‘மண் வெட்டி’

கவிதை – 1
அழைத்தபோது ஓடி வந்தான்
அடிவாங்கி அடி கொடுத்தான்
மண்ணைக் கொத்தி விதை விதைப்பான்
மண்டியிட மறுத்துரைப்பான்

அஞ்சிடாமல் உழைத்து வந்தான்
ஆங்கிலேயன் காலத் திலும்!
மண்ணை மட்டும் நம்பியவன்
மாடுபோல உழைப்பைத் தந்தான்!

வந்தோருக்கும் போவோ ருக்கும்
வருத்தமின்றி உணவளித்தான்
இந்த மண்ணில் கிடைத்ததையே
இல்லமெனக் குடிலமைத்தான்!

ஓலை செத்தை கழிகளினால்
வசிக்க நல்ல குடிலமைத்தான்!
இந்த மண்ணில் விளைந்ததைத்தான்
வேகவைத்து உணவு உண்டான்!

இந்தமண்ணில் கிடைத்த நீரும்
இந்தமண்ணில் வீசுங் காற்றும்
இந்தமண்ணின் மனிதருடன்
இந்தமண்ணின் விலங்குடனே;
இந்த மண்ணின் பறவைகளும்
இவன் வாழ்வின் இன்பங்களே!
இவன்தானே இந்த மண்ணின்
இணையற்ற முதல் மகனே!

கோவணமே கீழாடை
கூழ் களியே உணவாகும்;
நண்டு நத்தை மீனின்வகை
நா ருசிக்க உணவாகும்!
மண்ணை வெட்டும் ஆயுதங்கள்
மரஞ் செடியே சீதனங்கள்
படுத்தாலும் நடந்தாலும்
பஞ்சுமெத்தை மண் தரையே!

கருத்த நிறங் கொண்டிருப்பான்
கழனிக் காட்டில் உழைத்திருப்பான்
மண் வெட்டி ஆயுதமே
மதிப்புமிகு நாட்டுக் காரன்!

******************************

கவிதை – 2

வியாபாரிகள்
வித்தியாசமானவர்கள்!

சிந்தும் வியர்வைத்துளி
ஒவ்வொன்றிற்கும்
விலை வைப்பார்கள்!
முதலீட்டுக்கு
வட்டி வைப்பார்கள்!

தூக்குக்கூலி
ஏற்றுக்கூலி
இறக்குக்கூலி
துடைத்தக்கூலி
இடம்… ஆள்… அம்பு…
எல்லாவற்றுக்கும்
கணக்கு வைப்பார்கள்!

சிலர் ஆசையை
சிலர் பேராசையை
சிலர் வறுமையை
வியாபாரத்திற்குள்
வைப்பார்கள்!

வியாபாரிகள்
அவ்வளவு பெரிய
பள்ளத்தில் வீழ்வது….
அரிது…. அரிது….!

நல்லதுதான்…
வீழ்ந்தால்
வியாபாரத்தில்
எழுவது… சிரமம்தான்!
வியாபாரிகள் விபரமானவர்கள்;

வியாபாரத்திற்கு முதலீட்டைவிட
உழைப்பை விட விபரமே ….
பெரிய முதலீடு!
அதனாலே….. வியாபாரிகளே
முடிவு செய்கிறார்கள்;

மக்களின் மனநிலையை!
விவசாயி வேறு….
வியாபாரி வேறு…. !
எளியோர் எவரும்
வியாபாரியாகிவிட
முடியாது…. அதற்கு
பல பலங்கள் வேண்டும்;

பலத்தை பரம்பரை பரம்பரையாக
வைத்துக்கொண்டவரே வியாபாரத்தில்
வீறு நடை போடுகின்றனர்! விவசாயத்திலும்
பரம்பரை  உண்டு!
எளிமையும்
இல்லாமையும்
வறுமையும்…!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *