கவிதை: கடையெல்லாம் முதலாகும் – கோவி.பால.முருகு

கவிதை: கடையெல்லாம் முதலாகும் – கோவி.பால.முருகு

வான்கோழி ஆட்டமிங்கே வர்ணனைக்கு உள்ளாகும்
வான்முகிலின் தோற்றங்கள் வண்ணமயில் காலொடிக்கும்!
தேன்போன்ற குரலென்று காகத்தின் புகழ்பாடும்
தேள்கொட்டும் வலியாகிக் குயிலின்நல் குரலிடிக்கும்!
மான்விழிகள் மட்டமென்று ஆந்தைவிழி இழித்துரைக்கும்
மடவன்ன நடையிங்கே வாத்துக்கு இணையாகும்!
ஏனென்று கேட்காதீர் எல்லாமே மாற்றந்தான்
ஏற்றமிலான் மூளையிலே கடையெல்லாம் முதலாகும்!

சாதியால் அரசியல்செய் சதிகாரக் கூட்டமங்கே
சாத்திர மனுதர்மச் சூத்திரத்தின் ஆட்டமங்கே!
வீதியில் மதவெறிப் பேயாட்டக் கூட்டமங்கே !
விளங்காத மக்களெல்லாம் விழச்செயும் வலையுமங்கே!
மோதியே அழிந்துபோகும் மூடர்கள் கூட்டமங்கே!
முறையற்ற செயலால் நாடுகெட்டிட நாடுமங்கே!
கோதில்லா குவலயத்தில் கூவுகின்ற மதவெறியை
கூடிநின்று அழித்திடவே கூடிடுவோம் நாமங்கே!

படித்தவர் கூடயிங்கே பயனற்ற நெடுமரங்கள்
பண்பிலான் காலடியில் பயனுள்ள சாமரங்கள்!
துடித்திடும் உளங்கண்டும் துவளாத கல்மரங்கள்
துட்டனின் காலடியில் துவண்டிட்ட பாய்மரங்கள்!
மடித்தனம் நிறம்பவுள்ள மடையனின் கைமரங்கள்
மண்டியிட்டே வாழ்வதற்குப் பிறந்திட்ட முள்மரங்கள்!
பிடித்ததன் மானத்தைப் பறக்கவிட்ட பஞ்சுமரம்
பிண்டத்தை வளர்ப்பதற்கே பிறந்திட்ட ஒதியமரம்!

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *