சிறுகதை: சோலையம்மா – கவிதா பிருத்வி

சிறுகதை: சோலையம்மா – கவிதா பிருத்வி



 யம்மா… யம்மா…  என்றேன் கொஞ்சலாய்…
 என்னடா…. என்றாள் அம்மா சிரித்தபடி…
 இது என்ன மரம் மா…
 உடனே அரச மரத்து இலை பறித்து “பீப்பி ” செய்து ஊதி காட்டுவா…
எப்படி அம்மா இதெல்லாம் தெரியும்…
 சின்ன பிள்ளையா இருக்கும்போது “தாத்தா காட்டுல பருத்தி எடுக்கப் போவோம்”டா ,
அங்க, செடி மரத்து கூடதான் கிடப்பேன்.. என்பாள் .
அம்மா அஞ்சு தான் படிச்சிருக்கா…
 ஆனா, எல்லாம் தெரியும் அம்மாவுக்கு…
 காலையில பல் விளக்கிட்டு, கொல்லைப்புறத்தில இருக்கிற செம்பருத்தி பூவ  இரண்டு பிச்சு வாயில போட்டுட்டு ,
நந்தியாவட்டப் பூவ,  நாலு பிச்சி கண்ணு மேல ஒத்து வா…
 புத்தகம் நிறைய படிப்பா…
 இது அதுக்கு நல்லது, இதுக்கு நல்லது ன்னு சொல்லும்போதே, கண் விரிய வியந்து பார்ப்பேன் ,அம்மாவை…
சாகும்வரை நினைவு குறையல அம்மாவுக்கு…
“கண்ணுதான் மங்கலா இருக்கு” உங்களை எல்லாம் பாக்க முடியாம போய்டுமோ.. என்பாள் .
“அவ வாழ்க்கையில் கடைசி  மூணு நாள் தான் , பேசாம கண்மூடி படுத்து கிடந்தா…
” என்ன பண்ற நீ “
சத்தமான குரல் கணவரிடமிருந்து ,
சுதாரித்துதவளாய், “என்னாச்சுங்க”… என்றேன்.
 அடுப்படியில் நின்னுகிட்டு
என்ன யோசனை உனக்கு “கருகின வாடை வருது பாரு” “என்னடா ஆச்சு உனக்கு” பாசமாய் கேட்ட கணவரிடம், ஒன்றுமில்லப்பா “அம்மா நினைப்பு “தான்…
“தெரியும் டா” என்று பரிவான பதிலுக்கு மனம் லேசானது.


காலை நேர வேலை பரபரப்பு… பம்பரமாய் சுழலத்தான் சரியா இருக்கும்…
சமைத்து, சாப்பாடு கேரியரில் எடுத்து வைத்து, கணவரை ஆபிசுக்கு அனுப்பி விட்டு,
“அப்பாடா” என உட்கார்ந்தேன்.
 அம்மா போய் ஆறு மாசமாச்சு….
 எது சமைச்சாலும்,
“இது அம்மாவுக்கு பிடிக்குமே,
” சந்தனமுல்லை அம்மாவுக்கு பிடிக்குமே”
இப்படியே ” மனம் அம்மா பின்னாடியே, ஓயாம ஓடியது நாய்க்குட்டி” போல ….
 யம்மா…
 என்னடா…
அழகுமா நீங்க…
 என்ன கலரு…
“பழைய நடிகை பண்டரிபாய் போல இருக்கேன்னு ,
உங்க அப்பா சொல்லுவார் ” டா என்பாள், வெட்கப்பட்டுக்கொண்டே….
 அம்மா படுக்கையில் கிடக்கும்போது “அழகம்மா” ன்னு, நெத்தியில முத்தம் இட்டு சொன்னப்ப,
“அம்மா அசிங்கமா போயிட்டேன் “டா … என்றாள்.
 இந்த வயசுல, ” இதாம்மா அழகு ” என்ற என்னை கை பிடித்து கொண்டாள், குழந்தையாய்….
கடைசி மூணு நாள் அசைவில்லாம கிடந்த,
 அம்மா கிட்ட போய் தலையைக் கோதியபடி,
“அழகம்மா” ன்னு  நெற்றியில் முத்தமிட்டு,
“சாமி சிலையாட்டம் இருக்கீங்கம்மா” ன்னு  சொன்னப்ப,
 அசைவற்றுக் கிடந்த அவ முகத்தில, அப்படி ஒரு  மலர்ச்சி…
 உயிர் போனதும் கூட
 “பட்டு சேலை கட்டி,”அழகம்மா” வா  படுத்திருந்தா…
 வந்த சனமெல்லாம் கும்பிட்டு தான் போச்சு….


அம்மா… அம்மா…
 வாசலில் குரல் கேட்டு யாரு என்ன வேணும் கேட்டுகிட்டே வாசலுக்குப் போனேன்…
 முக்காடு போட்டபடி ஒரு கிழவி….
 பார்த்தவுடன் பசியாய் தெரிந்த முகம்,
 சோறு போட்டு குழம்பை ஊற்றி கொடுத்தேன்….
ஆசையா சாப்பிட்டு
“நீ நல்லா இருப்ப, உன் பிள்ளை குட்டி எல்லாம் நல்லா இருக்கும்”னு… எங்க அம்மா போலவே வாய்நிறைய வாழ்த்திட்டு போனா,
அந்த கிழவி…
யம்மா…
என்னடா…
 “நா மருதாணி வச்சிவிடவா மா”
ம்… ம்… என்றபடி கை விரித்து காட்டினா….
மருதாணினா கொள்ள பிரியம் அம்மாவுக்கு… படுக்கையில் இருக்கும் போதும், கையில் “மருதாணி வச்சி விட்டு அழகாக இருக்கு மா” என்றேன் …
“போற நேரத்துல இதெல்லாம் எதுக்கு டா, அப்படின்னு சொல்லிட்டு,
கை சிவப்ப பாத்து பாத்து  சந்தோஷப்பட்டா” ….
“செத்தன்னைக்கு அம்மா கையில காசு வச்சு வாங்கும்போது , அவ விரல்ல நா வச்ச மருதாணி போகல”…
அம்மா.. அம்மா..  திரும்பவும் வாசலில் குரல்…
என்னம்மா திரும்ப வந்து இருக்கீங்க… “ஒன்னும் இல்லமா, கட்டிக்க ஒரு சீல தான் இருக்கு, சீல இருந்தா  தரியா மா” சொல்லும்போதே, உள்ளே போய்  “அம்மா சேலைய ரெண்டு கொண்டுவந்து கொடுத்ததும், கண்ணுல தண்ணியோட, அந்த சேலையை நெஞ்சோடு அணச்சுகிச்சு” அந்த கிழவி.. எங்க அம்மாவோட சேல…  “இப்ப எங்க அம்மா இல்ல”ன்னு சொல்லும்போதே தொண்டை அடைத்தது..
 அப்படி சொல்லாதமா “உங்க அம்மா உங்கூடத் தான்  இருப்பா”ன்னு சொல்லிட்டு போச்சு அந்த கிழவி…
 யம்மா…
பூ, செடி, கொடி, மரம், அந்த கிழவி… இப்படி என்னிய சுத்தி இருக்குற எல்லாத்திலும் நீங்க தாம்மா  இருக்கீங்க…
நீங்க சொல்லி எத்தன கடுதாசி நா எழுதிருப்பேன்.. சின்னதுல நா படிக்க எவ்ளோ புத்தகங்க  வாங்கி தருவீங்க..  எழுத்துக்கும், வாசிப்புக்கும் அச்சாணியே நீங்கதாம்மா..
கையில் புத்தகத்தோடு, நினைவில் சுழன்றபடி..
யம்மா.. என்றேன் கொஞ்சலாய்…
என்னடா… என்றாள் அம்மா புகைப்படத்தில் சிரித்தபடி…
               ………………
                               கவிதா பிருத்வி
                                    தஞ்சை.



Show 16 Comments

16 Comments

  1. DHANANCHEZHIYAN M

    வாழ்த்துக்கள் தோழர் அம்மாவின் அன்பு உள்ளம் வெளிப்படுகிறது உங்கள் கதையில்.

    • கவிதா பிருத்வி

      நன்றி தோழர்

      • Neya Puthuraja

        இந்த கதையை படித்து முடிக்கும் போது கண் கலங்காமல் இருக்க முடியாது தோழர்..அத்தனை தத்ரூபமான எழுத்து…ஈடே செய்ய இயலா உறவு அம்மா…இருந்தாலும் மறைந்தாலும் என்றும் நம் நினைவுகளில் “அம்மா”…அம்மாக்கள் எல்லாமே அழகுதான்…பல்வேறு நினைவுகளையும் உணர்ச்சியையும் தூண்டும் நிஜமான கதை சொன்ன உங்களுக்கு சிறப்பு வாழ்த்துகள் தோழர்💐💐💐

        • கவிதா பிருத்வி

          நன்றி தோழர்

  2. சாந்தி சரவணன்

    அம்மாவின் நினைவுகள் நம்மை விட்டு என்றும் அகலாது. அனைத்திலும் அம்மா முகம் தொடர்வதை அருமையாக பதிவு செய்து உள்ளீர்கள் தோழர். வாழ்த்துகள் தோழர்

    • கவிதா பிருத்வி

      நன்றி தோழர்

  3. பூ. கீதா சுந்தர்

    நானும் என் அம்மா பிரிந்த பிறகு இப்படி தான் அவர்கள் நினைவோடு உழலுகிறேன் .. அருமை. வாழ்துதுகள்.

    • கவிதா பிருத்வி

      நன்றி தோழர்

  4. Sakthi bahadur

    குழந்தையின் கொஞ்சல் போன்ற நடை…
    சிறப்பு…. தோழர்…

    • கவிதா பிருத்வி

      நன்றி தோழர்

  5. SubiVijay

    அருமை என் அழகம்மா…
    மனம் தொட்டு பயணிக்கும் நிஜக் கதை இறுதி வரியில் கண்களில் அருவி வரவழைக்க மறக்கவில்லை…

    • கவிதா பிருத்வி

      நன்றி டா

  6. KALAISELVI

    தாயை இழந்து தவிக்கும் அனைவரும் தாயின் மடியில் தலை வைத்து படுத்த உணர்வை வெளிப்படுத்தியுள்ளது இக்கதை. உணர்வுகளை உருக்கமாய் சொல்லியிருக்கிறீர்கள் .வாழ்த்துகள் தோழர்.

    • கவிதா பிருத்வி

      நன்றி தோழர்

  7. அனிதா, புதுக்கோட்டை

    இது கதையல்ல நிஜம். தங்கள் எழுத்துகள் என்று சொல்வதை விட, உணர்வுகள் , கண்களை வியர்க்கச் செய்தது.
    ஒவ்வொருவர் வாழ்விலும் ,” அம்மா ” அழகுதாம்மா. தாயின் அன்புள்ளம் தவழுகிறது தோழர்.
    வீடு தேடி வரும் தாயின் மூலம், புகைப்படத்தில் இருக்கும் தாயை பார்த்து ஆசி பெற்றது உங்கள் நல் உள்ளம் வெளிப்படுகிறது. தொடர்ந்து எழுதுங்கள், என்றும் அன்புடன் அனிதா.

    • கவிதா பிருத்வி

      நன்றி தோழர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *