இடையறாது
********************
வட்டிப்பணம் வாங்கிக் குவித்தார்
சொத்துக்களை ஊரெங்கும் நிறுவினார்
அண்ணாக்கயிறை அவிழ்த்து
அவரைப் புதைத்தார்கள்
ஆயிரம் வண்டிகள் நிறைய தங்கம்
ஆயிரம் கூடைகளில் நவமணிகள்
இறந்த பின் அவர்  கூட
எடுத்துச் செல்வாராம்
உப்பாக நீரில் கரைகிறேன்
நிறமாக வானவில்லில் பூக்கிறேன்
ஒற்றை நட்சத்திரமாகி ஜொலிக்கிறேன்
கனவுகளை விற்கிறேன்
கனவுகளை வாங்குகிறேன்
கண்ணீர் தான்  லாபம்
அடித்துச்  செல்லப் படுகிறேன்
ஆறு தன் போக்கில் போகிறது
என்னைப் போல பலர்
நீ அனுபவித்த வேதனை
நான் உணரவில்லை
பிறப்பைத் தரும் உன்னை
உதாசீனம் செய்கிறேன்
விளைநிலங்கள் விசும்புகின்றன
நெல்லென்று கூழாங்கற்களைக்
விழுங்குகின்றன பறவைகள்
அனல்காற்று அலறியபடி ஓடுகிறது
பட்டாசு ஆலை வெடிக்கிறது
மனித உறுப்புகள் பறக்கின்றன
உருப்படியாய் எதுவும் அகப்படவில்லை
ஆதி அல்லாடுகிறது
அந்தம் திண்டாடுகிறது
நாதியின்றி உலகம் உருண்டோடுது
காளி எத்தனை காளிகளடா
ரணகாளி பத்ரகாளி வனக்காளி சுடுகாட்டுக்காளி
பெண் அழிய
வேடிக்கைப் பார்க்கின்றன
அது நடக்கக் கூடாது
இது நடக்கணும்
இது நடக்கக் கூடாது
அது நடக்கணும்
மனசுக்குப் பசி அதிகம்.
மீதமான சொல்
*******************
கவிதை இசையைத் தேடுகிறது
இசை கவிதையைத் தேடுகிறது
இரண்டும் குரலைத் தேடுகிறது
நவீனகாலத்தில் பேயாவது பிசாசாவது
கேலிசெய்து சிரிக்கின்றன சினிமாக்கள்
பேய்ப்படங்களின் கோரப்பிடியில் ஜனங்கள்
மெய்யைத் தேடும் மெய்
பொய் தினம் தினம்
 தன்னைப் புதுப்பிக்கும்
கைகழுவிப் போகும் யாவும்
வனாந்தரக் காற்று போல சுதந்தரமானவன்
நீரோடை போன்று குளுந்த மனசுடையவன்
பறவையாய் சோற்றுக்கு பறந்தலைகிறான்
உண்மை அன்பு கோபப்படும்
உசுரையே அர்ப்பணிக்கும்
ஊறு விளைவிக்காது
யாருக்கு காவல்?
யாரைக் காப்பாற்றுகிறீர்கள்?
சோறா? கூலிக்கான தொண்டூழியமா?
வேகம் வேகம் வேகம்
அதிவேகம் அசுரவேகம்
விபத்து ஆபத்து சிதறிப்போனது பஸ்.
புல்லாய் வாழ்கிறாய்
பூச்சியாய் திரிகிறாய்
கல்லாய்ச் சமையும் சாபம் பெறுவாய்.
தண்ணீரின் நிறம் புத்தொளியாய் மின்னும்
கனிவின் பழிப்பில் மழையெனச் சொரியும்
கவண் தெறிப்பில் சில்லுகளாய்ச் சிதறும்.
வசந்ததீபன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *