அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க
அக்கா சாப்பிட கூப்பிட்டாங்க
யாருக்கும் பதில் சொல்லாமல்
தலைகுனிந்து இருக்கிறான்.
கையில் இருக்கும் செல்போனில்
கவனம் வைத்து விளையாட்டில்
விறுவிறுப்பாய் ஆடுகிறான்
வெற்றிக் களிப்பில் ஓடுகிறான்.
வாடா கண்ணா சாப்பிட
அம்மா வந்து கூப்பிட்டாங்க
இரும்மா வர்றேன் என்றவன்
தொடர்ந்து விளையாடுகிறான்.
நேரம் ஆகுது வாடா கண்ணா
சாப்பிட்டு போய் விளையாடு
அம்மா கூப்பிட்டும் போகாமல்
அடம் பிடித்து ஆடுகிறான்.
கவலைப் பட்ட அம்மாவோ
கையில் இருந்த செல்போனைப்
பிடுங்கி தூரம் எறிந்தாள்
கண்ணன் புரண்டு அழுதான்.
ஆடிகிட்டே சாப்பிடு வாடா
அக்கா சமாதானம் செய்தாள்
அழுகை நிறுத்திய கண்ணன்
தட்டில் வைத்ததை உண்டான்.