நிஜத்தினில் சாதித்தேன்
நீ என்
கனவினைக் கலைத்ததால் !
கலைகளில் தேர்ந்தேன்
நீ எனைக்
காலடியில் கிடத்தியதால் !
உரிமைக்குரல் எழுப்பினேன்
நீ என்
உணர்வை உதாசீனப் படுத்தியதால் !
நிமிர்ந்து நின்றேன்
நீ எனை
நிலம் பார்க்கச் சொன்னதால் !
பேச்சாளரானேன்
நீ எனை
மௌனிக்கச் செய்ததால் !
உயர்கல்வி பயின்றேன்
நீ எனை
அடுக்களையில் அடைத்ததால் !
மேடை ஏறினேன்
நீ எனைப்
படியேற விடாததால் !
முன்னேற்றம் அடைந்தேன்
நீ எனைப்
பின்னுக்குத் தள்ளியதால் !
தன்னம்பிக்கை கொண்டேன்
நீ எனைத்
தனித்து விட்டதால் !
தைரியம் கொண்டேன்
நீ எனைத்
தாழ்த்த நினைத்ததால் !
பன்முகத்தன்மை கொண்டேன்
நீ என்
முகவரியை மறைத்ததால் !
சிகரம் தொட துணிந்தேன்
நீ என்
சிறகை ஒடித்ததால் !
சரித்திரம் படைத்தேன்
நீ எனைச்
சதி ஏற்ற துணிந்ததால் !
பேராண்மை கொண்டேன்
நீ என்
பெண்மையைப் பழித்ததால் !
நீ எனை
வார்த்தை உளிகளால்
சிதைக்கச் சிதைக்கச்
சிற்பமானேன்.
பிரியா ஜெயகாந்த்,
சென்னை,
மின்னஞ்சல்: [email protected]
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
அருமையான வரிகள்…எத்தனை இடர்களுக்கு மத்தியிலும் நம்மை நானே செதுக்கிக்கொண்டு முன்னோக்கி நகர வேண்டும் என்பதை அழகிய வரிகளில் கூறியுள்ளது சிறப்பு தோழர்… வாழ்த்துகள்💐💐💐💐
சிறப்பான வரிகள். உண்மையில் பெண்மைக்குள் இருக்கும் பேராண்மை வெளிப்படுகிறது உங்கள் வரிகளில் வாழ்த்துக்கள்
எழுச்சி வரிகள், பெண்மை வீரு கொண்டு எழும் வரிகள், வாழ்த்துகள் தோழர்.
Super
Ella penkalukkum intha
Varikal vazhikaati.