அணுக்களின் துடிப்பு….
***********************
அற்பக் கணவனே…
அகண்ட பரப்பில்
அண்ட வெளியில்தான்
பறக்க முடியுமா?
அன்றி
சிறகுகள் மட்டுமே
பறப்பதன் இலக்கணமா?….
கம்பிகளுக்குள்ளே
கட்டப்பட்டிருந்தாலும்
சமையலறைக்குள் மாட்டித்
தவித்தாலும்
மனவானில் சிறகடிக்க
ஈ. பாஸின் தேவையென்ன?
அதனால் கற்பில்(?) படியும்
களங்கமென்ன?
அமைதியை நாட உன்
அனுமதி வேண்டேன்…
அசுரனை ஒழிக்கும்
ஆற்றல் பெறுவேன்…
குடும்பச் சிறையில்
தனிமைச் சோலையில்
என ஒவ்வொரு அசைவிலும்
என் வலிமிகக் கொண்டேன்
வயிற்றில் கொட்ட
வக்கணையாய்க் குவித்துவிட்டு
வாயைத் திறக்க மட்டும்
வாழ்நாள் தடை ஏன்?
எங்கள் அங்க அசைவுகள்
கலை நாட்டியமாய்…
போலிப் புன்னகைகள்
அன்பு வருடல்களாய்…
எம் உதடுகளின்
அதிர்வு மட்டும் ஏன்
உம் காதுகளில் நாராசமாய்?
அட மூடக் கணவர்களே…
ஆழத்தில் அமுங்கியுள்ள
எம் எரிமலைப் பொருமல்கள்
பர்தாவுக்குள் படபடக்கும்
பாழும் மனக் குமுறல்கள்…
சுருவத்தின் கூராணிகளால்
கீறப்படும் மெல்லிதயங்களின்
ஓலங்கள்…
இளையராஜாவின் இனிய
தேனிசையாய் உம் செவிகளில்
இன்னும் எத்தனை காலங்கள்
ஒலிக்க வேண்டும்?
மூடிய வாணலியில் சிக்கி
கொதிக்கும் குழம்புபோல்
தகிக்கும் எம் உளைச்சல்களை
படம்பிடிக்கும் கேமிரா ஏது?
கால நிர்பந்தத்தால்
நம் நினைவுகள்
ஒன்றாகிவிட்டாலும்…
தோலோடு தோல் உரசித்
தோய்ந்து தேய்ந்தாலும்…
காலம் காலமாய் வீட்டுச்
சிறையில் மாய்ந்தாலும்
நானும் நீயும் ஒன்றாக முடியுமா?
அடிமைதானெனினும் நம்
அணுக்கள் வேறு வேறன்றோ…
அந்த அணுக்களின் வெடிப்பில்
அதிரும் உன் ஆணாதிக்கம்…
— கொ.ராமகிருஷ்ணன்,