அந்நிய மண்ணில்
அழகிய சூழலில்
விதைக்காமலே பலவித
விண்ணுயர் மரங்கள்….
எமது வீட்டருகே
எத்தனைத் தீவுகள்
எதுவும் பெறவியலாமல்
எள்ளளவும் தரவியலாமல்!
உதட்டின் இனிமை
உதட்டின் எல்லைவரை
‘புனித சாலையில்’
மயான அமைதி!
எவருமிங்கு உறவிலில்லை
வேண்டாதவரும் எவருமில்லை
எட்டத்தில் நிற்கும்வரை
எல்லாமே அழகுநிலை!
சாதிமத சறுக்கலில்லை
சாக்கடையின் நாற்றமில்லை
மனங்களிலும் மணமில்லை
இணைப்பிலும் அவையில்லை ….
அந்நிய நாட்டின்
எந்திர வாழ்க்கை
உதடும் மனமும்
அந்நியமாய் ஓருடலில்!