கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு
தொடர் கட்டுரை- 5
கூட்டாஞ்சோறு அரங்கு – தமுஎகச, தென்சென்னை மாவட்டம்.
தனித்துவம் ஏற்றுப் பன்மைத்துவம் போற்று!
குரங்கு மனிதன் குகை மனிதனாகி, நதிக்கரை மனிதனாகி, நாகரீகம் பயின்று காலங்கள் மாற இயந்திர மனிதனாகி தொழில்நுட்பம் மிகுந்த நகர்ப்புறங்களின் அருகமைந்திருக்கும் காலமிது. ஆயினும், நாம் கணினி மனிதன் ஆன பின்னும் கற்கால மனிதர்களின் பிரிவினைகளைத் துறந்த பாடில்லை. வயதால் முதிர்ந்த மனிதனைப் பண்படுத்துதல் கடினம்; குழந்தைகளைப் பண்படுத்துதல் எளிதன்றோ! கவிதைகள் நாடகங்கள் காப்பியங்கள் என்றெல்லாம் தமிழ்ஒளி தன் எழுத்துலகத்தைப் படைத்த போது சிறார்களுக்கான கவிதைகளுக்கும் தனியிடம் அளித்திருக்கிறார். குழந்தைகளுக்கான கவிதையாக மட்டும் இல்லை, அனைத்து மக்களுக்கும் அறிவுரையும் அறவுரையும் அளிப்பதாகவே இருக்கிறது ” நாயும் பூனையும்”
நண்பர்கள் :
ஏழு முறை ஆஸ்கார் விருதுகள், உலகளாவிய ரசிகர்கள் வணிக ரீதியிலான மாபெரும் வெற்றி ஆகியவற்றைப் பெற்ற பின்னரும் கூட குழந்தைகளுக்கான கேலிச்சித்திர கதாபாத்திரங்கள் கடுமையான எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றன. அவை வேறெதுவும் இல்லை; நாம் விரும்பி ரசித்த டாம் அண்ட் ஜெர்ரியே. பெருவாரியான மக்கள் ரசிக்கத் தொடங்கி ஆண்டுகள் பல கடந்த பின்னரே அங்குமிங்குமாய் எதிர்ப்புக் குரல்கள் உலகெங்கும் எழ ஆரம்பித்தன. குழந்தைகளுக்கான கதைகளில் அதிகப்படியான வன்முறைகள், வயதிற்கு ஒவ்வாத தீயப் பழக்கங்கள், நிறவெறி என குற்றச்சாட்டுக்கு ஆளான பின்னரே இந்தப் படங்களை ஒளிபரப்புவது கேள்விக்குறியானது. ஒரே வீட்டில் வசிக்கும் பூனையும் எலியும் அடித்துக் கொள்வதை ஒருவரையொருவர் அழிக்க முயல்வதை நூற்றி அறுபதுக்கும் மேலானப் படைப்புகளாக உருவாக்கியிருக்கிறார்கள்.
ஆனால் நம் தமிழ்ஒளியோ எந்நாளும் நிலைத்து நிற்கும் வகையில் அனைவரும் அறிய வேண்டியவற்றை இக்கவிதையில் எளிமையாகச் சொல்லுகிறார்.
குழந்தைகளின் ஆழ்மனதில் புகுத்த வேண்டிய நல்ல விடயங்களை எளிய தமிழில் சிறிய கதையை கவிதைக்குள் புகுத்தி இருக்கிறார். இதுவல்லவா ஒரு படைப்புக் கடவுள் செய்ய வேண்டிய பணி!
“ஒரு குடியானவன் தன் வீட்டில் ஒற்றுமையான நண்பர்களாய்
நாயும் பூனையும் வாழ்ந்தனவே!
நட்புக் கொண்டு வாழ்ந்தனவே!”
நாட்டுக்கு ஒரு தலைவன்; நாய்க்கு ஒரு எஜமானன்:
முதலில் கவிதையைப் படியுங்கள் பிறகு விளக்கத்தைப் பார்க்கலாம்
“பகலில் பூனை தூங்கிவிடும்
பார்க்கும் நாய்க்குக் கோபம் வரும்
சோம்பல் கொண்ட பூனைக்குச்
சோறு போட்டு வளர்க்கின்றார்
விடக்கூடாது நாம் என்றே
விரட்டி விட்டது பூனைதனை
பூனை இல்லாத நேரத்தில்
புகுந்த எலிகள் வீட்டிற்குள்
தேடித் தேடிப் பொருள் எல்லாம்
திருடி நன்றாய் உண்டனவே
குடியானவன் இது கண்டான்
கோபம் கொண்டான் நாயின்மேல்
எலியைக் கொல்ல முடியாமல்
இருந்த நாயை நன்றாக
அடித்து வெளியில் விரட்டி விட”
தோழர்களே! நாய் இருக்கும் இடத்தில் பெரும்பான்மை அல்லது பலம் வாய்ந்த மக்களைப் பொருத்துங்கள். பூனை உள்ள இடத்தில் பலம் குன்றியவர்கள், சிறுபான்மையினரைப் பொருத்துங்கள். குடியானவனாய் நாட்டின் முதலாளிகளைக் கருதுங்கள். இப்பொழுது நான் உங்களுக்கு விளக்கம் சொல்லவும் வேண்டுமா!
நாம் நாயாக இருந்தாலும், பூனையாக இருந்தாலும் தன் வேலைக்கென்றே முதலாளி நம்மை விட்டு வைத்திருக்கிறார் என்பதை நான் சொல்லித் தான் தெரிய வேண்டுமா தோழர்களே?
பன்மைத்துவம் நமது வலிமை :
இந்திய துணைக்கண்டத்தில் எண்ணற்ற இனங்கள், மொழிகள், மதங்கள் இருந்தாலும் இந்தியராய் நாம் ஒருநிலைப்பட்டிருக்கிறோம். நம் பன்மைத்துவம் பலவீனமாக மாற்றம் செய்யப்பட்டிருப்பது சில முதலாளிகளின் நலனுக்காகத் தானே. எனவே மக்களைப் பிரித்து இந்த நாட்டில் ஒற்றுமையைக் குலைப்பவர்களுக்காகவே கவிஞர் சொல்கிறார்
“அது போய் பூனை தனைக் கண்டு
நண்பா நண்பா திரும்பி வா
நட்பாய் நாமும் வாழ்ந்திடலாம்
எலியைக் கொல்ல முடியாமல்
இருந்ததாலே எசமானன்
என்னை அடித்தான் என்றதுவே
இச்சொல் கேட்ட சிறு பூனை
‘” நான் செய்கின்ற சிறு வேலை
நாய் செய்திடவும் முடியாது
நாய் செய்கின்ற சிறு வேலை
நான் செய்திடவும் முடியாது
அவரவருக்கும் தாம் செய்யும்
அவ்வவ் வேலை எளிதாகும் ‘”
என்றே சொல்ல “இவ்வுண்மை
இன்றே கண்டேன்” என்றது நாய்!”
அவரவர்க்கு உண்டான தனித்தன்மையை ஏற்பதுடன், மற்றவரின் தனித்தன்மையை மதிப்பது நம்மை ஒன்றிணைக்கும் அல்லவா! இதைத்தான் தமிழ்ஒளி குழந்தைகளுக்குச் சொல்லுகிறார். இந்நாட்டின் பன்மைத்துவத்தை வளரும் பிள்ளைகளின் வாயிலாக வலிமையாக மாற்றுவதே தமிழ்ஒளியைப் போன்ற நல்ல தலைவர்களின் உள்ளக்கிடக்கை! அவர்கள் நம்மை நம்பி நம்மிடம் விட்டுச் சென்றிருக்கும் பொறுப்பு!!
– எஸ்தர் ராணி
அடுத்தது🚩 சாய்ந்த குடிசை