கவிஞர் வாலி (Kavignar Vali) எழுதிய "நானும் இந்த நூற்றாண்டும் (Nanum Intha Nootraandum Book)" - புத்தகம் PDF ஓர் அறிமுகம்

கவிஞர் வாலி எழுதிய “நானும் இந்த நூற்றாண்டும் (Nanum Intha Nootraandum)” – நூல் அறிமுகம்

நானும் இந்த நூற்றாண்டும் (Nanum Intha Nootraandum) – நூல் அறிமுகம்

என்றும் இளமை துள்ளும் பாடல்களும் தலைமுறை தாண்டிய கருத்தாழம் மிக்க பாடல்கள் வழியே மூன்று தலைமுறை திரையுலகை வரிகளால் ஆட்சி செய்தவருமான வாலி அவர்கள் எழுதிய தன்வரலாறு நூல் இது.

“”நேர்க்கோடுகள் என்றும் ஓவியமாகா. குறுக்கும் நெடுக்குமாக மேலும் கீழுமாக இழுக்கப்படுகின்ற கோடுகளே எழிலார்ந்த சித்திரம் ஆகிறது. வாழ்க்கையும் அப்படித்தான். ஏற்ற இறக்கங்களோடு எழுதப்பட்ட வரைபடமாக இருக்குமாயின் விமர்சனங்களுக்கு உள்ளாகும் அளவு அதற்கு ஒரு விலாசம் கிடைக்கிறது. தேங்கிய குட்டைகளைப் பற்றி தேசங்கள் பேசுவதில்லை. விழுந்தும் எழுந்தும் ஓடிக்கொண்டிருக்கும் நதிகளின் பெயர்களைத்தான் வரலாறு தன் பதிவேட்டில் குறித்து வைக்கிறது. நான் இன்று இருக்கும் இடத்திற்கு ஒரு நதி போல் தான் விழுந்தும் எழுந்தும் ஓடி வந்திருக்கிறேன். இன்னமும் இறையருளால் ஓடிக் கொண்டிருக்கிறேன்”” என்று முன்னுரையில் வாலி தன்னைப் பற்றி ஒப்புவித்திருக்கும் சுய விமர்சனத்தில் பொதிந்திருக்கும் உண்மைகளே நூல் முழுவதும் விரவி நின்று அவரது புலமையையும் வாழ்வையும் தெளிவாக எடுத்துரைக்கிறது.

நூலில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் தன்னை ஒருபோதும் முன்னிலைப்படுத்தி மேன்மைப்படுத்தாமல் தனது உயர்வுக்குக் காரணமானவர்களை முழுமையாக வணங்கி மகிழும் வாலி அவர்களின் உள்ளத்தில் ஏற்றிவிட்ட ஏணிகளை வணங்கும் பண்பும் பழமையை மறவாத தன்மையும் சிறப்புற அமைந்து அவரது புலமைக்கு சிறந்த அடித்தளம் இடுகின்றன.

ஸ்ரீரங்கத்தில் வைணவக் குடும்பத்தில் பிறந்தவர் வைணவக் கருத்துக்களை முழுமையாக உள்வாங்கிப் படித்தவர். ஆனாலும் முருகன் மீது ஆழ்ந்த பற்றும் இறை பக்தியும் கொண்டவர். தனது வாழ்வின் எல்லா செயல்களும் இறைவனின் கருணையினால் மட்டுமே நடக்கின்றது என்பதை செல்லும் இடமெஙகும் தவறாது ஒப்புவிப்பவர். தனது முயற்சியை விட தனது முன்னேற்றத்திற்குப் பெரிதும் துணை நிற்பது இறைவனின் அருள் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கையுடையவர் வாலி. நூல் முழுவதும் அவர் எழுதி இருக்கும் ஒவ்வொரு கட்டுரையிலும் அதையே கோடிட்டுக் காட்டுகிறார்

“”ஒரு மனிதன் தலைக்கனம் இல்லாமல் இருப்பதைவிட தலையில்லாமல் இருப்பது மேல். நான் என்னும் நினைப்பும் முனைப்பும் இல்லாமல் எந்த மனிதனாலும் நான்கு விரல் கடை அளவு கூட முன்னேற இயலாது. தன்னை அறிதல் எவனுக்கில்லையோ அவன் தோள்களில் தாழ்வு மனப்பான்மை தொற்றிக் கொள்கிறது. நம்மால் இது இயலுமா என நகத்தைக் கடிப்பவர்களுக்கு முயற்சி மெய்வருத்தக் கூலி தரும் என்கின்ற குரல் கூட தேர்தல் வாக்குறுதி போல் திகட்டிப் போகிறது. அவர்களெல்லாம் கொட்டாவி விட்டாலே குடல் வெளியே வந்து குதித்து விடும் என்று வாயை அகலத் திறக்க அஞ்சுபவர்கள்.. தன்னைப் பற்றிய ஒரு தலைக்கனம் ஒவ்வொரு மனிதனுக்கும் இருந்தால்தான் அவன் தலையெடுக்க இயலும். இங்கே தலைக்கனம் என்று நான் குறிப்பிடுவது அவரவர் முயற்சியும் பயிற்சியும்”” என்று முதல் அத்தியாயத்தை ஆரம்பிக்கும் வாலி அரசியல் ஆன்மீகம் இசை இலக்கியம் என்றெல்லாம் தனது அனுபவம் சார்ந்த விஷயங்களை நூல் முழுக்க எழுதிச் செல்கிறார்.

“”பத்து வயது முதல் எத்தனையோ தடவை ஆனைக்கா அம்பிகையின் பிரகாரத்தை நான் வலம் வந்திருக்கிறேன். காளமேகத்தின் மீது கடலளவு இறங்கிய அகிலாண்டேஸ்வரியின் கருணை மழை என் மீது கை அளவாவது இறங்கி இருக்கக்கூடும் என்ற நப்பாசையும் நம்பிக்கையும் தான் பாட்டரங்கங்களில் எனக்கு பக்கபலமாக இருந்தன. முறையாக தமிழ் கற்றோர் முன்னே அந்த தைரியம் தான் என்னைத் தலைமை ஏற்க வைத்தது. எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் தமிழ் தான் எனக்கு சோறு போட வேண்டும் என்பது இறைவனின் திருவுள்ளமாக இருந்ததால்தான் என் பிள்ளை பிராயத்திலேயே இறைவன் அதற்கேற்ற சூழ்நிலையை அமைத்துக் கொடுத்தான்”” என்று கடவுளின் அருள் பற்றியும் அவன் மீதான தனது நம்பிக்கை பற்றியும் தெளிவாக எடுத்துரைக்கும் வாலி தான் அறிந்த தமிழின் வலிமையையும் பொலிவையும் தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் குப்பனுக்கும் சுப்பனுக்கும் புரியுமாறு கூடை கூடையாக பாட்டு எழுதி கொட்டி வைத்துப் போன பெருந்தகை பாரதியை தனது வழிகாட்டியாக தேர்ந்து கொண்டவர்.

“”எவனொருவன் தன்னை ஆளாக்கிய அன்னையையும் தந்தையையும் வாழ்நாள் மட்டும் உள்ளத்தில் வைத்து அழுத்தி நன்றியோடு வணங்கி வருகிறானோ அவனை கடவுளே பார்த்து கை தூக்கி விடுகிறார்.”” தனது பெற்றோர் பற்றிய வாலயின் இந்தக் கருத்திலிருந்து பெற்றோர் மீதான அவரது பாசத்தையும் நேசத்தையும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

சிறு வயது முதலேயே நாடகங்களின் மீதும் தமிழ் மீதும் கொண்ட பற்றின் காரணமாக சொந்தமாக நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றுகிறார் வாலி. ஒவ்வொரு முறையும் அன்றைய எழுத்தாளர்களில் புலமை வாய்ந்தவர்களையோ முக்கியப் பிரமுகர்களையோ முன்னிலைப்படுத்தி தனது நாடகங்களை அரங்கேற்றுகிறார். அப்படியாக நாடகங்களில் அவர் பயின்ற இசையும் அதற்கேற்ப எழுதுகின்ற பாடல்களும் அவரை பிற்காலத்தில் திரையிசைக்குப் பாடல் எழுதுவதற்கு அருமையான அடித்தளம் அமைத்துக் கொடுக்கின்றன. நாடகங்களின் வழியே தான் அறிந்துகொண்ட இசை நுணுக்கங்களையும் ராகங்களையும் நூலில் அவ்வப்போது கோடிட்டுக் காட்டுவதை எண்ணுகையில் அவரது நினைவுத்திறன் மீதும் இசை மீதான அவரது கவனக்குவிப்பு மீதும் நமக்கு பேராச்சர்யம் ஏற்படுகிறது.

பணம் சம்பாதிக்கும் வயது வந்தும் பணம் சம்பாதிக்காமல் பாட்டெழுதியும் நாடகம் எழுதியும் ஊர் சுற்றித் திரியும் குழந்தையை எந்தப் பெற்றோர்தான் விரும்புவார். ஆனாலும் நாடகம் பாட்டு என்பதைத் தாண்டி தனக்குள் ஒளிந்திருக்கும் ஓவியத் திறமையை வெளிக்கொணர்ந்து ஒவ்வொரு பெருந்தலைவர்களையும் ஓவியமாகத் தீட்டி அவர்களிடமே கையெழுத்து வாங்குவது வாலியின் வழக்கம். அப்படி ஒரு முறை முக்கியமான ஓவியரிடம் தனது ஓவியத்தை காண்பிக்கவும் முறையாக ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படித்தால் சிறந்த ஓவியராக வர முடியும் என்று தூண்டுகோல் கிடைக்க அப்பாவை வற்புறுத்தி ஓவியக் கல்லூரியில் சேர்கிறார் வாலி.

கல்லூரியில் முழுமையாக ஒட்ட முடியாமல் முதலாம் ஆண்டு முடிவிலேயே விடை பெற்றுத் திரும்பவும் சொந்த ஊருக்கே பயணப்பட வாழ்க்கையின் நிலையாமையில் நின்று கொண்டு தன்னைத்தானே கேள்வியைக் கேட்டுக் கொண்டு வாலி ஏதோ ஒரு நம்பிக்கையில் சென்னையை நோக்கிப் பயணப்படுகிறார். பல ஆண்டுகள் சென்னையில் நண்பர்களின சிறு அறையில் தங்கி பாட்டெழுத முயற்சி செய்யும் ஒவ்வொரு முறையும் அவருக்குத் தோல்வியே மிஞ்சுகிறது. திரும்பவும் ஊர் வாசம். நாடகங்கள் மீண்டும் அரங்கேறுகின்றன. அப்படியானதொரு சந்தர்ப்பத்தில் பாட்டு எழுதுவதற்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் வாலி தன்னைப் பற்றிய கர்மமோ ஆணவமோ இல்லாமல் தனக்குப் பாட்டு எழுதும் திறமை இருப்பதாலேயே பாட்டு உலகில் மூன்று தலைமுறைக்கும் மேலாக நிலைத்து நிற்க முடிகிறது என்பதையும் நூலில் கோடிட்டுக் காட்டுகிறார்.

திரைத்துறையில் பாட்டெழுத கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்ட வாலி எம் ஜி ஆர் அவர்களுக்கு எழுதிய பாடல்கள் தனித்துவமானவை. ஆனால் ஒருபோதும் எம்ஜிஆர் அவர்களின் தலையீடோ வரிகளில் மாற்றம் ஏற்படுத்தும் நிகழ்வுகள் செய்யப்பட்டதில்லை என்று கூறும் வாலிக்கு தனது எழுத்தின் மீதான நம்பிக்கையும் கர்வமும் அதிகமாகவே இருக்கின்றது. எந்த ஒரு சூழலிலும் யாரிடமும் தனது பாடல் வரிகளுக்கு மாற்று வரிகளை ஏற்காத வாலிக்கு எம்ஜிஆர் அவர்களின் நட்பும் படங்களும் நல்லதொரு வாய்ப்பை வழங்கி அவரை சிறந்த பாடல் ஆசிரியராக உருமாற்றியது.

பாடல் எழுதத் துவங்கிய ஆரம்ப காலகட்டத்தில் தன்னைப் புறக்கணித்த எம் எஸ் விஸ்வநாதன் பிறகு தனது திறமையை புரிந்து கொண்டு தனக்காக பல தயாரிப்பாளர்களிடம் தூது சென்ற அனுபவங்களையும் தனது பாடலுக்காக பல நாட்கள் காத்திருந்து இசையமைத்த விதத்தையும் நூலில் குறிப்பிடும் வாலி தனது வாழ்வே எம் எஸ் விஸ்வநாதன் கொடுத்த பிச்சை என்பதை ஒவ்வொரு தருணத்திலும் மறவாமல் ஒத்துக் கொள்கிறார்.

மெட்டுக்குப் பாட்டா? பாட்டுக்கு மெட்டா? எது சிறந்தது? என்ற கேள்வி சினிமாத்துறையில் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது. கருத்தாழம் விரிந்த பாடல்கள் கலைநயம் மிக்க காட்சி அமைப்புகளும் ஒன்றிணைய இசைக்கட்டு தேவைப்படுகிறது. எழுதப்படும் பாட்டுக்குள் வைக்கப்படும் பொருளும் அது சார்ந்த புலமையும் மெட்டமைத்து எழுதும்போது நன்கு அமையும் என்பதில் பலருக்கு ஐயப்பாடு ஏற்படுகிறது. ஆனால் கதைக்கேற்ப சூழலும் கதை நிகழ்கிற காலகட்டமும் பாடல் உருவாக்கத்தை முடிவு செய்கின்றன. அப்படி ஒரு சூழலில் மட்டுமே எழுதப்படும் பாடலுக்குள்ளும் சிறந்த கருத்துக்களை புகுத்த முடியும் என்று தனது பாடல்களை வழியே நிரூபித்திருக்கும் வாலி அதை நூலில் பல இடங்களில் குறிப்பிட்டுக் காட்டுகிறார். ஒரு படத்தின் சூழலுக்கு ஏற்ப கால நிலைக்கு ஏற்ப பாடல் எழுதப்படும் போது சூழலில் வழங்கப்படும் மெட்டுக்குப் பாட்டு வரிகள் இடம்பெறுகின்றன. சில சமயங்களில் பாடல் எழுதப்பட்டு மெட்டமைக்கப்படுகிறது. எனவே பாட்டுக்கு மெட்டு மெட்டுக்குப் பாட்டு என்பது அந்தந்த சூழலைப் பொறுத்து அமைகிறது. இரண்டிலும் ஒரு பாடல் ஆசிரியர் மனது வைத்தால் சிறப்பான கருத்துக்களை புகுத்தி விட முடியும் என்று நிரூபிக்கிறார் வாலி.

கலைஞர் மு கருணாநிதியின் வசனத்தை ஆரம்பகாலப் படங்களின் வாயிலாகத் கண்டு கொண்ட வாலி அவரைப் போலவே தானும் வசனம் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தினாலேயே திரைத்துறைக்கு வந்தவர். பட்டுக்கோட்டையின் பாடல்களைக் கேட்ட போதும் கண்ணதாசனின் வரிகளை கவனித்த போதும் தானும் அத்தகு பாடல்களை எழுத முடியும் என்று தன்னை மடை மாற்றிக் கொண்டவர் வாலி.

உண்மையில் வாலி என்ற பெயர் வைக்கப்பட்டதன் காரணம் பாடல் எழுதிய சூழலில் பாடல் ஆசிரியராக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வைக்கப்பட்ட பெயர் அல்ல. ஓவியத்தின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக அன்றைக்கு சிறந்த ஓவியராக விளங்கி வந்த ஓவியர் மாலி அவர்களைப் பார்த்து தானும் அவரைப் போல் வர வேண்டும் என்ற அடிப்படையில் வாலி என்று தனது பெயரை மாற்றிக் கொண்டவர். பல இடங்களில் தான் சந்திக்கும் நபர்களுக்கு பெயர்க்காரணத்தை விளக்குவதே எனக்கு அதிக நேரத்தை எடுத்துக் கொண்டது என்பதையும் குறிப்பிடும் வாலிக்கு இயல்பாகவே சிறப்பான நினைவுத்திறன் அமைந்திருப்பதை நூலின் கட்டுரைகள் விளம்புகின்றன.

சில சமயங்களில் கண்ணதாசன் பாடல்கள் வாலி எழுதியதாகவும் வாலி எழுதிய வரிகள் கண்ணதாசன் எழுதியதாகவும் பொதுவெளியில் உலவப்படும் கருத்துக்கு வாலி பதிலுரைக்கையில் புகழ்பெற்ற கண்ணதாசன் வரிகளுடன் என்னையும் கவனிப்பது எனக்கு பெருமை அளிக்கிறது. ஒரு தலை சிறந்த கவிஞரோடு என்னைத் தொடர்புபடுத்தும் இந்த போக்கு எனக்கு மேலும் மேலும் புகழையே பெற்றுத் தருகிறது என்று நிகழ்வின் கோணத்தை தனக்குச் சாதகமாக மாற்றிக் குறிப்பிடுகிறார்.

நூலில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடகர்கள் 50க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் தான் எழுதிய காலத்திலும் அதற்கு முன் தோன்றிய தமிழ் பாடல் ஆசிரியர்கள் பற்றியும் தனக்குப் பின் எழுத வந்த கவிஞர்கள் பற்றியும் நிறைய இடங்களில் புகழ்ந்து எழுதும் வாலி அவர்களின் ஒவ்வொருவரின் தனித்திறமைகளையும் வியந்து போற்றுகிறார். எந்தவொரு இடத்திலும் சூழலிலும் அவர்கள் மீதான குறைகளையோ காழ்ப்புணர்ச்சியையோ வாலி தன் நினைவுத்திறனிலிருந்து வெளிப்படுத்தவேயில்லை.

தனது வாழ்வின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாய் இருக்கும் திரைத்துறை சார்ந்த ஒவ்வொருவரையும் முழுமையாக இந்த நூலில் குறிப்பிடும் வாலி எந்த ஒரு இடத்திலும் யார் மீதும் ஒரு சிறு குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. அவர் காணும் ஒவ்வொரு மனிதரிடத்தும் நிறைந்து காணப்படும் நல்ல குணங்களையே நூலில் நமக்கு அறிமுகம் செய்கிறார். அந்த வகையில் ஒவ்வொரு மனிதரிடமிருந்தும் நல்ல நல்ல பண்புகளை அவர் கற்றுக்கொண்டு புராணகால வாலியின் குணத்தை பெற்றுக் கொள்கிறார்.

வளையும் மூங்கில் தான் வேந்தனைச் சுமக்கும் பல்லாக்காகிறது. வளையும் வில்தான் அம்பின் வேகத்தை அதிகப்படுத்தி இலக்கை இலகுவாக எய்துகிறது. வளையாபதிகளுக்கு இலக்கியத்தில் மதிப்பிருக்கலாம். வளையும் பதிகளையே வையம் மதித்து வணங்குகிறது. தன் கூவலினால் தான் கிழக்கு வெளுக்குகிறது என சேவல் என்னுமாயின் வானம் மட்டுமல்ல வையம் கூட விலா நோவச் சிரிக்கும். உண்மையான ஆன்ம பலம் ஒரு மனிதனின் அடக்கத்தில் இருந்து தான் உதிக்கிறது. அடக்கம் தான் மெய்ஞானத்தை கற்பிக்கும் ஆசான் என்பதில் உறுதியாக இருக்கும் வாலி எந்த ஒரு இடத்திலும் தனது பெருமைகளைபா புகழ்ந்து பேசியதில்லை. அதேசமயம் தனது புலமையை எந்த ஒரு இடத்திலும் அடமானம் வைத்ததும் இல்லை என்பதை நூலில் பல இடங்களில் அறுதியிடுகிறார்.

“”என் வாழ்வும் வளமும் பிறரது வாழ்த்துக்களால் தான் நான் பெற்றேனே தவிர என் திறமை புலமை என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான். என்னுடைய சினிமாத் துறையில் பிற கவிஞர்களின் வருகை பற்றியோ அல்லது அவர்களின் ஆற்றல் பற்றியோ எந்த நாளும் நான் விமர்சித்ததில்லை. உண்மையைச் சொல்லப்போனால் அன்றைய கண்ணதாசனிலிருந்து இன்றைய காளிதாசன் வரை என்னிடம் அன்பு பாராட்டாத கவிஞரே இல்லை. என்னுடைய வளர்ச்சி என்பது எவருடைய வளர்ச்சியைக் கண்டும் எனக்கு எள்ளளவும் காழ்ப்புணர்ச்சி இல்லை. எல்லோருக்கும் இறைவன் தன் திருவுள்ளப்படி படியளக்கிறான். நான் யார் குறுக்கே புகுந்து கூடாது என்று சொல்ல? அப்படிப்பட்ட கோமாளி அல்ல நான்”” என்பது இந்த நூலில் வாலி அவர்கள் கூறும் கருத்துக்களின் சாரமாக அமைகிறது.

நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசத்தைக் குறிப்பிடும் வாலி தனது வாழ்வில் நடந்த முக்கியமான சம்பவத்தையே அதற்கு எடுத்துக்காட்டாக விளக்குகிறார். இறை பக்தியும் கடவுள் பக்தியும் அதிகம் இருக்கும் வாலிக்கு தனது திருமண நிகழ்வை உடனடியாக நடத்தவேண்டிய சூழலில் திருப்பதி செல்ல நேர்கையில் நடைபெற்ற மூன்று இடையூறுகளைக் குறிப்பிடும்போது அவற்றை சகுனம் என்று பார்த்து புறந்தள்ளி நின்றிருந்தால் தனது வாழ்வு என்றோ முடிந்திருக்கும். ஆனால் அவற்றையெல்லாம் நம்பாமல் தொடர்ந்து பயணித்து தனது திருமண வாழ்வை அமைத்துக் கொண்டு வாலி சகுனத்திற்கும் இறை நம்பிக்கைக்கும் உள்ள வேறுபாட்டை முழுமையாக விளக்குகிறார்.

திருப்பதிக்கு காரில் செல்லும் போது முதலில் ஒரு ஆடு குறுக்கே வந்து காரில் அடிபடுகிறது. சகுனத் தடை என்று ஊருக்குத் திரும்பலாம் என்று நண்பர் சொல்ல வேண்டாம் நாம் திருப்பதிக்குச் செல்வோம் என்று தொடர்ந்து வாலி கூறிச் செல்ல இன்னொரு இடத்தில் சாலையின் குறுக்கே சிறு குழந்தை காரில் அடிபட்டு கார் பள்ளத்தில் தலைக்குப்புற விழுகிறது. அப்போதும் சகுனம் பார்க்கும் நண்பர் இது உனது திருமணம் குறித்த நிகழ்விற்கு பெரிதும் இடையூறாக இருக்கும் என்று அஞ்சி நாம் திருப்பதிக்கு செல்ல நேருகையில் நடக்கும் செயல்கள் சகுனத் தடையாகத் தெரிகிறது நாம் இன்னொரு நாள் செல்வோம் என்று மீண்டும் ஊருக்குத் திரும்ப நினைக்கிறார். ஆனால் அப்பொழுதும் வாலி நாம் நிச்சயமாக திருப்பதிக்குச் செல்ல வேண்டும் என்று தொடர்ந்து பயணிக்கிறார். குறிப்பிட்ட நாளில் அவரது திருமணம் ஒரு வாரத்திற்குள் திருப்பதியில் நடக்க வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்படுகிறது.

ஆனால் அங்கு மூன்று மாதங்களுக்கு முன்பே அலுவலகங்கள் முன்பதிவு மூலம் நிரம்ப ஆரம்பித்து விடும். அப்படி ஒரு சூழலில் அவருக்கு குறிப்பிட்ட நாளில் இடம் கிடைக்குமா என்று தெரியாத சூழலில் திருப்பதிக்குச் செல்கிறார்கள் ஆனால் அவர் விரும்பிய அதே நாள் அங்கே எந்த திருமண நிகழ்வும் முன்பதிவு செய்யப்படாமல் காலியாக இருக்கிறது. இதுவே இறைவன் திருவுள்ளம் என்று மகிழும் வாலி நமது வாழ்வில் ஏற்படும் இடையூறுகளை எண்ணிக் கலங்கி நின்று விட்டால் எதிர்காலமே திசை மாறிப் போகும் என்பதை விளக்கிச் செல்கிறார். இதன்மூலம் மூடநம்பிக்கையின் மீது சரியான சவுக்கடியும் தரும் வாலி நிகழ்வுகளைக் கூர்ந்து கவனிப்பவர்க்கும் தன் மீது நம்பிக்கை வைப்பவர்களுக்கும் என்றும் இறையருளும் துணை நிற்கும் என்பதையும் எடுத்துரைக்கிறார்.

திரைப்பாடல்கள், கவியரங்க மேடைகள், பக்தித் தொடர் கதைகள், கவிதைத் தொகுப்புகள், வசனங்கள் எழுதிய நினைவுகள் என தனது வாழ்க்கைப் பாதையை முழுமையாக நமக்கு அறிமுகம் செய்து அவருடனேயே நம்மையும் உடனழைத்துச் சென்று திறந்த புத்தகம் என அவரது வாழ்வை இந்த நூற்றாண்டில் எழுதிச்செல்லும் வாலியின் எழுத்து எப்போதும் அவரது பாடல்களைப் போல இனிமையாகவும் இளமையாகவும் அன்பு கொண்டும் கருணை கொண்டும் நல்லெண்ணங்களையும் நல்லனவற்றையும் நமக்கு அறியத் தருகிறது. தனக்கான பாதையமைத்துக் கொடுத்த ஒவ்வொரு மனிதர்களையும் நினைவில் நிறுத்துவதன் அவசியத்தையும் நமக்குக் கற்றுத் தருகிறார் வாலி.

நூலின் விவரங்கள்:

நூல்: நானும் இந்த நூற்றாண்டும் (Nanum Intha Nootraandum)
ஆசிரியர்: கவிஞர் வாலி
வெளியீடு: வாலி பதிப்பகம், சென்னை
பதிப்பு: டிசம்பர் 2021
பக்கம்: 592
விலை: ₹550

எழுதியவர் : 

இளையவன் சிவா

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *