உருவாக்கிய பொருளாதார வளர்ச்சியில் 40% இந்தியாவின் 1% மேல்தட்டு வர்க்கத்தினரையேச் சென்றடைந்துள்ளது. 50 % ஆக இருக்கும் அடித்தட்டு மக்களுக்கு 3% வளங்களே கிடைத்துள்ளன. ஒரு பக்கமாய் சாய்ந்து உயரமாய் வளரும் இந்தியா! தலை சுற்றுகிறதா? எனக்கும். நானும் இந்தியாவில் தான் இருக்கிறேன். வளமான, வளர்ந்த, வளரும் பக்கத்தில் அல்ல; மாறாக உழைத்து ஓடாய் தேயும் விடியலில்லா வஞ்சிக்கப்பட்டப் பக்கத்தில்…
கழைக் கூத்தாடி :
அன்றைய வயிற்றுப் பாட்டை கவனிக்க குழந்தை குட்டிகளுடன் கிளம்பி விட்டான் இந்த கழைக்கூத்தாடி. மூங்கில் கழிகளும், கயிறும், சின்னக் கம்பியும் அதில் ஒட்டிய வட்டத் தகரம் சகிதமாய் தொழிலுக்கு வந்து விட்டான். கூட்டம் கூட்டிப் பார்வையாளர்களின் நெஞ்சைத் தட்டி காசு கேட்க மேளத்தை மறந்தானில்லை.
“தென்னை உயரத்துக் கம்பத்திலே – மிகச்
சின்ன வயிற்றினை ஒட்டவைத்தே
மின்னியல் காற்றாடி சுற்றுதல்போல் – அதோ
வேகமாய்ச் சுற்றுதே என்குழந்தை!
திண்ணைமே லோரத்தில் உம்குழந்தை – தன்னைச்
செல்ல விடுதற்கும் அஞ்சிடுவீர்!
அண்ணாந்து பாருங்கள்! ஆகாசத்தில் – என்றன்
ஆசைக் குழந்தையும் சுற்றுவதை!
உச்சியி லேஒரு சின்னக்கம்பி – அதில்
ஒட்டிய வட்டத் தகரத்திலே
குச்சி உடலொன்று சுற்றுதையா! – விசை
கொஞ்சம் தவறிடில் மிஞ்சிடுமோ? “
கற்ற வித்தையை அவன் நம்பவில்லை. காளியை நம்பி மேலே ஏற்றியிருக்கிறான்.
“காளியை நம்பிஎன் பிள்ளையதோ – அந்தக்
கம்பத்தின் உச்சியில் தொங்குதையா!
பாதகர் நெஞ்சிலே ஈரமில்லை!
அந்தரத்தில் ஆடுகின்ற சிறு குழந்தை. அப்பனோ பசி மயக்கத்தில் தள்ளாடுகிறான். கூடிய கூட்டமோ வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தது. கதறி அழுகிறான். பிள்ளை ஒரு கண்ணில் பிச்சை ஒரு கண்ணில்… தன்னைத் தாழ்த்தி இரந்தும் இரங்கவில்லை அக்கூட்டம்.
“மேளத்தைப் போலவன் தன்வயிற்றைத் – தட்டி
மீறிய சோகம் எழுப்புகிறான்!
வாளில் நடப்பது போல் சிறுவன் – பெரும்
வாதை யுடன்அங்குச் சுற்றுகிறான்!
பெற்றமனம் அச்சம் கொள்கிறது – துக்கம்
பீறிட்டுத் தொண்டை அடைக்கிறது!
சுற்றிலும் நிற்பவர் தம்மிடையே – அவன்
சோகக் குரலினில் கெஞ்சுகிறான்!
கும்பலை நோக்குவான் ஒற்றைக்கண்ணால் – தன்
குழந்தையை மற்றொரு கண்ணில் வைப்பான்!
தெம்பிழந் தாடும் உடல்சுமந்தே – மிகத்
தேங்கித் தள்ளாடி நடந்திடுவான்!
“சிரித்து மகிழ்ந்திங்கே நின்றிருக்கும் – பெருஞ்
செல்வர்கள் சிந்தை இரக்கமுடன்
விரித்திருக்கும் இந்தக் கம்பளத்தில் – அன்பால்
வீசிடு வீர்பல காசுகளை!
கண்கள் படைத்தவர் நெஞ்சிரங்கி – ஒரு
காசு கொடுத்தெமைக் காத்திடுங்கள்!
பெண்களை ஆண்களைப் பெற்றவரே – கொஞ்சம்
பெரிய மனம்வைத்துக் காத்திடுங்கள்!”
பிச்சை யெடுத்திட வைத்திருக்கும் – இந்தப்
பேதைச் சமூகத்தில் வாழ்பவர்கள்
பச்சைக் குழந்தையின் ரத்தங்கண்டும் – அங்குப்
பாதகர் நெஞ்சிலே ஈரமில்லை!”
காளியும் கூளியும் காக்கவில்லை:
காளி தெரியும், கூளி யார். தமிழும் தானும் ஒன்றென வாழ்ந்த கவிஞன் படிமங்களையும், குறியீடுகளையும் அவ்வளவு எளிதாகவா எடுத்தாளுவார்?!
கலிங்கத்துப் பரணியிலே காளியின் முன் கூளி நிகழ்த்தும் இந்திரசாலங்களைக் குறிப்பிட்டுள்ளார் என எண்ணத் தோன்றுகிறது. கூளி ?! யார்? முதுபேய்!!
அந்த முதுபேய் எனும் கூளி கூட கூழ் சமைத்து உண்ண முடிந்தது.
கூழின் மிகுதி என்று செயங்கொண்டார் பாடுகிறார் இப்படியாக
“ ஒருவாய் கொண்டே யிதுதொலைய உண்ண வொண்ணா தென்றென்று
வெருவா நின்றீ ராயிரம்வாய் வேண்டு மோவிக் கூழுணவே”
பார்ப்பன, சமண, புத்த, குருட்டுப் பேய்களுக்கும், கருவுற்றப் பேய், கணக்கப் பேய், கூத்திப் பேய்களுக்கும், ஊர்ப் பேய்களுக்கும் விருந்தளிக்கப் பட்டதும் நம் கலிங்கத்துப் பரணி மண்ணில் தான். ஏழைகளுக்கு மட்டும் எப்போதும் உணவில்லை.
தமிழாய் நின்ற தமிழ்ஒளி இதை அறிந்தே சாடுகிறார். காளியும் கூளியும் காக்கவில்லை. மூட நம்பிக்கைகளால், சடங்குகளால் மாய்ந்து விட வேண்டாம் என்கிறார்.
“வீழ்ந்து விட்டான்! – பையன்
கீரைத் தண்டொத்த வுடல்தளர்ந்தே!
மூச்சில்லை! ஓடியே அக்கிழவன் – பிள்ளை
முகத்தில் முகம்ஒற்றிச் சாய்ந்துவிட்டான்!
காளியும் கூளியும் காக்கவில்லை! – மூடக்
கட்டுக் கதைகளை நம்பியதால்!
தேளையும் பாம்பையும் கும்பிடுவார் – இவர்
தீமை அடைந்துமே செத்திடுவார்! “
Just Mercy:
இக்கட்டுரையில் பிறமொழிக் கலப்பை நான் விரும்பவில்லை. Just Mercy என்பது ஒரு ஆங்கில நூலின், திரைப்படத்தின் பெயர் இதை ‘வெறும் கருணை’ என மொழிபெயர்ப்பு செய்ய வேண்டாம் என்று எண்ணுகிறேன். ஏனெனில் பிரையன் ஸ்டீவன்சன்!அமெரிக்காவின் அலபாமா மகாணத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி இல்லாமல் இருந்தது. மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு எதற்கு உதவ வேண்டும், அவர்கள் எத்தகையக் குற்றச் செயலை செய்து இருப்பார்களோ என்று நினைக்கிறீர்களா? அவர்கள் இழைத்தக் குற்றம் கருப்பினத்தவராய் பிறந்ததுதான். பொய் வழக்குகளில் அவர்களை சிக்க வைத்து மரண தண்டனை வரை இழுத்துச் செல்லப் பட்டார்கள். இந்திய இஸ்லாமியர்களும், ஒடுக்கப்பட்டவர்களும், தலித்துகளும், சமூகப் போராளிகளும் நினைவிற்கு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஒரு மாகாணமே இக்கொடுமைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது, ப்ரையன் ஸ்டீவன்சன் என்றொரு வழக்கறிஞர் வரும் வரை. மரண தண்டனை விதிக்கப்பட்ட 135 பேரை வழக்காடி காப்பாற்றியிருக்கிறார். நூற்றுக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இலவச சட்ட உதவி புரிந்திருக்கிறார். சிறாருக்காகவும், வறுமைக்கு எதிரான சமூக செயல்களையும் இன்றளவும் அவர் ஏற்படுத்திய அமைப்பு செய்து வருகிறது.
(படம்:பிரையன் ஸ்டீவன்சன்)
கண் முன்னே அநீதி நடந்தால் எப்படி கண்டும் காணாமல் அதைக் கடக்க முடியும் ஈரமுள்ள நெஞ்சினால்? பிரையன் ஸ்டீவன்சன் சொல்வதை கவனியுங்கள் தோழர்களே,
“ஏழைகள் மற்றும் சிறையில் அடைக்கப்பட்டவர்களுடனான எனது பணி, வறுமைக்கு எதிரானது செல்வம் அல்ல என்பதை எனக்கு வலியுறுத்தியுள்ளது; வறுமைக்கு எதிரானது நீதி. ”
பிரையன் சட்டத்தைக் கையில் எடுத்தார். தமிழ்ஒளியோ கவிதையை…
“ கீச்சிட் டலறினன்! வீழ்ந்து விட்டான்! – பையன்
கீரைத் தண்டடொத்த வுடல்தளர்ந்தே!
மூச்சில்லை! ஓடியே அக்கிழவன் – பிள்ளை
முகத்தில் முகம்ஒற்றிச் சாய்ந்துவிட்டான்!
வேடிக்கை பார்த்தவர் ஓடிவிட்டார்! – அங்கு
வீழ்ந்த இரண்டுடல் வேதனையில்
கூடிக் கிடந்தது; குள்ளத்தமிழர் போல்
குருடாகி நின்றதக் கம்பமுமே! “
எங்கு நிற்கிறோம் நாம்? :
நாம் நீதியின் பக்கத்திலா நிற்கிறோம் தோழர்களே? ஒரு வேளை உணவிடுவதால் வறுமை ஒழியாது. வறுமையை ஒழிக்கவும், வர்க்க பேதங்களைத் தகர்க்கவும் நாம் என்ன செய்ய வேண்டும்? சிந்தியுங்கள். ஏனெனில்,
“ வறுமை சமூக நிலை இல்லை சமூக அநீதி
பட்டினி ஏழ்மை இல்லை வன்கொடுமை “
– எஸ்தர் ராணி
• அடுத்தது 🚩 நாயும் பூனையும்