அகராதியில் அழிந்தது பெண் சிசுக் கொலை
அகழ்வாராய்ச்சியில் பெண் நடுகற்கள் எதிர்காலத்தில் கிடைக்காது
திரெளபதியும், சீதையும் வருங்கால இதிகாசத்தில் இடம் பெறமாட்டார்கள்
கிருஷ்ணனுக்கும் ஆஞ்சநேயருக்கும் இனி வேலையில்லை
வால்மீகியும், கம்பனும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காத்திருப்பர்
ஆசிபா கொடுமை இனி புவியில் இல்லை
மழலையர் மலராக மகிழ்ந்து புன்னகையுடன் மலர்வார்கள்
மனுதர்மம் மருவி மாந்தர் தர்மம் ஆனது
பாட சாலை மானுடம் பயிலும் பொதுவுடமையானது
வருமானம் ஈட்டி, சுயசிந்தனையோடு வளர்ந்தாள் பெண்
விமர்சனங்களை விதைகளாக்கி விருட்சமாக வளர்ந்தாள் பெண்
பெண்கள் சுதந்திரமாக அச்சமின்றி பாதுகாப்பாக பயணித்தார்கள்
பெண் உயர்வே குடும்ப உயர்வென சமூகம் உணர்ந்தது
நாட்டை திறம்பட ஆளுமையுடன் ஆண்டாள் பெண்
இறக்கை முளைத்து வானத்தில் பறந்தாள் பெண்
புனிதபடுத்தி உயிரற்ற சிலையாக்கும் சமூகம் மடிந்தது
உயிருள்ள மனுஷியாக பார்க்கும் சமூகம் உருவானது.
பாரதியார், பெரியார் கண்ட கனவு மெய்ப்பட்டது
பூமாதேவி இன்று பிரபஞ்ச தேவி ஆனாள்
தடைகள் தகர்ந்து ஏற்றங்கள் வானமெட்டியது
இனி வரும் காலமெல்லாம் கொண்டாட்டம் தான்
இறைவியே உனக்கு நிகர் இனி யாருமில்லை
சிலாகித்து பிரபஞ்சத்தில் மகிழ்ந்து வாழ் மாந்தரே!
வையத்தை ஆண்டு வளமுடன் நீவிர் வாழ்க!