இப்படி ஒரு ஞாயிறு.
சாளரத்தின் விளிம்புகளை மெல்ல
திறந்தபபடி எட்டி பார்க்கிறது காற்று.
என் மேல் படரலாமா
வேண்டாமா என்று?!
சிட்டுக் குருவிகள் ஆசையாய் வந்து
மழலை மொழி பேசுகிறது.
தென்றலை தழுவியப்படி சாளரத்தை திறக்கிறேன்.
பட்டும் படாமலும்,
மஞ்சள் நிற கதிர்களை வீசியபடி
ஆதவன் தயாராகிறான்.
வாசலில் பூத்த ஒற்றை ரோஜாவின் இதழ்கள், என்னை பார்த்ததும் புன்னகையை வீசுகிறது.
சோம்பலை முறிக்க
மனமில்லாமல் காலார நடக்கிறேன்.
செய்தித்தாளின் கொட்டை எழுத்துகள்
என் கண்களை கொள்ளையிட,
மடிப்பு குறையாத சேலையாய்,
என் விரல்களில் கோர்த்து கொள்கிறேன்.
மேசையில் காத்து கிடக்கிறது,
அளவான இனிப்பில்
நுரை தள்ளிக்கொண்டு,
இளஞ்சூட்டில் இதமாய்
இதழ் சுவைக்க!,குளம்பி.
இன்றைய குக்கர் சத்தம் இளையராஜாவின் இன்னிசையாய் இனிக்கிறது!
நான் சமைக்காததால்.!
சாலையில் ஓடி திரியும் குழந்தைகள்,
இருக்கை இல்லா வண்டியில்
சுற்றி திரியும் இளவட்டங்கள்,
நடைப்பயிற்சிக்கு தயாராகும் நடுத்தரங்கள், என
கண்களில் விரிகிறது
விடியற்காலை.
இட்டலி, தோசை,பூரி,
இடியப்பம், பொங்கல்
புட்டு என எதை ருசிப்பதென தெரியாமல் நாவில்
நீரொழுக, திக்குமுக்காடுகிறேன் “ரிமோட்டை “என் கைகள் ஏற்றிருந்தது பத்மபூஷன்
விருதிற் கிணையாய் இருக்கிறது.
மீனின் தலையை முறிக்கவில்லை!
நண்டின் கால்களை
ஒடிக்கவில்லை.!
கோழி இறக்கைகளை பறிக்கவில்லை.
எதுவும் செய்யாமல்
அவைகளாகவே என்
மேசையை அழகு செய்கின்றன.
உண்ட மயக்கம்
மெத்தைக்கு வழிகாட்ட,
குளிரூட்டப்பட்டு காத்து கொண்டிருக்கிறது
வெப்பத்தை விழுங்கிய ” A. C. ”
வயிற்றுக்குள் உயிரினங்கள் நாட்டியமாட, மெத்தை
எனதானது.
மாலையில் விழித்த
விழிகளை வரவேற்க,
குட்டி சமோசாக்களும்,
வெங்காய பகோடாக்களும்
வரிசை கட்டுகின்றன.
தேயிலையின் சுவைக்கு இவை அனைத்தும்
பக்கவாத்தியம் வாசிக்கின்றன.
இரவுக்கு குடை பிடித்து விட்டது இருட்டு.
கெட்டியாகி போன
குழம்பிற்கு அணை
கட்டுகிறேன் ஊத்தப்பம் வைத்து.!
தரிசு நிலத்தில் பாய்ந்த நீராய்,
கறி குழம்பை உறிந்து கொண்டு தாகம் தீராமல் என்னை பார்க்கிறது. ”
இதோ ஊற்றாய் பெருக்கெடுக்கிறது
“குழம்பு “.
ஊறிய ஊத்தப்பம்
நாக்கை தொடாமலே
உள்ளே போகிறது.
உறக்கமும் போட்டியில் கலந்து கொள்ள நெடுநேரமாய் காத்திருக்க,
போட்டியில் பங்கேற்காமலே
,சிறப்பு பரிசு “வழங்கி
அணைத்து கொண்டேன்.
இப்படி ஒரு ஞாயிறு வேண்டும்.
கவிஞர் இரா. கலையரசி

