கணத்திலிருந்து
ஒன்றும் அறியா இவ்வுடல்
வாழ்ந்து தழைத்திட
எத்தனை முயற்சிகள் இங்கு… ?
பொழுதுகள் யாவிலும்
கற்றுக்கொண்டே…
எதிர்படும்
ஒவ்வொருவரிடத்தும் அநேகம் அறிந்துணர்ந்து…
வெளிப்படையாயும்
சூட்சுமமாயும்
நிறைந்து கிடக்கும்
கற்றலின் ஊற்றுகளை
உற்று கவனித்தாலே போதும் …
உருமாறுவோம் நாம்
நம்மையும் அறியாமலே….
ஆழ உணர்த்தும்
வாழ்வுப் பயணத்தில்..
இயற்கையின்
அழகிய புரிதலில்…
எத்தனையோ விடயங்களை
கடந்து முன்னேறினாலும்
கற்றலை பகிர்வது
இன்னொரு கலை…
யாதொன்றையும்
எளிதாய் உணர்த்தும்
ஆசான்களை …
ஒவ்வொரு கட்டத்திலும்
அசைபோட வைக்கிறது
அழகிய வாழ்க்கை…
புத்தக சுமைகளோடு
பள்ளி சென்ற முதல் நாள்
உறைந்து கிடக்கிறது
நினைவுகளில்…
அப்படியே…
பொத்தி வளர்த்த பெற்றோர்
கேள்விகளற்று
நம்மை விட்டுவந்தனர்
ஆசிரியரை நம்பி…
சுமைகளை
கீழே வைத்துவிட்டு
உற்று கவனித்தேன்…
தெரிந்தார் அவரே
பெரிய புத்தகமாய்…
அப்புத்தகத்திடம்
கற்க துவங்கி
ஓடிவிட்டன வருடங்கள்…
கால ஓட்டத்தில்
கற்றது ஏராளம்…
வாழும் காலம் யாவும்..
வாசிக்க வேண்டிய பக்கங்கள்
இன்னும்
மிச்சம் இருக்கின்றன…
என்றுமே
நழுவ விடாது
கரங்களில் இறுகப் பொதித்து
பார்வை ஊன்றி…
பக்கங்களை புரட்டியபடியே
தொடர்கிறது
கற்றலின் பயணம்
இனிதாய்…
தொடரும் இப்பயணம்
பிறர் வாசிக்க
இயல்பாய்
மாற்றிக்
கொண்டிருக்கிறது
என்னையும்…
இன்னொரு புத்தகமாய்…