Short Story: Kavin Thanish and others (சிறுகதை: கவின் தானீஷ் மற்றும் பலர்)

சிறுகதை: கவின், தானீஷ் மற்றும் பலர் – பூ. கீதா சுந்தர் 

” டேய், டேய்…பால ஒழுங்கா புடிடா ”

” ஹே… சூப்பர்.. சூப்பர் டா, சிக்சர் ”

” போச்சு, விட்டாண்டா ”

ரோட்டில் விளையாடியவர்களின் விளையாட்டு கத்தல் வார்த்தைகள் கவின் காதில் சங்கீதமாக கேட்டது.

” அப்பா, ரோட்டுல பக்கத்து வீட்டுப் பசங்க எல்லாம் கிரிக்கெட் விளையாடறாங்க, நானும் போகட்டுமாப்பா? ” என்று கேட்டான் கவின்.

கவின் ஆறாம் வகுப்பு படிக்கிறான். இந்த விடுமுறை காலத்தில் பள்ளிகள் திறக்கவில்லை என்பது குழந்தைகளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி தான். காலையில் நல்ல தூக்கத்தில் எழுந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆறிப்போன டப்பா சோறு இல்லை, வீட்டுப் பாடம் இல்லை, ஆசிரியர்களின் கடு கடு சொற்கள் இல்லை, புராஜக்ட், டெஸ்ட் என்று எதுவும் இல்லை. எல்லாம் நன்றாக தான் இருக்கிறது.

ஆனால் விளையாட்டு?

அங்கே தான் பிரச்சனையே, எங்கே விளையாடுவது? யாருடன் விளையாடுவது? உட்கார்ந்த இடத்திலேயே எவ்வளவு
நேரம் தான் ஃபோன் மற்றும் டி.வி பார்ப்பது?

கவின் இருப்பது வாடகை வீட்டில் முதல் மாடியில், அது அடுக்கு மாடிக் குடியிருப்பு இல்லை. எனவே ஓரளவுக்கு வீட்டுக்கு வெளியே நடப்பவைத் தெரியும்.
தெருவில் இருக்கும் குழந்தைகள் சேர்ந்து விளையாடும் போது அவர்கள் போடும் கூச்சல், சத்தம் கேட்டதும் அதற்கு மேல் அவனால் வீட்டில் இருக்க முடியவில்லை.

எனவே தன் அப்பாவிடம்,
” தானும் விளையாடப் போகலாமா ” என்று கேட்டான்.

” இல்லப்பா, வேணாம்…வேணாம், ரோட்டுல வண்டிங்க தாறுமாறா ஓட்டறாங்க, நீ விளையாட்டு போக்குல, கவனிக்காம இருப்ப, அப்புறம் பசங்க யாராவது பந்து அடிச்சி எதையாவது உடைச்சிட்டா உம்மேல பழிப் போட்டுடுவாங்க, அவங்க அப்பா அம்மாவோட தேவை இல்லாத பிரச்சனை வரும், எதுக்கு இதெல்லாம், வீட்டுலயே எதாவது விளையாடு ”

கவின் முகம் சுருங்கி விட்டது, கோபத்தில் கண்களில் நீர் முட்டியது.

” ஆமா எப்ப பாரு, வீட்டுல விளையாடு, வீட்டுல விளையாடுன்னு சொல்றீங்க என்ன தான் விளையாடறது? யார் கூட விளையாடறது ? என்று பேசிக் கொண்டு இருக்கும் போதே அழுகை வந்து விட்டது.

கதவுத் தட்டும் சத்தம் கேட்டது. திறந்த போது, கவினின் பள்ளி நண்பன் தானிஷ் வந்து இருந்தான்.

” உள்ள வா தானிஷ் ” என்று கதவைத் திறந்து விட்டு விசும்பினான்.

” டேய், என்னடா ஆச்சி? ஏன் அழுவுற ? ”

” வெளிய பக்கத்து வீட்டுப் பசங்க எல்லாரும் கிரிக்கெட் விளையாடறாங்க, நானும் போறேன்னு கேட்டா எங்கப்பா அனுப்ப மாட்றாரு, ஆமா, உன்ன மட்டும் எப்டிடா உங்க வீட்ல விட்டாங்க? நினைச்சா சைக்கிள் எடுத்துட்டு எல்லா ஃபிரண்ட்ஸ் வீட்டுக்கு போற ? ”

” இன்னைக்கு நான் சைக்கிள்ல வரல, எங்க அப்பா தாண்டா கொண்டு வந்து விட்டாரு. சரி இரு, அங்கிள்கிட்ட நான் போய் பெர்மிஷன் கேக்கறேன் ”

” அங்கிள், நாங்க ரொம்ப கவனமா விளையாடறோம், அனுப்புங்க அங்கிள்.. ப்ளீஸ் அங்கிள் ”

” சரி, போங்க, ஆனா சீக்கிரமா வந்துடுங்க, முன்ன பின்ன வண்டி வருதான்னு பாத்து கவனமா விளையாடுங்க ”

மிக உற்சாகத்தோடு கிரிக்கெட் மட்டையும் பந்தும் எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டனர்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆனது. அதிலும் அதிக நேரம் விளையாட்டில் விதிமுறை மற்றும் மீறல்கள் பற்றிய விவாதம், வாக்குவாதம் தான் நடந்துக் கொண்டு இருந்ததே தவிர, முழுமையாக விளையாடின பாடில்லை. ஆனாலும் ஆட்டம் தொடர்ந்தது..

ஒருக் கட்டத்தில் விஷ்வா பந்தை வேகமாக அடிக்க,

பந்து ‘சொய்ங்’ என்று பறந்தது .. அனைவரும் அண்ணாந்து பார்க்க,
பல்பு உடைந்த சத்தம் மட்டும் கேட்டது.

” டேய்.. டேய் .. டேய், இப்டி வாசல்ல இருக்கற பல்ப ஒடைச்சிட்டீங்களேடா…” என்று பக்கத்து வீட்டுத் தாத்தா கத்திக் கொண்டே வந்தார்.

” இதுக்கு தாண்டா, இங்க விளையாடாதீங்க ன்னு தலத்தலயா அடிச்சிக்கறேன்..”

” டேய் விஷ்வா, கூப்பிடு உங்க அம்மாவ, நான் அவங்ககிட்ட பேசிக்கிறேன் ”

” தாத்தா, தாத்தா வேணாம் தாத்தா, நாங்க எல்லாரும் ஏற்கனவே வீட்டுல நிறைய, அட்வைஸ், திட்டு எல்லாம் வாங்கிட்டு தான் விளையாட வந்து இருக்கோம்.. இப்ப நீங்க போய் சொன்னா அவ்ளோ தான் இனிமே எப்பவுமே விளையாட விட மாட்டாங்க, ப்ளீஸ் தாத்தா.. ”

” டேய், அதெல்லாம் முடியாது, மத்தியான நேரம் கொஞ்சமாவது கண்ணு அசற முடியுதா, ஒரே கூச்சலு, சத்தம்… நானும் எத்தன தடவ தான் சொல்றது… வா வா உங்க அம்மாவ கூப்புடு, இன்னைக்கு இதுக்கு ஒரு முடிவு கட்றேன் ” என்று தாத்தா ஒரே சத்தம்.

மற்ற பசங்களும் தொடர்ந்து விளையாட முடியாமல் ஏமாற்றத்துடன் சோர்ந்து போய் நின்று கொண்டு இருந்தார்.

” தாத்தா நான் ஒரு தடவைக் கூட இன்னும் பேட்டிங் பண்ணல தெரியுமா.. பந்து கொடுங்க தாத்தா, நாங்க விளையாடனும், இனிமே பல்புல அடிக்காம கவனமா இருக்கோம் தாத்தா ” என்று
கவின் ஒருப் பக்கம் தாத்தாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

‘ ஹைய்யயோ, இவன் விட்டா அழுதுடுவான் போல இருக்கே ” என்று கவினைப் பார்த்தபடி இருந்தான் தானிஷ்.

” ஏங்க, கடைக்கு போய் வாங்கன்னு எவ்ளோ நேரமா கேட்டுக்கிட்டு இருக்கேன், நீங்க என்னடான்னா பையக் கூட எடுக்காம இங்க வந்து பசங்க கூட விளையாடிட்டு இருக்கீங்க.. போங்க முதல்ல, என்று பையைக் கையில் கொடுத்து விட்டு போனார் தாத்தாவின் மனைவி. பின்னர் ஏதோ நினைவுக்கு வந்தவராக திரும்ப வந்து,

” ஆங், அப்டியே வாசலுக்கு ஒரு பல்பு வாங்கிட்டு வந்து போடுங்க.. பல்பு ப்யூஸ் ஆகி ஒரு வாரம் ஆகுது.. வாங்கிட்டு வரச் சொல்லி எத்தன தடவ தான் ஞாபகப்படுத்தறது ” என்று புலம்பிக் கொண்டே சென்றார்.

அவ்வளவு தான் பசங்க மொத்த பேரும் அவர் பக்கம் திரும்பி முறைக்க, அந்த இடத்தில் தாத்தா ப்யூஸ் போன பல்பாகி போனார். ஆனாலும், கெத்தை விட்டுக் கொடுக்காமல்..

” போங்க, போங்க எல்லாரும் அவங்க அவங்க வீட்டுக்கு போங்க ” என்று ஒரு அதட்டல் குரல் கொடுத்து விட்டுப் பந்தை வீசி விட்டுப் போனார் தாத்தா.

பசங்க எல்லாரும் விஷ்வா வீட்டு வாசலில் சோகமாக உட்கார்ந்து இருந்தார்கள்.

” வீட்டுல திட்டு திட்டா வாங்கி, அப்பறம் பெர்மிஷன் வாங்கி விளையாட வந்தால், இந்த தாத்தா வேற… ”
என்று புலம்பினான் கவின்.

” டேய் கவின், உங்க வீட்டு மொட்டை மாடியில விளையாடலாமா? ”

” கிரிக்கெட்டா டா, அங்க எப்டி டா விளையாடறது ?”

” ரொம்ப வேகமா அடிக்காம, டொக்கு வச்சி
விளையாடலாம்டா ”

சரி, என்று அனைவரும் கவின் வீட்டு மாடிக்குச் சென்றனர்.

மீண்டும் விதிமுறைகள் பேசப்பட்டு, விளையாட ஆரம்பித்தனர். மணி மதியம் மூன்று ஆகி விட்டது.

விளையாட்டு ஆரம்பித்து கால் மணி நேரம் தான ஆகி இருக்கும், அதற்குள் வீட்டு ஹவுஸ் ஓனர் ஆண்டி மாடிக்கு வந்தார்.

” கவின், இங்க எதுக்கு டா கிரிக்கெட் விளையாடறீங்க, கீழே டொக்கு, டொக்குன்னு ஒரே சத்தம் கேக்குது ”

” ஆண்டி, டொக்கு வச்சி விளையாடறோம், அதான் டொக்கு டொக்குன்னு கேக்குது ” என்றான் தானிஷ். அனைவரும் சிரித்து விட்டனர்.

கடுப்பாகி போன ஆண்டி,
” பாப்பா ஊருல இருந்து வந்து இருக்கான், தூங்கிட்டு இருக்கான், இப்புடி சத்தம் போட்டா பாதித் தூக்கத்துல எழுத்து அழுவான் ”

” இல்ல ஆண்டி நாங்க சத்தம் போடாம விளையாடறோம், ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஸ் ஆண்டி ” என்று கெஞ்சினான் கவின்.

‘ ம்ஹும், இவன் இன்னைக்கி அழாம விட மாட்டான் போல இருக்கே ” என்று மீண்டும் தோன்றியது தானிஷ்க்கு.

சிறிது நேரத்தில் ,
கவின் அம்மா மாடிக்கு காய்ந்த துணிகளை எடுக்க வந்தார். ஹவுஸ் ஓனர் ஆண்டி கவின் மற்றும் பசங்களிடம் பேசிக் கொண்டு இருந்ததை பார்த்து விட்டு,

” என்ன ஆச்சுங்க ? என்றுக் கேட்டார்.

” ஒன்னும் இல்லங்க, பசங்க இங்க வந்து விளையாடிக்கிட்டு இருந்தாங்க, எல்லாரும் இங்க வந்து விளையாடினா அதேப் பழக்கமாயிடுங்க, அதுவும் இல்லாம கீழ ஒரே சத்தம் வருதுன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன் ” என்றார்.

கொஞ்சம் குழையல் பேச்சு தான் ஏனெனில் அடிக்கடி கவின் அம்மாவிடம் குழம்பு, கொத்தமல்லி வாங்க முடியாதே.

” கவின் எல்லாரையும் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போ, நான் வரேன் ” என்று கூறி வீட்டு

” அப்புறம் உங்க பேரக்குழந்தை எங்கம்மா? ஆளக் காணோம் ” என்று கேட்டார்.

” கரண்டு போய்டுச்சி இல்ல, ஃபேன் இல்லாம தூங்க மாட்டான், அதான் பக்கத்துத் தெருவுல இருக்கற எங்க தங்கச்சி வீட்டுக்கு அவன் அம்மா தூக்கிட்டுப் போயிருக்கா, அங்க இன்வெட்டர் இருக்கு, கரண்டு போனாலும் பிரச்சனை இல்லை ” என்றார்.

மொத்த பசங்களும்
” ஷாக் “ஆகி விட்டனர்.

“இந்த பெரியவங்களுக்கு இன்னைக்கு என்னதான் ஆச்சு, இன்னைக்கு ஒரே பொய் மூட்டமாக இருக்கிறதே ” என்று தானிஷ் டயலாக் அடிக்க,

” ஆண்டி, பாப்பா வீட்டுல தூங்குதுன்னு சொன்னீங்க ” என்று கவின் கேட்கவும் ஹவுஸ் ஓனர் ஆண்டிக்கு முகம் கடுகியது.

கவின் அம்மாவுக்கு விஷயம் புரிந்தது, ஆனாலும்..

“டேய், சும்மா வாயாடிகிட்டே இருக்காம வா, கீழ நம்ம வீட்டுல போய் விளையாடலாம் ”
என்று கவின் தலையில் ஒரு தட்டுத் தட்டி, அனைவரையும் அழைத்துச் சென்றார் அம்மா.

அனைவருக்கும் கவின் அம்மா ஸ்நாக்ஸ் கொடுத்தார். பின்

” ஏண்டா, இப்டி அங்க இங்கன்னு அலையறீங்க, வீட்டுலயே உக்காந்து விளையாடலாம் இல்ல ”

” ஆண்டி நீங்களுமா ” என்றான் விஷ்வா.

” சரி சரி, அதெல்லாம் விடுங்க, நம்ம இங்கேயே ஏதாவது விளையாடலாமா ? உங்களுக்கு ஓ கே வா ? ”

” சரிங்க ஆண்டி, விளையாடலாம் ”

“ம்..என்ன
விளையாடலாம்…கேரம், செஸ், ராஜா ராணி, பல்லாங்குழி ”

எதுக் கேட்டாலும் பசங்க ‘ நோ ‘ சொன்னார்கள்.

” ஐந்து கார்டு சீட்டு விளையாடலாமா? ”

” ஓ.கே, ஓ. கே ஆண்டி ”
பசங்க குஷியாகி விட்டார்கள்.

தொடர்ந்து தானிஷ் வெற்றிப் பெற்றுக் கொண்டே வந்தான்..அனைவருக்கும் சோர்வாகி போனது. விளையாட்டு போதும் என்று அனைவரும் எழுந்தனர்.

கவின் அம்மா கார்டுகளை எடுத்து அடுக்கி வைத்தார்.

” ஆண்டி, இந்தாங்க, இதையும் எடுத்து வைங்க ” என்று கூறி தனக்கு அடியில் மறைத்து வைத்து இருந்த ஐந்தாறு கார்டுகளை எடுத்துக் கொடுத்தான் தானிஷ்.

” அடே… டேய், இப்படி தான் நீ தொடர்ந்து ஜெயிச்சியா ”
என்றபடி அனைவரும் அவனை நோக்கி பாய..

” ஏன் ஆண்டி, பசங்க விளையாடினாலே பெரியவங்களுக்கு பிடிக்க மாட்டேங்குது ? ஏன் உங்க சின்ன வயசுல எல்லாம் நீங்கல்லாம் விளையாடினதே இல்லையா? ”

” அந்த தாத்தா என்னடான்னா ப்யூஸ் போன பல்புக்காக எங்கள விளையாட விடாம பண்றாங்க.. உங்க ஹவுஸ் ஓனர் ஆண்டி, பாப்பாவே இங்க இல்ல, ஆனாலும் பாப்பா தூங்குதுன்னு சொல்லி விளையாட விடல..ஏன் ஆண்டி இப்டி பண்றாங்க”

” நீங்க கொஞ்சம் பரவாயில்லை, நீங்க எப்பவும் கவின் கூட விளையாடறீங்க, எங்க வீட்டுல அது கூட இல்ல ” என்று கூறினான் பிரணவ்.

டேய் எங்கம்மா அவங்க சின்ன வயசுக் கதை நிறைய சொல்லுவாங்க டா, கேக்கவே ஜாலியா இருக்கும் ” என்றான் கவின்.

” ஆன்டி, எங்களுக்கும் சொல்லுங்க ஆன்டி ”

” ஹ்ம்.. அதெல்லாம் ஒரு காலம் டா.. நீங்க படிப்புக்கு இடையில கொஞ்சம் விளையாடறீங்க… ஆனா நாங்க விளையாட்டுக்கு இடையில கொஞ்சம் படிச்சோம்..”

” எங்க ஸ்கூல் வீட்டுல இருந்து நடக்கற தூரம் தான் ..
‘ டக்கு ‘ன்னு வீடு வந்துடும்,
‘ ட்க்கு ‘ன்னு ஸ்கூல் வந்துடும்.. ஸ்கூல்ல முதல் பெல்லு அடிக்கிற சத்தம் கேட்டப்புறம் தான் வீட்டுல இருந்து கிளம்புவோம்… எங்க வீட்டுல பெரியவங்க, சின்னவங்கன்னு மொத்தமா இருபத்தைந்து பேருக்கு மேல இருப்போம்.. ஒன்னாவது படிக்கிறவங்கள இருந்து பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிற எல்லா வயசு பசங்களும் எங்க வீட்டுல இருந்தோம் ”

” அடிக்கடி எங்க வீட்டுல புதுசா ஒரு குட்டி பாப்பா பொறக்கும்.. அத்தை, சித்தி, பெரிம்மான்னு, யாருக்காவது பாப்பா பொறக்கும்.. ”

” நாங்க ஸ்கூல்ல இருந்து வந்தா மொதல்ல பாப்பாவை தூக்கி கொஞ்சிட்டு விளையாடிட்டு, அப்புறம் நாங்க எல்லாரும் விளையாட போவோம்… எங்க வீட்டு வாசல்ல இருந்தே பெரிய கிரவுண்டு மாதிரி தான் ஆரம்பிக்கும்… ”

” எங்க அண்ணாங்க, மாமாங்க எல்லாம், கில்லி, பம்பரம், கோலி, பட்டம் விடறதுன்னு விளையாடுவாங்க, எங்க கூட படிக்கிற பொண்ணுங்களும் எங்க வீட்டுக் கிட்ட தான் இருப்பாங்க, அவங்களோட சேர்ந்து, நாங்க ஓடி பிடிச்சு விளையாடறது, நொண்டி, கண்ணாமூச்சி, அப்புறம் ஒத்த கால்ல நொண்டி கிட்டே போய் தொட்டு அவுட் பண்றது.. இப்படி எதாவது மாத்தி மாத்தி விளையாடுவோம்.. ”

” எனக்கு எப்பவும் எங்க அண்ணங்க விளையாடற விளையாட்டு தான் புடிக்கும்.. அவங்க நண்பர்கள் கூட விளையாட புடிக்கும், ஆனா என்னை அவங்க கூட சேத்துக்க மாட்டாங்க… எங்க பெரிய அண்ணனுக்கு எம்மேல ரொம்ப பாசம் .. அது சொல்லி என்னையும் ஆட்டத்துல ஒப்புச் சப்பானா சேத்துக்குவாங்க…”

கில்லி புல்லுக் கட்டைய அடிச்சி வேகமா பறக்க விடறது, பம்பரம் விட்டு அது சுத்தும்போது, உள்ளங்கையில வச்சிக்கிறது… அது செமையா கூசும்… ஆனா நல்லா இருக்கும்.. ஒரு கோலிய நடுவிரல் வச்சு ஒரு கண்ணு மூடிக்கிட்டு குறிப்பாத்து அடிச்சிட்டா… ஹைய்யோ, அவ்ளோ சந்தோஷமா இருக்கும்.. ”

” ஆனா பெரிய அண்ணாங்க கூட விளையாடறத எங்க ஆயா பாத்துட்டாங்கன்னா அவ்ளோ தான்… வீட்டுக்கு இழுத்துட்டு போய் முட்டிக்கு கீழ கால்ல கட்டையால அடி விழும்.. ”

‘ பையனுங்க கூட விளையாடுவியா ‘ ன்னு கேட்டு செம அடி விழும்.. நான் அப்ப மூணாவது தான் படிக்கிறேன்.. அப்ப எதுக்கு அடிச்சாங்கன்னு எனக்கு தெரியாது, ஆனா நான் எப்படியாவது டிமிக்கி கொடுத்துட்டு மறுபடியும் விளையாட போய்டுவேன்..”

” எங்க தெருவுல இருக்கற கோவில்ல.. திருவிழா நடக்கும் போது, சாமிக்கு முன்னாடி நாதஸ்வரம் ஊதிக்கிட்டு போவாங்க, அப்ப நானு, எங்க அண்ணங்க, பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து வேடிக்கை பாக்க போவோம்… ”

” அப்போ, ஒருத்தரு கையில உப்பு, மிளகாய் தூள் போட்டு மாங்கா, ஒருத்தரு கையில மந்தாரை இலையில வச்ச ஊறுக்காய் இதெல்லாம் வச்சிக்கிட்டு, நாதஸ்வர காரங்களுக்கு பக்கத்துல ஓரமா போய், தொட்டு தொட்டு நாக்குல வச்சி வச்சி சாப்பிட்டுகிட்டே வருவோம்.. நாதஸ்வரம் ஊதறவருக்கு வாயில எச்சில் ஒழுக ஆரம்பிச்சிடும், ஊதவே வராது, ‘ புர்ரு, புர்ரு’ சத்தம் தான் வரும்.. ” என்று சொல்லும் போது கவின் அம்மாவிற்கு அப்படி ஓரு சிரிப்பு மலர்ந்தது. சிரித்துக் கொண்டே பசங்கள பார்க்க,

தானீஷ் வாயிலிருந்து எச்சில் ஒழுகியது.. கவின் தொண்டையில் எச்சைக் கூட்டி விழுங்க, மற்ற பிள்ளைகள் ‘ ஆ ‘ என்று வாய் பிளந்து இருக்க, கொஞ்ச நேரம் சைலண்ட்.

” டேய், என்னடா இது ” என்று
தானீஷை கவின் அம்மா ஒரு உலுக்கு உலுக்க, கையால் வையைத் துடைத்துக் கொண்ட தானீஷ்,

” ஆண்டி, செமையா போகுது உங்க சின்ன வயசுக் கதை… எங்களுக்கு இப்பவே இதெல்லாம் சாப்டனும் போல இருக்கு .. ” என்று உச்சுக் கொட்ட,

இன்னும் கதை இருக்கா ஆண்டி ?” என்று பிரணவ் ஆவலுடன் கேட்டான்.

” அதுக்கு என்ன குறைச்சல்,நிறைய இருக்கு, மீதியை நாளைக்கு சொல்றேன், இன்னைக்கு ரொம்ப டைம் ஆயிடுச்சி, உங்க வீட்டுல தேடுவாங்க இல்ல.. இப்போ போய்ட்டு நாளைக்கு வாங்க ”
என்று அனைவரையும் வழி அனுப்பி வைத்தார் கவின் அம்மா.

மறுநாள், எல்லாரும் கவின் வீட்டுல் ஆஜர் ஆகி விட்டனர்.

” இன்னைக்கு என்னடா விளையாடறது ? வெளிய விளையாடனா தாத்தா விட மாட்டாரு, மாடியில வீட்டுக்கார ஆன்டி விட மாட்டாங்க, இப்ப என்னடா பண்றது ? ”

” நீங்க எல்லாரும் எங்கூட வாங்க தாத்தாகிட்ட நான் சொல்லி விடறேன் ” எனறு அனைவரையும் அழைத்துச் சென்றார் கவின் அம்மா.

காலிங் பெல் சத்தம் கேட்டு கதவை திறந்து வெளியே வந்தார் தாத்தா. தாத்தாவிற்கு ஒரே ஒரு பிள்ளை, மருமகள் இரண்டு பேத்திகளோடு ஒரே குடித்தனம். ரிடையர்டு ஹெட் மாஸ்டர். உள்ளே இருந்து பாட்டியும் வந்தார். அருகில் இரண்டு பேத்திகளும் நின்றனர்.

” வாம்மா, வா உள்ள வா, என்று உள்ளே அழைத்தார்.

” ஒன்னும் இல்லப்பா, பசங்க வீட்டுல இருந்து, இருந்து உடம்பு விழுது, ஸ்கூல் வேற இல்ல, அதோட அவங்களுக்கும் போரடிக்கிது, விளையாட ஆசப்படறாங்க… சின்ன பிள்ளைங்க வேற என்ன கேப்பாங்க, நம்ம ஓரளவுக்கு மேல சொல்ல முடியல. அதனால் ரோட்டுல பசங்க விளையாடட்டும், உங்களுக்கு எதாவது தொந்தரவா இருந்தா எங்கிட்ட சொல்லுங்க, நான் அவங்களுக்கு எடுத்து சொல்றேன், அத விட்டு மொத்தமா விளையாட வரக் கூடாதுன்னு சொன்னா எப்படிப்பா ?”

” அட நீ வேறம்மா, அவரு அதுக்காகல்லாம் இப்படி பண்ணல .. எங்க வீட்டுல ரெண்டு பேத்திங்க இருக்கு இல்ல அதான் .. அந்த பசங்க விளையாடினா.. எங்க வீட்டுப் பொண்ணுங்க, வாசல்ல போய் டென்னிஸ் விளையாட முடியல அதான், இப்படி எதாவது கிறுக்குத் தனமா பண்றாரு..இத்தனைக்கும் ஒன்னு மூணாவது, இன்னொன்னு நாலாவது படிக்கிதுங்க.. இதுக்கு தான் இவரு இந்த அலம்பல் பண்றாரு… ”

” என்னம்மா இப்படி
சொல்றீங்க, அப்பா ஒரு ரிடையர்டு ஸ்கூல் ஹெட் மாஸ்டர்.. உங்க பிள்ளை, மருமகள் ரெண்டு பேரும் டாக்டருக்கு படிச்சவங்க, இந்த காலத்துலயும் இப்படி நடந்துக்கறது … பாவம்மா பசங்க.. ”

” அப்பல்லாம் எங்க ஆயா கூட, என்னை பையனுங்களோட விளையாடும்போது அடிச்சாங்க, அப்போ அது ஏன்னு தெரியாது..ஆனாலும் நாங்க விளையாடாம பேசாம இல்ல, இப்ப… ஊருக்கு போனா கூட அந்த அண்ணனுங்க கூட பேசறோம் … பழகறோம்… சின்ன வயசு நினைவுகள பகிர்ந்துக்கறோம் ”

” ஆனா, பொம்பளை பிள்ளைகளுக்கு .. பாதுக்காப்புன்னு நெனைச்சி அவங்க இயல்பையும் கெடுத்து, ஆம்பள பசங்கன்றதுக்காக சின்ன பசங்கன்னு கூட பாக்காம அவங்களையும் முடக்கி போடறது கொஞ்சம் கூட சரி இல்லப்பா “.

” இப்ப அவங்க எல்லாரும் சகஜமா பழகினா தான, வளரும் போதும் நட்போட வளருவாங்க, பாக்கும்போது சக மனுஷங்களா பாத்து பேசுவாங்க..”

” நாம தான் பிஞ்சு மனசுல நஞ்ச வைக்கிறோம்..”

” அம்மா தயவு செய்து அப்பாகிட்ட எடுத்து சொல்லுங்க, பசங்க ரோட்டுல விளையாடாம வேற எங்க போறது? ”

இதை எல்லாம் ஓரமாக நின்று கேட்டுக் கொண்டு இருந்தனர் மருமகளும் பேத்திகளும் …சில நொடிகளில், சின்னவ தாத்தாவிடம் போய்,

” தாத்தா, எங்க எல்லாரையும்
விளையாட விடுங்க, பாவம் கவின் அண்ணா, வேற அண்ணாங்க எல்லாரும் உங்களால தான் நேத்துக் கூட விளையாடாம போய்ட்டாங்க.. ”
என்று தாத்தாவின் கை வைத்த பனியன் போட்ட தோளை உலுக்க,

” சரி, சரி, சரி… எல்லாரும் ஒண்ணா விளையாடுங்கம்மா, நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்.. அப்பறம் உங்க பாட்டி எனக்கு ஒரு வாய் காப்பி கூட தர மாட்டா.. ” என்று சொல்லவும் அனைவருக்கும் சிரிப்பு வந்து விட்டது.

கவின் அம்மா விடைப் பெற்றுக் கொண்டு கிளம்புவதற்குள்..

கவின், தானீஷ் மற்றும் பலரும் தெருவில் விளையாட ஆரம்பித்து விட்டனர்.. தாத்தாவின் பேத்திகள் உட்பட..

…முற்றும் ..

 

எழுதியவர்: 

பூ. கீதா சுந்தர்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 3 Comments

3 Comments

  1. Sakthi bahadur

    யதார்த்தமான படைப்பு சகோதரி கீதா… வாழ்த்துகள்.

  2. இரா.செந்தில்குமார்

    குழந்தைகள் விளையாட்டு தொடர்புடைய முக்கியமான சிறுகதை தோழர். மிக எதார்த்தமாக வந்துள்ளது. தொடர்ந்து எழுதுங்கள் தோழர்.

  3. ராதிகா விஜய் பாபு

    அருமை தோழர் வாழ்த்துககள் சிறுவர் உலகிற்குள் சென்று வந்தது போல் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *