குடல் கவ்விக் கொள்ளும்.
இதயம் படபடத்துக் கிடக்கும்..
நாபிகள் தன்னியல்பில் பதைக்கும்..
புத்திர ஸ்தானம் உள்ளிழுத்துப் புடைக்கும்
ஊர்வன
பறப்பன
தாவுவன
தரை வாழ்வன
என ஒவ்வொன்றும் குலவிக் கொட்டித் தீர்க்கும்..
உதர விதானம் உணர்வற்றுப் பம்மி போகும்
சப்த நாடிகளும் ஒடுங்கிப் போகும்.
விழிகள் அனிச்சையாய் தாரை வார்க்கும்..
உதடுகள் ஒட்டிக் கொள்ளும்.
ரோமம் ஒன்றும் அடங்க மறுக்கும்.
குழிக்குள்ளிருந்து புறப்படும் சொல்லொன்றும்
தாயிழந்து தறி கெட்ட பிள்ளை போல்
தத்தளிக்கும்..
துவக்க வார்த்தையும் துலங்காது பரிதவிக்கும்..
முடிக்கும் முன்னம் வேதனை
வியர்வையில் உமிழ்ந்தும்
நாவின் நீரில் உள்ளனுப்பியும்
உள்ளத்தைத் தேற்றும்..
எதிர்சாரியின் முகாந்திரம் ஆண்டான் போல் அச்சுறுத்தும்..
பூமி பிளந்து விழுங்கிக் கொள்ளும்
பேரவா உண்டு பண்ணும்..
இத்தனைக்குப் பிறகும்
கரம் மட்டுமே தன்னியல்பில் உடல் விட்டு உயர எத்தனிக்கும்…
பாத்திரம் நீட்டியபடியே..